(Reading time: 25 - 49 minutes)

மனதோர மழைச்சாரல்... - 15 - வத்ஸலா

கார் சென்னையின் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்க, ரிஷியின் குடும்பம் அதில் அமர்ந்திருக்க, அந்த அரங்கத்தை கார் கடந்த நேரத்தில் ஏதோ ஒரு நினைவலைகளை நோக்கி நகர்ந்தன சந்திரிக்காவின் எண்ண ஓட்டங்கள்.

சந்திரிக்கா கதாநாயகியாக நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நேரமது. அப்போது தனது தோழி மேகலாவின் நடவடிக்கைகளிலும், பேச்சிலும் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது சந்திரிக்காவுக்கு, நிறைய நேரங்களில் அவள் தன்னை அவமான படுத்த முயல்வதும் புரியாமல் இல்லை சந்திரிக்காவுக்கு.

ஆனால் அப்போதும் கூட மேகலாவை விட்டு விலகி விட வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை சந்திரிக்காவுக்கு. அந்த நேரத்தில் டைஃபாய்ட் ஜுரத்தில் படுத்திருந்த மேகலாவை அருகிலிருந்து கவனித்துக்கொண்டே தான் இருந்தார் சந்திரிகா.

Manathora mazhai charal

அப்போது சந்திரிகாவை தேடி வந்தது அந்த பட வாய்ப்பு!!!! அந்த அருமையான கதை.!!!! பரதநாட்டியத்தை மையமாக கொண்ட ஒரு கதை. முறைப்படி பரதநாட்டியம் பயின்றவர் சந்திரிக்கா. நடனம் அவருக்கு சுவாசம் என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்திற்கு கொடுக்கப்படும் சம்பளத்தை பற்றிக்கூட கேட்காமல் அந்த திரைப்படத்தை ஒப்புக்கொண்டார் சந்திரிகா. அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், வேறு யாரும் இல்லை. நம்  கல்யாணராமனின் தந்தை.

அந்த திரைப்படத்தை பற்றி, அந்த கதையை பற்றி சந்திரிகா முதலில் பகிர்ந்து கொண்டது மேகலாவிடம். அதை கேட்ட மாத்திரத்திலேயே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும், சந்திரிக்காவின் மீது புகழ் மழை பொழியும் என நன்றாக புரிந்து போனது மேகலாவுக்கு.

சந்தோஷத்தின் உச்சியில் ஏறி சந்திரிக்கா வானத்தில் மிதந்துக்கொண்டிருந்த போது அரவிந்தாட்சனுக்கு சொந்தமான அந்த பத்திரிக்கை எழுப்பியது அந்த கேள்வியை.

'பரதநாட்டிய சலங்கைக்கு என ஒரு புனிதம் இல்லையா? கவர்ச்சி நடிகைகள் பரத நாட்டியம் ஆடலாமா? பரதநாட்டிய கலைஞர்களுக்கு உயிரை விட மேலான இந்த சலங்கையை சந்திரிக்காவை போன்ற கவர்ச்சி நடிகைகள் அணியலாமா?

மெதுமெதுவாக மக்களிடம் இந்த கேள்வி விஸ்வரூபம் எடுக்க துவங்கியது. பத்திரிக்கையுடன் மேகலாவை நோக்கி ஓடிய சந்திரிக்காவுக்கு அவர்களின் கேலி சிரிப்பும், எள்ளலான பேச்சுமே பதிலாக கிடைக்க அவர்களின் எண்ண ஓட்டங்கள் புரிய ஆரம்பித்தது சந்திரிக்காவுக்கு.

அவர்கள் கொளுத்திப்போட்ட திரி பற்றிக்கொள்ள, படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்திருந்த அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. சந்திரிகா அந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என போராட்டங்கள் ஆரம்பித்தன. பணம் போட்ட தாயாரிப்பாளருக்கு பயம் பிடித்துக்கொண்டது. அடுத்த இரண்டாம் நாள் சந்திரிகா திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

'சார் நான் நல்லா நடிப்பேன் சார்... சார் ப்ளீஸ் சார்... பரதநாட்டியம் என் உயிர் சார்... ' சந்திரிக்காவின் கெஞ்சல்கள் எடுபடவில்லை.

இதற்கெல்லாம் மௌன சாட்சியாக நின்றிருந்தார் கல்யாணராமன். அந்த நிலையிலும் சந்திரிக்காவின் கண்ணில் இருந்து கண்ணீர் வராதது கல்யாண ராமனுக்கு பெரிய ஆச்சரியம். சந்திரிக்கா  நீக்கப்பட்ட அந்த திரைப்படத்தில் மேகலா நடிக்க ஆரம்பித்தது சந்திரிக்காவுக்கு இன்னொரு மிகப்பெரிய அதிர்ச்சி.

அடுத்த சில மாதங்கள் எந்த வாய்ப்பும் கைக்கெட்டாமல் வீட்டில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் சந்திரிக்கா. பெற்றவர்கள் உயிரோடு இல்லாத நிலையில் யாருமே இல்லாமல் தனிமையில் கிடந்த அந்த நேரங்களில் சந்திரிக்காவுக்கு சாய்ந்துக்கொள்ள தோள் கொடுத்தது கல்யாண ராமன். அடுத்த சில நாட்களில் கிளம்பின இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள்.

'அந்த ஆட்டக்காரியோட உனக்கு என்னடா சகவாசம்???' கல்யாண ராமன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பாமல் இல்லை. தந்தையை எதிர்த்துக்கொண்டு வெளியே வரும் அளவுக்கு இன்னமும் வாழ்கையில் கால் ஊன்றிக்கொண்டு இருக்கவில்லை கல்யாணராமன்.

அடுத்த சில மாதங்களில் வேறு வழியே இல்லாமல் கவர்ச்சி வேடங்களை ஏற்றுக்கொள்ளும் நிலை சந்திரிக்காவுக்கு. கிடைத்த வேடங்களை ஈடுபாட்டுடனே செய்ய ஆரம்பித்தார் சந்திரிக்கா. ஆனால் யாருக்கும் எந்த நிலையிலும் வளைந்து கொடுத்ததில்லை.

'என்னமா நீ... ஹீரோ நிக்கறார் நீ உட்கார்ந்திருக்கே? அவருக்கு கோபம். அவர் போற வரைக்கும் நிக்க வேண்டியது தானே.' இப்படிதான் படப்பிடிப்பில் சந்திரிக்காவுக்கென சில சட்டங்கள் இயற்றப்படும்.

'அநியாயமா இருக்கே??? நான் எதுக்கு நிக்கணும். இதுக்கெல்லாம் கோபபட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது.' தைரியமான பதில் வரும் சந்திரிகாவிடமிருந்து.

எந்த நிலையிலும் தனது தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் விட்டுக்கொடுக்காத சந்திரிக்காவுக்கு, எப்போதும் இருக்கும் பட்ட பெயர்களுடன் சேர்த்து இன்னொரு பெயரும் சேர்ந்துக்கொண்டது  'திமிர் பிடித்தவள்.'

அரவிந்தாட்சனின் பத்திரிக்கை சந்திரிக்காவின் மதிப்பை குறைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துகொண்டே இருந்தது. எப்போதாவது தனியாக வெளியில் செல்லும் நேரங்களில் பொதுமக்களின் கீழ்த்தரமான பேச்சுக்களும், பார்வைகளும் சந்திரிக்காவை விரட்ட தவறாது.

'இந்த பிழைப்பு பிழைக்கறதுக்கு இவ பிச்சை எடுக்கலாம்'. என்பார்கள் சந்திரிக்காவின் காது பட. அனால் இது எதுவுமே எப்போதுமே பாதித்ததில்லை சந்திரிக்காவை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.