(Reading time: 12 - 24 minutes)

03. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

"மேடம்", என்றழைத்த மாலாவின் குரலில் உலகுக்கு வந்த சாரதா,

"என்னம்மா, என்ன சொன்னே வசந்த பைரவியா..", என்று மீண்டும் கேட்டாள்.

"ஆமாம் மேடம் அந்த ராகத்தில் ஏதோ ஒரு வித ஏக்கமும், ஒரு வித யாசிப்பும் இருப்பது போலத் தோன்றுகிறது எனக்கு..அதனால் தான் அதை செலெக்ட் செய்தேன்..எப்படி இருக்கு என் செலெக்ஷன்?", என்று கேட்டாள் மாலா.

vasantha bairavi

"ரொம்ப வித்யாசமான காம்பினேஷன் அந்த ராகம்.. வசந்தா ராகமும் பைரவியும் கலந்தது.. என் மனதுக்குப் பிடித்த ராகமும் அதுவே..அதனால் தான் சட்டென்று பேச்சு வரலை எனக்கு..சில சமயம் நான் அந்த ராகத்தை என் வாழ்வில் சில மறக்க முடியா நேரங்களில் என் மனதை ஒருநிலைப் படுத்திக் கொள்ள பாடுவேன்..நிச்சயமாய் அதில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது..",

"ஆமாம் மேடம் எனக்கு கூட அப்படி தான் தோன்றும்.. சரி எனக்கு அதில் ரிசர்ச் செய்ய உதவுவீர்களா?"

"நிச்சயமாய் கண்ணா..எனக்கு பிடித்ததை செய்ய நீ கேட்கத்தான் வேண்டுமா?..கட்டாயம் என்னால் ஆன உதவியை செய்வேன், உனக்கு தெரியுமோ என் ஒரே மகனுக்கு இந்த ராகத்தின் மேல் இருந்த அபிமானத்தால் தான் வசந்த் என்று பேர் கூட வைத்திருக்கிறேன்", என்றாள்.

"நல்லது மேடம்.. எனக்கும் இப்போ ஒரு டென்ஷன் விட்டுவிட்டது.. நிச்சயம் நான் புரோஜெக்டை நல்லா முடிப்பேன்னு தைரியம் வந்துடுத்து", என்றாள் மாலா.

அடுத்த இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை மாணவிகளுக்கு.. ஆளாளுக்கு அவர்களுக்கு வேண்டிய கீர்த்தனங்கள், அதற்குரிய ராக இலக்கணம் , நொடேஷன்ஸ், ப்ருகா என்று பேச்சும் பாட்டுமாய் கழிந்தது.

வாசலில் தொண்டையை கனைக்கும் சத்தம் கேட்டு வெளியே பார்த்த சாரதாவிற்கு, அங்கே ராம மூர்த்தி ருத்ர மூர்த்தியாய் நின்றிருப்பது தெரிந்தது.

"சரிம்மா பொண்களா..அப்போ நாளைக்கும் வரேளா?..இல்லை நீங்களே சொல்லுங்கோ..எப்படி உங்களுக்கு கிளாஸ் வேணும்னு.."

"நாங்க டெய்லி வரோம் மேடம்.. இப்போ எங்களுக்கு ஸ்டடி ஹாலிடேஸ்தான்.. அடுத்த ரெண்டு மாசமும் எங்களுக்கு அவ்வளவு பிரெஷர் இருக்காது.. அப்புறம் மேடம்.. இந்த ஃபீஸ் பத்தியெல்லாம்.. நீங்க இன்னமும் சொல்லலையே?", என்றாள் கலா.

"நான் அதிகமா இந்த மாதிரி ரிசர்ச்சு வொர்குகெல்லாம் கிளாஸ் எடுத்தது கிடையாது..அதனாலே நீங்களே டிஸ்கஸ் பண்ணி எவ்வளவுன்னு சொல்லுங்கோ..அது போதும் நேக்கு,,", என்று கூறி தம்பூராவை உறையிலிட்டு எடுத்து வைத்தாள்.

"சரி மேடம் நாங்க அப்போ நாளைக்கு வர்ரப்போ பேசிட்டு உங்களுக்கு சொல்லறோம்.. நாங்க போயிட்டு நாளைக்கு வரோம்", என்று கூறி விடை பெற்றனர்.

"இதோ வந்துட்டேன்னா.. சாரி ஒரு பத்து நிமிஷம் அதிகமாயிடுத்து இன்னிக்கு..இதோ இலையை போட்டுடறேன்.. வாங்கோ.", என்று கணவரை பேசவிடாமல் மள மள வென்று கூடத்துக்குள் சென்று கிச்சனில் மறைந்தாள் சாரதா.

டைனிங் டேபிளில் அமர்ந்தவர் ஒன்றும் பேசாமல் அவள் பரிமாறி முடிக்கும் வரை காத்திருந்தார்.,பின்னர், "சாரு நீ எப்போ மகாராணியானே.. அதுவும் ஃபீஸ் பத்தி பேசக் கூட வேணாமுன்னு சொல்லற அளவுக்கு..", என்று நிஷ்டூரமாய் கேட்டவரை பார்த்த சாரதா,

"ஏன்னா அந்த கொழந்தைகள் எல்லாரும் இப்போ தான் படிச்சுண்டு இருக்கா.. நானும் இந்த மாதிரி கிளாஸ்லாம் அதிகமா எடுத்தது கிடையாது.. ஏதோ குழந்தைகள், பெண்கள் பெரியவான்னு.. சங்கீதம் வாரம் ஒருத்தருக்கு ரெண்டு கிளாஸ்னு எடுத்துட்டு..ஒரு கிளாஸ்க்கு இவ்வளவுன்னு வாங்கறேன்..மாசம் எட்டு கிளாஸ் ஒருத்தருக்கு..அப்படி வாங்கறேன்.. இவாள்ளாம் டெய்லி ஒரு மாசத்துக்கு வரப்போறா.. அவா கிட்டே போய் நான் ஒரு கிளாசுக்கு வாங்கற மாதிரி தினமும் இருனூறு ரூபா கேக்க முடியுமா?..அது நன்னாவா இருக்கும்..அது தவிர நீங்க எப்பத்திலேந்து இப்படி கணக்கு பார்க்க ஆரம்பிச்சேள்?".

"ஒ..அவ்வளவு பெரிய மனுஷியாயிட்டயா நீ.. நோக்கு தெரியாதுன்னா.. நான் அங்கே தானே இருந்தேன்.. என் கிட்ட கேக்கறது தானே.. இல்லேன்னா அவா கிட்ட நேரே சொல்ல வேண்டியதுதானே என் ஹஸ்பண்ட் கிட்ட ஃபீஸ் பத்தி பேசிக்கோங்கோன்னு.. கார்த்தாலே எங்கம்மா பத்தி பேசினியே ஏன் உன்னை வேலைக்கு போக விடலைன்னு..நீ இப்படி தானா பெரியத்தனம் பண்ணுவேன்னு தானோ என்னமோ உன்னை உத்யோகத்துக்கு அனுப்பலை.."

"ஏன்னா நீங்க கொஞ்சம் யோசிங்கோ.. நான் என்ன பண்ண முடியும்.."

"நீ தான் சாரு யோசிக்கனும்.. இன்னமும் நம்ம பிள்ளை செட்டில் ஆகலை.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலை.. இதெல்லாம் இருக்க ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு பத்தாயிரம்னு நீ சொல்லியிருந்தா சொளையா அறுபதாயிரம் வந்துருக்கும்.. இப்போ அதுகள் என்ன யோசிக்கறதோ அதை குடுக்க போறதுகள்.. ஏதோ ஆயிரம் ரெண்டாயிரம்னு குடுத்துட்டு நன்னா உன்னை சக்கையா பிழிஞ்சு சாரெடுத்துண்டு போகப் போறா பாரு.", என்று கோபமாய் வார்த்தைகளை துப்பினார்.

"அப்படில்லாம் பண்ணமாட்டான்னா..பகவான் நம்மை கை விட மாட்டான்..", என்று அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு..

"அது சரி நீங்க போன காரியம் என்னாச்சு.. காயா பழமா?"

"ஜாதகம் நன்னா பொருந்தி வரதுன்னு ஜோசியர் சொல்லிட்டார்.. மேலும் மஹதிக்கு கல்யாண யோகம் வந்துடுத்து.. இன்னமும் ரெண்டே மாசத்துலே நாம எதிர் பாக்காத மாதிரி ராஜாவாட்டம் ஒருத்தன் வந்து கல்யாணம் பண்ணிப்பான்னு சொல்லியிருக்கார்.. இந்த டாக்டர் பையனும் அவனே தானே அவளை பிடிச்சுருக்குன்னு அவா அம்மாவை அனுப்பிச்சான் ஜாதகத்தோட..பார்ப்போம்..இப்போ அவாளை மொறைப்படி பொண் பார்க்க கூப்பிடலாம்..நீ என்ன சொல்லறே?", என்று பொறுப்பான தந்தையாக கேட்டார்.

"நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு..அன்னிக்கே அவா அம்மா ஜாதகம் கொடுக்கறச்சேயே நம்மை மேலேயும் கீழேயும் பார்த்து வச்சா.. போதாததுக்கு இந்த வீட்டையும் அலசி ஆராஞ்சுட்டா.. இன்னமும் பெரிசா ஏதோ எதிர் பார்ப்பாளோன்னு எனக்கு தோனறது...அப்புறம் நான் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..நம்ம மாடியிலே குடியிருக்கறவா இந்த மாசத்தோட காலி பண்ணறாளாம், அவா தங்க பிள்ளையோட பெங்களூருவுக்கு போறாளாம்..அதனாலே அடுத்த மாசம் ஒன்னாம் தேதி வாக்கிலே அவா கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுத்துடுங்கோன்னு கேக்கறா.."என்று இழுத்தவளை பார்த்தவர்,

"அதானே பார்த்தேன்.. ஒரு மாசமானா நாம நிம்மதியா கூழோ கஞ்சியோ குடிச்சோன்னு இருந்துருக்கா?..இப்போ இவா கொடுத்த பிஸாத்து அட்வான்ஸ் பணத்தை வேற ரெடி பண்ணனும்.. எனக்கு தலையை பிச்சிக்கலாம் போல இருக்கு.. அடுத்தாப்பல யாராவது வந்தா தான் உடனே குடுக்க முடியும்னு அவா கிட்ட சொல்லிடு..", என்று அவளையே அந்த வேலையை பொறுப்பேற்க சொல்லி கை கழுவினார் ராம மூர்த்தி..

சாரதாவிற்கு இப்போது நிஜமாகவே தலையை சுற்றியது..'அம்பதாயிரம் ரூபாய் கொடுக்கனும்.. ஏதோ அந்த காலத்துலே அவாளுக்கு கொறஞ்ச வாடகைக்கு கொடுத்து விட்டோம்.. இப்போ காலி செய்தால் மாடி போர்ஷனை நன்றாய் வெள்ளையடித்து சரி செய்து விட்டால் மாசம் குறைந்தது இருபதாயிரமாவது வரும்.. இந்த ஏரியா அப்படி..ஆனால் கையில் சுத்தமாக ஒன்னும் இல்லை..கடவுளே இந்த பெண்கள் ஏதாவது அட்வாஸ் கொடுத்தா நன்னா இருக்கும்.. இல்லையா உடனே வேறு யாராவது வந்தா அட்வான்ஸை கை மாத்தி விட்டுடலாம்', என்று மனது கணக்கிட்டவாறு உட்கார்ந்திருந்தாள்.

தியம் மூன்று மணி வாக்கில் வீட்டிற்குள் நுழைந்தாள் மஹதி எனும் இருபத்தி எட்டு வயது சந்தன சிற்பம்..அந்த வீட்டின் புதையலும் கூட.. திருத்தமான முகத்துடன் ஒப்பனை அதிகம் தேவைப்படாத முகமும் கூட.. ஐந்தறை அடி உயரத்தில் நிகு நிகு வென்று வெண்ணை மாதிரி சருமத்துடன் பார்க்க பளிச்சென்று இருந்தாள்.

"என்னம்மா நான் வந்தது கூட தெரியாம இப்படி உக்காந்திருக்கே?.. மூஞ்சியெல்லாம் ஏன் இப்படி சோர்ந்து கிடக்கு..?", என்று கேட்டவாறே செருப்பை கழட்டி அதற்கென்று வராந்தாவில் இருந்த ஸ்டாண்டில் வைத்தவள், அம்மாவின் எதிரே வந்து தரையில் அமர்ந்து அவளை சற்று உலுக்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.