(Reading time: 25 - 49 minutes)

06. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

புதிர் 6

வம்பர் 10

ராகவ்வும், ஹர்ஷ்ஷும் அஞ்சனாவிற்காக பேசியதால் சென்னைக்கு வர அனுமதி கிடைத்து விட்டது! அவர்கள் பேசா விட்டாலும் இவளே அனுமதியை வாங்கியிருக்க முடியும் தான்! அவள் அதிர்ஷடக்காரி - எதுவும் வேண்டும் என்று கேட்பதற்கு முன்பே கிடைத்து விடும்!

அஞ்சனா சென்னையில் வேலை பார்க்க போகிறாள் என்றதுமே, பவதாரிணியின் தோழி சைலஜா பார்த்துக் கொள்ள ஏதுவாக, அவர் வீட்டருகே பீச் ஹவுஸ் ஒன்றை பேத்திக்காக வாங்கி விட்டார் சொக்கர்.

Puthir podum nenjam

புத்தம் புது பங்களாவில்..  எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் ஆர்ப்பரிக்கும் வங்காள விரிகுடாவின் அழகு தெரியும்.

தரையோடு விரிக்கப் பட்டிருந்த மெத்தையில் அமர்ந்த படி.. தன் அருகே இருந்த பாட்டி, தாத்தனிடம் சொன்னாள்...

“செம வியூ சொக்க தங்கம்ஸ்”, தனக்காக.. தனக்கு என்ன பிடிக்கும் என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருந்த தன் தாத்தாவையும், பாட்டியையும்  மகிழ்ச்சி பொங்க மெச்சியவளின் பார்வை, இரவின் வருகைக்காக  கடலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த சூரியனை ரசித்த படி இருக்க... பேத்தியின் மலர்ச்சியில் இணைந்தனர் அந்த பெரியவர்கள்..

அவளுக்கு பீச் ஹவுஸ் பிடிக்கும் என்பதால் மட்டுமல்ல... அது பாதுகாப்பு நிறைந்த பிரபலங்கள் வசிக்கும் பகுதி. கூடுதலாக சைலஜாவின் கணவர் காவல்துறை உயரதிகாரி என்பதாலும்.. அவள் பாதுகாப்பையும் யோசித்து தான் அந்த வீட்டை வாங்கியிருந்தார் சொக்கர்.

அன்று அந்த வீட்டிற்கு பாலை காய்ச்சி விட்டு, மாலையில் பாலாஜியை சைனாவிற்கு வழியனுப்ப வந்திருந்தனர் அஞ்சனாவின் குடும்பத்தினர். அவர்களுடன்  மதுரையிலிருந்து ராகவ்வும், அவன் அன்னையும் வந்திருந்தனர்.

“குச்சி மிட்டாய்!!!!“

“எனக்கு பேக் பண்ணி தர்றேன்னு சொன்னியே..”, டென்ஷனுடன் கேட்ட படி பாலாஜி அஞ்சனா இருந்த அந்த அறைக்குள் வர...

ஜன்னலில் இருந்த பார்வையை அவன் பக்கம் திருப்பி,

“இவ்வளோ பெரிய பேக் கண் முன்னாலே இருக்கு தெரியலையா.. இந்தா செக் லிஸ்ட்! எதை எங்க வைச்சி இருக்கேன் இதை பார்த்தாலே தெரியும்!”, என்று தன் பக்கத்தில் வைத்திருந்த நோட் பேட்டை எடுத்து கொடுக்க...

“அடுக்கிட்டியா! செக் லிஸ்ட் போட்டு கலக்கிறடி!”, கலக்கம் குறைந்து மலர்ந்தான்...

“எந்த பிட் எங்கங்க வைச்சிருக்கோம்ன்னு லிஸ்ட் போட்ட ப்ராக்டிஸ்ல அதுவா வருது”, என்று பெருமையாக சொன்னவள் அவன் கழுத்தை கவனித்து,

“என்னடா டை கட்டி ப்ராக்டிஸ் பண்றேன்னு தூக்கு கயிறை கட்டுறதுக்கு ப்ராக்டிஸ் பண்ணியிருக்க..”, அவன் கழுத்தில் சகட்டு மேனிக்கு சுற்றி கிடந்த டையை பார்த்து அஞ்சனா கேட்க,

“டை கட்ட சரியா வர மாட்டேங்குதுடி”, மீண்டும் கலவரமானான்..

குழந்தை போல அவள் முன் கழுத்தை காட்டிய படி மண்டியிட்டு அமர்ந்தான்.. பள்ளி பருவத்தில் ஆரம்பித்த பழக்கம்.. கல்லூரி வரை அவனுக்கு டை கட்டும் வேலை இவளது!

“மர மண்டை! எல்லா நேரமும் நான் உன் கூடவே உட்கார்ந்து இதை செய்வேனா?”

என்ற படி அஞ்சனா  அந்த டை யை சரி செய்ய..

இவன் முகத்தில் பிரிவின் வலி. பிஸ்னஸ்ஸில் களம் இறங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவனுக்கு... கிளம்பும் நாள் தான் அந்த பிரிவின் வலி பெரிதாக தாக்குகிறது. ஒரு நொடி கண் கலங்க..

பின் சுதாரித்து கொண்டு... சற்றே குனிந்து  பார்வையை டையில் திருப்ப..  

அவளோ அதை சரி செய்தவாறே, மறுபடியும் டை கட்டுவது எப்படி என்று அவள் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க... அவள் பேச்சில் இடைபுகுந்த தங்கம்,

“நீ பேசாம வீடியோ பிடிச்சு அவனுக்கு அப்லோட் பண்ணு.. இல்லைன்னா ஃபேஸ் டைம் போட்டு கேட்டுக்க சொல்லு!”, என்று தொழில்நுட்ப ஆலோசனையை வழங்க இருவரும் சிரித்தனர்...

அப்பொழுது சங்கரியும் பவதாரிணியுடன் அங்கு வர... அவர்களைத் தொடர்ந்து வந்த ராகவ், பாலாஜியைப் பார்த்து,

“கால் வலியோட இருக்கிறவளை ரெஸ்ட் எடுக்க விடாம தொந்தரவு படுத்துற!”, என்று அதட்டியதும், பாலாஜி முகம் சுருங்க.. அஞ்சனாவை பார்த்து,  

“இன்னும் வலி இருக்குதாடி!”, வருந்தியவனாய் அவள் புண்ணான பாதத்தை பார்வையிட...

அஞ்சனா,

“கண் டாக்டருக்கு காலை பத்தி என்ன தெரியும்? நீ ஃபீல் பண்ணாத தடிமாடு.. எனக்கு வலி இல்லை.. கோபம் மட்டும் தான்.. ராகு ஆசையா கொடுத்த கிப்ட்டை நாசம் பண்ண அந்த ராக்கெட் மேல அப்படி ஒரு ஆத்திரம்!”, என்று சொல்ல..

“அந்த நாசம் பண்ண ராக்கெட் என்ன! அந்த நாசா பண்ண ராக்கெட்டையே அனுப்ப விடாம செய்திடுவோம் பாப்பா கவலையை விடு”, என்று சொக்கர் சொல்ல...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.