(Reading time: 15 - 30 minutes)

12. கிருஷ்ண சகி - மீரா ராம்

கோகிலவாணி சொன்னதைக் கேட்டதிலிருந்து மனம் ஒருநிலை கொள்ளாமல் தவித்தான் மகத்…

தான் நேசித்தவளுக்கு இப்படி ஒரு துன்பம் வந்திருக்கும் என அவன் கனவிலும் எண்ணிப்பார்த்திடவில்லை…

ஒரு பெண்ணுக்கு இது எவ்வளவு பெரிய கொடுமை… கடவுளே… ஏன்… எதற்காக அவளுக்கு இப்படி ஒரு சோதனை?...

krishna saki

அவள் கணவன்… அவர் பெயர்… ஆம்… ஜிதேந்தர்… அவர் ஏன் இவளது மனதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்?... தந்தையிடம் பேச வேண்டியது தானே?... எதற்காக நேரம் காலம் பார்க்கிறார்?... யாருக்காக?...

ஒரு கணவனாக இவளது உணர்வுகள் அவருக்கு ஏன் புரியாமல் போனது?... இது எதனால்???

ஜிதேந்தர் தனது அப்பாவை இவ்வளவு தூரம் பேச வைத்து வேடிக்கை பார்ப்பது ஏன்???...

குட்டி துருவனுக்கு விவரம் தெரியும் முன் அனைத்தும் சரியாகிட வேண்டுமே… இல்லையென்றால் நாளை அது அவன் ஜிதேந்தரை வெறுக்க காரணமாகி விடுமே…

வயதான காலத்தில் பாவம் பாட்டியும் என்ன செய்வார்?...

அங்கே இருக்கும் ருணதியின் அத்தையும், ஜிதேந்தரின் அம்மாவுமாகிய வைஜெயந்தி போராடும் அளவுக்கு கூட ஜிதேந்தர் ஏன் எந்த முயற்சி எடுக்கவில்லை…

பல கேள்விகளை தனக்குள் கேட்டுக்கொண்டு மனதோடு போராடிக்கொண்டிருந்தான் மகத்…

அதற்கு முதற்கட்டமாக என்ன செய்யவேண்டும் என அவன் முடிவெடுத்த பின், விடியலுக்காக காத்திருந்தான்…

விடிந்ததும் முதல் வேளையாக அதை செயல்படுத்த துவங்கினான்….

ஸ்ரீரங்கநாதர் கோவில் வரை விறுவிறுவென்று சென்றவன், அதன் உள்ளே செல்ல தயங்கினான்…

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

பின்னே, இத்தனை வருட காலம் திருச்சிக்கு வந்த போதிலும் அவன் இந்த கோவிலுக்கு வந்ததில்லையே…

வந்தால், அதன் பின் அவன் அவனாக இருக்க முடிந்திடாதே… அதனாலேயே அதனை தவிர்த்தான்…

ஆனால் இன்று தான் விரும்பியவளின் வாழ்க்கைக்காக கோவிலின் வாசல் வரை வந்தவன் உள்ளே செல்ல தயங்க, பின் ஒரு பெருமூச்சுடன் உள்ளே செல்ல நினைக்கும்போது, கோகிலவாணியின் குரல் கேட்டது..

“வாங்க தம்பி… நீங்களும் இந்த கோவிலுக்கு வருவீங்களா?...”

அவரிடம் என்ன சொல்வது என அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது “அம்மா…” என்ற குரல் கேட்க, கோகிலவாணியின் முகத்தில் புன்னகை பூத்தது மிக…

“ஜெயந்தி…” என அவர் மகளைக் கட்டிக்கொள்ள, வைஜெயந்தியும் அவருடன் ஒன்றி போனார்…

“பெத்த பிள்ளையைப் பார்க்க இப்படி கோவிலுக்கு வர வேண்டி இருக்கே… யாருக்கும் தெரியாம…” என கோகிலவாணி கண்கலங்க…

“விடும்மா… நம்ம தலைஎழுத்து அப்படித்தான இருக்கு… வேறென்ன செய்ய முடியும் நம்மால…” என வைஜெயந்தியும் கண்களைத்துடைத்துக்கொள்ள,

கோகிலவாணி மகத்தினை வைஜெயந்திக்கு அறிமுகம் செய்து வைத்தார்…

“வணக்கம்….” என்றபடி அவன் கரம் குவிக்க, அவரும் புன்னகைத்தார்….

“வாப்பா… உள்ளே போகலாம்…” என வைஜெயந்தி அவனை அழைக்க,

“இல்ல ஆன்ட்டி… நான் சாமிகும்பிட்டுவிட்டேன்… நீங்க போயிட்டு வாங்க…” என்றான் அவன்…

“மகத்… எனக்கு ஒரு உதவி செய்வீயா?...” என அந்நேரம் கோகிலவாணி அவனிடம் கேட்க

அவனுக்கு அவரின் ஒருமை அழைப்பு மனதிற்கு சற்றே ஆறுதல் தர,

“சொல்லுங்க பாட்டி…. என்ன செய்யணும்…?....” என்றான் அவன்…

“துருவனும் ருணதியும் வீட்டில இருக்காங்க… அவ வேலைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி நான் இங்க வைஜெயந்தியை பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன்… ஆனா பெருமாளை சேவிச்சிட்டு வீட்டுக்குப் போக நேரம் ஆகிடும் போல இருக்கு… நீ கொஞ்சம் என்னை வீட்டுல விட்டுடுறீயாப்பா?... உனக்கு இதுல எதும் கஷ்டம் இருக்கா?...” என அவர் கேட்டதுமே,

“நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க பாட்டி… நான் இங்க வெயிட் பண்ணுறேன்…” என்றான் மகத்…

“ரொம்ப சந்தோஷம்ப்பா…” என மகத்திடம் சொன்னவர், வைஜெயந்தியிடம் பேசிக்கொண்டே கோவிலுக்குள் சென்றார்…

சில மணித்துளிகளுக்குப் பின் இருவரும் திரும்பி வந்தனர்…

“சரிம்மா… நான் கிளம்புறேன்… நீ பார்த்து வீட்டுக்குப்போ…” என வைஜெயந்தி தாயிடம் சொல்ல,

“நீ எப்படி ஜெயந்தி வீட்டுக்குப்போவ?...”

“நடந்து போயிடுவேன்ம்மா…”

“நடந்தா?... மாப்பிள்ளைக்கு நேரத்துக்கு சாப்பாடு இல்லன்னா கோப்ப்படுவாரேம்மா?..”

“அவருக்கு என்னைக்குத்தான்ம்மா கோபம் வராம இருந்திருக்கு?... இன்னைக்கு புதுசா வர்றதுக்கு?...”

“ஏண்டி இப்படி அலுத்துக்குற?...”

“பின்னே என்னம்மா வீட்டுல நடக்குற பிரச்சினையை கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்குறார்…” என அவர் கண்கலங்க,

“மகத் தம்பி… என் பொண்ணு போற வழியில இறங்கிப்பா… நாம கிளம்பலாம்…” என சொல்ல, அவன் சென்று காரை ஸ்டார்ட் செய்தான்…

காரில் இருவரும் ஏறியதும், அவன் மெதுவாக அதனை செலுத்தினான்…

“இப்படி அழுதுட்டே இருக்காத ஜெயந்தி… எதாவது செய்யப்பாரு…”

“என்னம்மா நான் செய்ய முடியும்?... அவர் நான் பேசினாலே கோப்ப்படுறார்…”

“அவர் கோப்ப்படுறார்னு சின்ன்ஞ்சிறுசுகளை நாம சேர்த்து வைக்காம இருக்க முடியுமா?...”

“அப்படி நீயும் நானும் மட்டும் நினைச்சு என்னம்மா பிரயோஜனம்?...”

“வேற யாரு நினைக்கணும்னு சொல்லுற ஜெயந்தி?...”

“ஜித் அப்பா….” என்றார் வைஜெயந்தி அழுத்தமாய்…

“அவரை நீதான்ம்மா சமாதானம் செய்யணும்…” என்றார் கோகிலவாணி மகளின் கையைப்பிடித்துக்கொண்டே…

“அட போம்மா…” என்றபடி கைகளை உறுவிக்கொண்டவர்,

“அந்த மனுஷனை பார்த்தாலே எனக்கு கோபமா வருது… ஆனா அதை அவர்கிட்ட என்னால வெளிக்காட்ட முடியலை… ருணதி, துருவ் விஷயமா எதாவது பேசினாலே போதும் என்னை கை நீட்டி அடிக்க வேற செய்யுறார்…”

“என்னது…” என கோகிலவாணி அதிர்ச்சியுடன் வைஜெயந்தியைப் பார்க்க

அவரோ விரக்தியாக புன்னகைத்தார்…

“ஜெயந்தி… அவர் …. அவர்… உன்னை காதலிச்சு கைப்பிடிச்சவர்…”

“அதனால தான்ம்மா என்னை இன்னும் அந்த வீட்டுல விட்டு வைச்சிண்டிருக்குறார்… இல்லன்னா என்னைக்கோ என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிருப்பார்…”

“பெருமாளே… என் பொண்ணுக்கு இப்படி எல்லாம் நடக்கணுமா?...” என கோகிலவாணி கண்மூடி துக்கத்தை உள்வாங்க,

“விடும்மா… அவர் குணம் அவ்வளவுதான்… எனக்கு ஜித் நினைச்சாதான் கவலையா இருக்கும்மா… அவர்கிட்ட முடிஞ்ச அளவு போராடத்தான் செய்யுறான்… ஆனா, அவர் கொஞ்சம் கூட அவனைக் கண்டுக்க மாட்டேங்குறார்ம்மா… இவ்வளவு ஏன் அன்னைக்கு அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு நாலைஞ்சு பொண்ணுங்க போட்டாவை கொண்டு வந்து அவங்கிட்ட காட்டினார்…”

“அய்யோ… பெருமாளே…” என கோகிலவாணி வாய்விட்டு சொல்ல,

மகத்திற்கு திக் என்றிருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.