(Reading time: 11 - 22 minutes)

14. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

Hello friends, எல்லாரும் எப்படி இருக்கீங்க.  நான்தான் jay, ஞாபகம் இருக்கா.  நவராத்திரி, தீபாவளி, அப்பறம் cruise Trip அப்படின்னு இந்தப் பக்கம் வரவே முடியலை.  நடுவுல இந்தப் பண்டிகைபோதெல்லாம் ஏகப்பட்ட டான்ஸ் ஆடினதுல மொத்த பாக்கும் காலி ஆகி அதுக்கு ட்ரீட்மென்ட்ன்னு ஏக பிஸியா சுத்திட்டு இருந்தேன்.  இப்போ பாக் to நார்மல் இல்லாட்டாலும் ஓரளவு சமாளிக்கற நிலைமை வந்தாச்சு.  இனிமே ஒழுங்கா அப்டேட் தருவேன்னு நினைக்கறேன்.  கதையை மறந்து இருக்க மாட்டீங்கங்கற நம்பிக்கைல அடுத்த அப்டேட் போட்டு இருக்கேன்.  படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.  Very sorry for the late update.

ல்லதம்பியின் குள்ளநரித்தனத்தை அறியாத தேவி அவனை நம்பி தன் கஷ்டங்களை கொட்ட ஆரம்பித்தாள்.   எங்கே குடித்துக் குடித்து தந்தையும், தமையனும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்களோ என்று பயத்தில் இருந்த தேவிக்கு நல்லதம்பியின் வருடலை இனம் காண முடியவில்லை. 

“இங்க பாரு  அழுவாத தேவி.   நாளைக்கு அவங்க வேலைக்கு வந்த உடனே அவங்கக்கிட்ட இதை பத்தி பேசி கொஞ்சம் மிரட்டி வைக்கறேன்.  நீ கவலைப்படாம பள்ளிக்கூடத்துக்குப் போய் படிக்கற வேலையைப் பாரு”, ஒழுக்கத்தின் மறுவுறு பேசியது. தேவியும் அவனின் வார்த்தைகளை நம்பிச்சென்றாள்.

நல்லதம்பி தேவியைத் தன் வசப்படுத்த இன்னும் நாள் கடத்தத் தேவையில்லை,  இன்றே மணியிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.  அவனும் தேவி மீது கண் வைத்து கிட்டத்தட்ட ஓராண்டு முடிந்து விட்டது.  எந்தப் பெண்ணிற்காகவும் இந்தளவு அவன் முயன்றதில்லை.  முதலில் அஞ்சலையால், பின்னர் மீனாவால் என்று ஏற்கனவே அவன் அவளை அடைய முடியாமல் நாட்கள் தாமதமாகிவிட்டது.  மணியும், வெற்றியும் அவன் ஆட்டுவித்தால் ஆடும் நிலைக்கு வந்து விட்டார்கள்.   நாளைய விடியலுக்காய் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தான் நல்லதம்பி.

Vidiyalukkillai thooram

மறுநாள் எப்பொழுதும் போல் வேலைக்கு என்ற பெயரில் குடிப்பதற்கு மணியும், வெற்றியும் நல்லதம்பியின் தோப்பை அடைந்தார்கள்.  அவர்களுக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தான் நல்லதம்பி.  என்றும் போல் அன்றும் 1 மணி நேர வேலை செய்து விட்டு நல்லதம்பி தரும் சரக்கை குடிப்பதற்காக அவனின் அருகில் சென்றார்கள் வெற்றியும், மணியும்.  ஆனால் அன்று நல்லதம்பி பாட்டில்கள், கிளாஸ்கள் புடை சூழ அமர்ந்திருக்கவில்லை.  அதுவே அவர்கள் இருவருக்கும் ஒரு மாதிரி இருந்தது.  போதாதற்கு கையில் ஒரு சிகரட்டுடன் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தான் நல்லதம்பி இவர்கள் வருவதை கவனித்தும் கவனிக்காதவன் போல.

“என்ன ஐயா, சரக்கு  சாமான் ஒண்ணுத்தையும் காணும்.  வேற எடத்துல வச்சு இருக்கீங்களா? இங்க இல்லையா, நான் போய் எடுத்துட்டு வரவா?”, வெற்றி நல்லதம்பியிடம் கேட்டுக்கொண்டே வந்து அருகில் அமர்ந்தான்.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் சிகரெட்டை மட்டும் ஊதியபடியே இருந்த நல்லதம்பியை பார்த்த வெற்றியும், மணியும் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள்.

“ஐயா எதுனா விஷயமுங்களா, ரொம்ப நேரமா யோசனைலையே இருக்கீங்களே?”, மணி கேட்க அவனைப் பார்த்த நல்லதம்பி, “மணி இங்க நீங்க வேலை செய்யாம சம்பளம் வாங்கிட்டு, நீங்க ரெண்டு பேரும்  சரக்கடிச்சுட்டு மட்டையா கிடக்கற விஷயம் எப்படியோ மீனாக்குத் தெரிஞ்சு போச்சு. நேத்து என்கூட ஒரே சண்டை.  கண்ட ஆளுங்களுக்கும் வாரி இறைக்கத்தான் இங்க காசு குமிஞ்சு கிடைக்குதான்னு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கத்தித் தீர்த்துட்டா.  இன்னையோட கூலியைக் கொடுத்து உங்களை வேலையை விட்டு நிப்பாட்ட சொல்லிட்டா.  அதே மாதிரி உங்களுக்கு இனிமே சாராயம் வாங்கிக்கொடுக்க கூடாதுன்னு கண்டிஷனா சொல்லிட்டா”

“ஐயோ என்ன எஜமான் நீங்க, திடீர்ன்னு இப்படி வந்து சொன்னா நாங்க என்ன செய்யறது.  உங்கள விட்டா இந்த ஊருல எங்களுக்கு வேல தர்றவங்க வேற யாரு இருக்காங்க”

“வேலையா, அதை விட பெரிய ஆப்பா உங்க ரெண்டு பேத்துக்கும் வச்சிட்டா.  சாராயக் கடை வச்சிருக்கறவன் என்னோட சொந்தக்காரன் தெரியும் இல்லை.  அவனுக்கு போனைப் போட்டு இனிமே நீங்க ரெண்டு பேரும் வந்தா உங்களுக்கு சாராயம் தரக்கூடாதுன்னு சொல்லிட்டா.  மீறித்  தந்தான்னா அவ அண்ணன் கிட்ட சொல்லி லைசென்ஸ் பிடிங்கிடுவேன்னு சொல்லிட்டா.  அதுல மிரண்டு போனவன் இனி உங்களுக்கு கண்டிப்பா சாராயம் தர மாட்டேன்னு கற்பூரம் கொளுத்தி சத்தியம் பண்ணிட்டு போய்ட்டான்”, அடுத்த வெடியைக் கொளுத்திப் போட மணியும், வெற்றியும் ஆடிப்போய் விட்டார்கள்.

“என்னாங்கய்யா அநியாயமா இருக்கு.  நாங்க மீனாம்மாக்கு என்ன துரோகம் செஞ்சோம்.  ஏன்  இப்படி எல்லாம் பண்றாங்க.  இதோ இப்பவே காலைலேர்ந்து கை, காலெல்லாம் ஒதற ஆரம்பிக்குது.  நீங்க எப்படா வருவீங்கன்னு காத்துட்டு இருந்தோம்.  நீங்க என்னடான்னா இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடறீங்க.  ஐயா நாங்க மீனாம்மா காலுல கூட விழறோம்.  தயவு செஞ்சு எங்க ரெண்டு பேரையும் உங்களை விட்டு அனுப்பிடாதீங்க”

You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story 

“என்னை என்னப் பண்ண சொல்ற மணி.  உனக்கே மீனாப் பத்தி தெரியும் இல்லை.  வீட்டுல நான் டம்மி பீஸ்தான்.  நேத்து நான் உங்களுக்கு பரிஞ்சு பேசினதுக்கு அவங்க அண்ணனை விட்டு என்ன மிரட்ட ஆரம்பிச்சுட்டா.  அவனும் இதுதான் சாக்குன்னு, சினிமால வர்ற வில்லன் மாதிரி என்னை பக்கம் பக்கமா பேசி மிரட்டறான்”, நல்லதம்பி மிகுந்த வருத்தத்துடன் பேசுவது போல பாவனை செய்தான்.

“ஐயா தயவு செய்து எதுனா செயங்கைய்யா.  எங்களால தண்ணி அடிக்காம இருக்க முடியாது.  உங்களாண்ட வேலை செய்யாட்டினாக்கூட போவுது.  தேவிப் புள்ளைய இன்னும் ரெண்டு வீட்டு வேலை சேர்த்து செய்ய சொல்லி காசு தேத்திடுவோம்.  சரக்கை மட்டும்  கொடுக்க சொல்லி சொல்லுங்கைய்யா”, என்று வெற்றி சொல்ல, ஆஹா நாம் ஒன்று நினைத்தால் இவர்கள் வேறு ஒன்றை சொல்கிறார்களே என்று நொந்தான் நல்லதம்பி.

“நான் சொல்றதை அவன் கேக்க மாட்டான்யா.  அந்த அளவு என் மச்சான் அவனை மிரட்டி வச்சிருக்கான். இதுக்கு ஒரே வழிதான் இருக்கு.  பேசாம பக்கத்து ஊருல ஒரு எனக்கு பத்து ஏக்கரா வயலும், தோப்பும் இருக்கு தெரியும் இல்லை.  அங்க உங்களை அனுப்பிரலாம்ன்னு இருக்கேன்.  அந்த இடத்துக்கு நான் வருஷத்துக்கு ரெண்டு வாட்டி குத்தகப் பணம் வாங்க மட்டும்தான் போவேன்.  வயசான என்னோட ஒண்ணு விட்ட சித்தப்பாதான் அதை பாத்துக்கறாரு.  மீனாவும் அந்த இடத்தை கண்காணிக்க மாட்டா.  என்ன சொல்றீங்க”

“அங்க போன்னா  எப்படியா.  இங்க இருந்தே தேவி பள்ளிக்கூடம் போவ ஒரு மணிநேரம் ஆவுது.  நீங்க சொல்ற இடம் ஊருல இருந்து ரொம்பத் தள்ளி இல்லை இருக்குது.  அதுந்தவிர அந்தூருக்கு பஸ்சும் சரியா வராது.  தேவி எப்படியா பள்ளிக்கூடத்துக்கு, வேலைக்கு எல்லாம் போவும்”

“நீங்க என் கூட இருக்கணும்ன்னா இந்த ஒரு வழிதான் இருக்குது மணி.  உன் பொண்ணு படிப்பா இல்லை நீங்க ரெண்டு பேரும் தண்ணி அடிக்கறதான்னு நீ முடிவு பண்ணிக்கோ.  ஆனா இந்தூருல நீ என்கூட இனிமே இருக்க முடியாது.  இன்னைக்கே கணக்கை பைசல் பண்ணி உங்க ரெண்டு பேத்தையும் மீனா அனுப்ப சொல்லிட்டா”, மிகக்கறாராக பேசினான் நல்லதம்பி.

நல்லதம்பியின் பேச்சைக் கேட்ட மணியும், வெற்றியும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நின்று விட்டார்கள்.  முன்பானாலும் இந்த அளவு அவர்கள் குடியை நாடி இருக்கவில்லை.  அதனால் இங்கு இல்லாவிட்டாலும் அடுத்த ஊருக்கு சென்று  ஏதோ ஒரு வேலை செய்து தங்கள் பாட்டைப் பார்த்துக் கொள்ளலாம்.  இப்பொழுது உள்ள நிலையில் இனி வேலை செய்வது என்பது முடியவே முடியாத காரியம்.  மணியும், வெற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஒருவர் முகத்தை மற்றவர் மாற்றி மாற்றி பார்த்தார்கள்.  நல்லதம்பி அவர்களின் தவிப்பைப் பார்த்து, அவன் வழிக்கு அவர்கள் வந்து விடுவார்கள் என்று  மனதிற்குள் குத்தாட்டம் போட்டான்.

“இங்க பாரு மணி, உங்க ரெண்டு பேருக்கும் இது எத்தனை அதிர்ச்சியா இருக்கும்ன்னு எனக்குத் தெரியுது.  ஆனா என்னோட நிலைமையும் நீ யோசிச்சு பாக்கணும்.  ஒண்ணு பண்ணுங்க.  இப்போவே பதில் சொல்லணும்ன்னு இல்லை.  நீங்க ஒரு ரெண்டு நாள் டைம் எடுத்து நல்லா யோசனை பண்ணி உங்க முடிவை சொல்லுங்க”, நல்லதம்பி சொல்ல, ரெண்டு நாளா அதுவரை தண்ணி அடிக்காமல் எப்படி இருப்பது.  தங்களால் முடியாதே என்று இருவரும் திகைத்தார்கள்.  அவர்கள் நல்லதம்பியை பார்க்க அவன் தன்னுடைய முடிவில் தீர்மானமாக இருப்பதுபோல் பாவனை செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.