(Reading time: 10 - 19 minutes)

04. ஐந்து - பார்த்தி கண்ணன்

ரைமட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்தில் மெல்லிய இருள், அடர்ந்த மேகக் கூட்டங்களினூடே புகுந்து அந்த மலைக்குன்றின் மேல் விழத் தொடங்கியிருந்தது. மேற்கே மறையத் துவங்கியிருந்த சூரியன் அந்நாளுக்கான இறுதி கொஞ்சம் ஒளிக்கற்றைகளை ஆரஞ்சு நிறத்தில் தூவிக்கொண்டிருக்க, அரவிந்த் விரல் நீட்டிய திசையில் அஞ்சலி பார்த்துக்கொண்டிருந்தாள். மலையின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தனர். கண் முன்னே அகன்று .ஆழ்ந்திருக்கும் வண்ண மலர்களாலும், பச்சை மரங்களாலும் நிறைந்திருந்த அந்த பள்ளத்தாக்கும், எதிரே உயர்ந்து கம்பீரமாய் நிற்கும் இன்னொரு மலைச்சிகரமும், அதன் உச்சியிலிருந்து ஓசையின்றி கொட்டிக்கொண்டிருந்த சிறு அருவியும், அதன் பின்னணியில் மறைந்து கொண்டிருந்த சூரியனும், லேசாய் நடுங்கவைக்கும் குளிர் காற்றும், இவர்களை சொக்கவைத்து திகைத்துப்போய் நிற்கச்செய்திருந்தன.

எதுவும் பேசாமலேயே சில கணங்கள் கழிந்தன. இறுதியாய் மௌனத்தைக் கலைத்தான் அரவிந்த்.

“இதான் கடவுள்..இந்த அழகு,இந்த இயற்கை,,இந்த இடத்துக்கே தனியா ஒரு உயிர் இருக்குற மாதிரி இருக்கு.... இது நிஜமாவே ஒரு out of the world experience. இங்கயே பிறக்கணும்,இங்கயே வாழ்ந்து,இங்கயே செத்துப்போயிடனும்"

ainthu

"ஆமா..இந்த நிமிஷம் இந்த உலகத்துல நம்மள தவிர வேற யாருமே இல்லைங்கற மாதிரி எனக்கு தோணுது”.

சில அடிகள் முன்னே சென்று இரு கைகளையும் விரித்து அந்த இயற்கையின் அற்புத அழகை கண்மூடி ரசித்தாள். அவள் பின்னே சென்று இவனும் அவள் கைகளைப் பற்றி அவளைப் போலவே கண்மூடி நின்றான். அப்படியே சிலை போல் நின்றுவிட்டார்கள்.

“இங்க பார்ரா ..டைடானிக் லைவ் ஷோ" என்று காரில் சென்ற எவனோ கமெண்ட் அடித்ததைக்கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால் அந்த கார் எழுப்பிய சத்தத்தில் அங்கே நிலவிய அமைதி கலைந்தது.

லேசான பெருமூச்சுடன் அந்த இடத்தை விட்டு நகரப்போகும் ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தான் அரவிந்த். அஞ்சலி பின்தொடர்ந்தாள்.

“ஹேய்,,எனக்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆகுது இப்போ..ஒரு ஐடியா..” என்றான்.

“என்ன?”

“நமக்கு கல்யாணம் ஆனதும்,நான் வேலைய விடப்போறேன்"

“என்ன? வேலைய விடப்போறியா? என்ன திடீர்னு?” ஆச்சர்யத்துடன் கேட்டாள் அஞ்சலி.

“நான் உன்கிட்ட அடிக்கடி சொல்லுவேனே..வாழ்க்கை கொஞ்ச நாள் தான். அத நமக்காக வாழணும்னு. இங்க வந்ததுக்கு அப்புறம்,இப்போ,அந்த எண்ணம் இன்னும் ஸ்ட்ராங் ஆயிடுச்சு. எங்கேயோ ஒரு ஊர்ல, எவனோ ஒருத்தனுக்காக, அவன் தர்ற கொஞ்சம் காசுக்காக, இவ்ளோ அற்புதமான வாழ்க்கை வீண் பண்ணிட்டு இருக்கோம். போதும்..இங்க வந்து, என்ன தொழில் செய்ய முடியுமோ அத செஞ்சு, அதுல கொஞ்சமா சம்பாதிச்சாலும் பரவாயில்ல..ஒவ்வொரு நாளும் சந்தோசமா வாழலாம்..நம்ம வாழ்க்கைய நமக்காக வாழலாம்.என்ன சொல்ற?”என்று அவளின் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

“உனக்கு அது தானே வேணும்?” அவள் எதிர்க்கேள்வியை வைத்தாள்.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

“ஆமா"

“அப்போ எனக்கும் அது தான் வேணும்" என்று சொல்லி புன்னகைத்தாள்.

“தேங்க்ஸ்" என்று சொல்லி அவளைத் தன பக்கவாட்டில் அணைத்துக்கொண்டே வண்டியை நோக்கி நடந்தான்.

அவள் வண்டியில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தாள்.

“அஞ்சலி..ஒரு நிமிஷம். இந்த இடத்துக்கு மறுபடியும் எப்போ வருவோம்னு தெரியாது. ஒரு போட்டோ எடுத்துகுவோமா?”

“ஹ்ம்ம்..ஒகே..ஆனா ஒரே போட்டோ தான். ரொம்ப லேட் ஆகுது..மழை வேற வரும் போல"

“சரி வா" என்று சொல்லிவிட்டு அந்த விளிம்பை நோக்கி ஓடினான்.

வர்கள் இருக்கும் அந்த இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு இன்னோவா கார் அந்த குறுகிய மலைப்பாதையில் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அதனுள்ளே காதைப்பிளக்கும் அளவுக்கு இசை ஒலித்துக்கொண்டிருந்தது.

"ஆபத்தான பகுதி,கவனமாகச் செல்லவும்" என்ற அறிவிப்புப் பதாகையை அலட்சியமாகக் கடந்தது அந்த கார்.

“வனவிலங்குகள் நடமாடும் பகுதி, ஒலி எழுப்பாதீர்" , கதறுவது போன்ற  ஹார்ன் ஒலியுடன் அதைக் கடந்தது.

“வளைவில் முந்தாதீர்" - வளைவில் மற்ற வண்டிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு சென்றது.

“பிளாஸ்டிக்,சிகரெட் பயன்படுத்தாதீர்"- காரிலிருந்து பெரிய பிளாஸ்டிக் பைகள் வெளியே வந்து விழுந்தன.   அதிலிருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. பாதி எரிந்து, லேசாக புகைந்துகொண்டிருந்த சிகரெட் துண்டுகளும் அதிலிருந்தன.

அந்த காரில் ஐந்து இளைஞர்கள் இருந்தனர். மூன்று ஆண்கள்,இரண்டு பெண்கள். காரை ஒட்டிக்கொண்டிருந்தவன் பெயர் வினோத். அருகில் சாரா, பின்னிருக்கையில் நித்யா,முகுந்த் மற்றும் ஜேம்ஸ். நித்யா தவிர மற்ற அனைவர் கையிலும் பீர் பாட்டிலும்,சிகரெட்டும் இருந்தது.

“இப்போ அந்த பைக்காரனுக்கு ஒரு ஜெர்க் குடுடா" என்றாள் சாரா முன்னால் சென்றுகொண்டிருந்த பைக்கைக் காட்டி.

“ஆல்ரைட்" ஸ்டியரிங் வீலை இடது பக்கம் வேகமாக திருப்பினான் வினோத். கார் நடுரோட்டிலிருந்து   சட்டென விலகி இடது புறம் பாய்ந்தது 

மெதுவாகப் போய்க்கொண்டிருந்த அந்த பைக்கை கிட்டத்தட்ட இடிக்கும் அளவுக்கு, நெருங்கியதும், ஹார்னை பலமாக அழுத்தினான் வினோத்.

அந்த திடீர் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனான் அந்த பைக் ஒட்டி. தடுமாறி திடீர் ப்ரேக் போட்டு,எப்படியோ கீழே விழாமல் ஓரமாக போய் நிறுத்தினான். கோபமாக ஏதோ கெட்ட வார்த்தையில் அவன் கத்த,அதைக் கேட்கும் தூரத்தைக் கடந்து போயிருந்தது அந்த கார்.

காரினுள்ளே ஐந்து பேரும் வயிறு வலிக்க சிரித்துக்கொண்டிருந்தனர்.

“வினோத்..அவன் சொன்னானே அந்த வார்த்தை அது உன்ன தான்" என்று சொல்லி குலுங்கி குலுங்கி சிரித்தான் முகுந்த்.

“அவ்ளோ க்ளோசா போய் இடிக்காம திரும்புற பாரு..நீ செம ட்ரைவர் டா..கலக்கு"என்று வினோத்தின் தோளைத் தட்டினாள் சாரா.

“நல்ல டிரைவர் தான். ஆனா ரோட்ல போற எவனோ இவங்க அப்பாவ என்ன வார்த்தை சொல்லி திட்டினான் பாத்தியா..பாவம் டா அந்த ஆளு..உன்னப் பெத்ததுக்கு " என்று சொல்லி முடிக்கும் முன்னே சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வர, வாயில் வைத்திருந்த பீரை கொப்பளித்துவிட்டான் ஜேம்ஸ்.

நான்கு பேரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அடப்பாவிங்களா..உங்க ஜாலிக்கு என் குடும்பத்த டேமேஜ் பண்றிங்களா?”

“ஹேய் ..அங்க பாருடா..அந்த நானோ கார்..அதுக்கு லைட்டா ஒரு ஷாக் குடு" என்று பின்னாலிருந்து கை நீட்டி சொன்னான் முகுந்த்.

“மறுபடியுமா? ம்ம்ம்..மை பேமிலி,டோட்டல் டேமேஜ்" என்றபடியே ஹார்னை பலமாக அழுத்திப் பிடித்துக்கொண்டு, ஏக்சிலரேட்டரை மிதித்தான் வினோத்.

ந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி அந்த சாலை வளைவின் அருகிலிருந்த அந்த மலை விளிம்பில் அஞ்சலியும்,அரவிந்தும் நின்றுகொண்டிருந்தனர்.

“போதும்..இங்கயே நில்லு..பின்னாடி விழுந்திட போறோம்" என்றாள் அஞ்சலி.

“ஹ்ம்ம்..” தனது செல்போனின் முன்பக்க கேமிராவை ஆன் செய்து உயர்த்திப்பிடித்தான் அரவிந்த்.

“ஹ்ம்ம்..நல்லாவே இல்ல..பின்னாடி இருக்கிற எல்லாம் கவர் ஆகுற மாதிரி எடு..”என்றாள்.

“அப்போ இன்னும் முன்னாடி போலாம்". சில அடிகள் முன்னாடி நகர்ந்தனர்.

“இப்போ ஒகே. ஆனா கேமிரா நல்லாயில்ல. இரு. என்னோடதுல எடுக்கலாம்" என்றாள் அஞ்சலி. ஓடிப்போய் தன் ஹேண்ட்பேக்கிலிருந்த போனை எடுத்துவந்தாள்.

“பாத்தியா? எவ்ளோ ப்ரைட்டா இருக்கு..ஐபோன் இஸ் ஐபோன்.”

“ஆமா.என்னோட ஒரு மாச சம்பளம். எனக்கு இதுவே போதும். நல்ல கேமிரா வச்சு நான் என்ன பி.சி.ஸ்ரீராம் மாதிரி சினிமெட்டோகிராபி பண்ணப்போறேனா? சரி..இன்னும் பக்கத்துல வா"

“ம்ம்ம்..ரெடி..க்ளிக்" என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.