(Reading time: 21 - 42 minutes)

03. காதல் பின்னது உலகு - மனோஹரி

ந்தப் பெண் ஓடி வந்த கோலத்தில் அதிபனுக்கு முதலில் வந்தது நிச்சயமாக சிரிப்புதான். அதுவும் இரு புறமும் வயலும் இடையில் இருந்த சிங்கிள் ட்ராக் ரோடும் அதில் இருந்த ஆயிரம் குண்டும் குழியும் என்ற சூழலில் மெதுவாக காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு முதலில் அவளும் சற்று வளைந்த அந்த சாலையில் மெல்ல அந்த கோழியும் காட்சிக்கு வர….அந்த கோழிக்கு பயந்து தான் அவள் ஓடி வருகிறாள் என முதலில் புரியாமல் பின்பு புரிய சட்டென சிரித்துவிட்டான்.

காருக்குள் இருந்த அமைதியில் முழு குடும்ப செவிகளிலும் தெறித்து சிதறியது இந்த சிரிப்பு சத்தம்.

“என்னடா அதி?”  என்றார் பின்னாலிருந்த அம்மா.

Kadhal pinathu ulagu

அதற்குள் அந்தப் பெண் இவர்கள் காரை நிறுத்த சொல்லி கைகாட்ட…..இவன் சிரிப்பு நின்றிருந்தது. ‘இப்ப எதுக்கு நிறுத்த சொல்றா?...என்ன ப்ளானா இருக்கும்?’  என்று ஓடியது இவன் மனம்.

கிராமம் என்பதால் நடந்து செல்பவர் தன் ஊர்காரர்கள்  யார் வீட்டுக் காரைப் பார்த்தாலும் கை காட்டி நிறுத்துவதும் காரில் உள்ளவர்கள் நிறுத்தி கூட்டிப் போவதும் சகஜம் தான் என்றாலும் அதிபனுக்கு இவளுக்காக காரை நிறுத்தும் எண்ணமெல்லாம் துளி கூட கிடையாது.

ஆனால் அதற்குள் இவன் அருகில் அமர்ந்திருந்த கடைகுட்டி தம்பி அபயனோ “ஒரு பொண்ணுமா கோழியப் பார்த்து பயந்து போய் ஓடி வருது போல…..பார்க்க சிரிப்பா இருக்குது……நம்ம காரை நிப்பாட்ட சொல்லுது “ என்று அம்மா கேட்ட கேள்விக்கு விலாவாரியாக விளக்கம் சொல்லி வைத்தான்.

“கோழிய பார்த்தா?” என அவர் அதிசயப் பட….அதற்குள் இதை அனைத்தையும் கேட்டிருந்த அப்பாவோ…”அதிபா ஏன் காரை நிறுத்தாம போற….என்ன ப்ரச்சனையோ அந்த பொண்ணுக்கு நிறுத்து “ என்றவர் தொடர்ச்சியாக ரியர்வியூவில் அபயன் முகம் பார்த்து “யார் வீட்டு பொண்ணுடா?” என கேள்வியாக நிறுத்தினார்.

“அதெல்லாம்….” அதிபன் ஆரம்பிக்கும் முன்

“இல்லப்பா அது ஒரு ஃபாரினர்….வொயிட் லேடி…..இங்க என்ன பண்ணுதுன்னு தெரியலை…..” பதில் கொடுத்திருந்தான் அபயன்.

இதற்கு மேல் அப்பாவிடமிருந்து என்ன பதில் வரும் என அதிபனுக்கு தெரியும்.

“என்ன அதி இது…? முதல்ல நிறுத்து ….அவங்கல்லாம் நம்ம நாட்டுக்கு வர்ற விருந்தாளிங்க…..…”

எதையும் அழுத்தமாக சொல்லும் போதுதான் இந்த அதி வரும் அப்பா வாயில். காரை நிறுத்தி இருந்தான் அதிபன்.

இவன் சைட் வின்டோவை இறக்கி விட்டு வெளியே எட்டிப் பார்க்கும் முன்….. அபயன் இருந்த புறம் ஓடி வந்து நின்றிருந்தாள் அவள்.

“கோழி இந்த பக்கம் வந்துட்டு…..”  அடுத்த புறம் அவளை தேடிய அதிபனுக்கு அந்த பெண் தன் புறம் வந்துவிட்டதை சொல்லியபடியே  தன் பக்க வின்டோவை இறக்கிக் கொண்டிருந்த அபயன் காதில் விழுகிறது….

“சார் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஸ்…..பக்கத்துல தான் கொண்டல்புரம்னு இறக்கிவிட்டாங்க….அப்ப இருந்து நடக்கிறேன்….எனக்கு இப்ப எந்த டைரக்க்ஷன்ல போகனும்னு கூட புரியலை….” அச்சரம் பிசகாமல் அவனைப் போல் தமிழில் பேசினாள் அவள்.

அசந்து போனது அபயன் மட்டுமல்ல அதிபனும் தான்.

அதேநேரம் அவள் பார்வையில் உள்ளே இருந்த இவர்களது அம்மா பட….

“உள்ள லேடிஸ் இருக்காங்க போல…..அப்பன்னா என்னை அந்த கொண்டல்புரம் பக்கம் ட்ராப் பண்ண முடியுமா…ப்ளீஸ்….எனக்கு ரொம்ப பயமா இருக்குது “ ….உரையாடலின் துவக்கத்தில் இருந்த சாதாரண தன்மை போய் கடைசி வரியில் அழுகை எட்டிப் பார்த்தது அவள் குரலில்.

“நாங்க ஆப்போசிட் டைரக்ஷன்ல…..” அவள் கெஞ்சுவதைப் பார்க்க அபயனுக்கு பரிதாபமாக இருந்தாலும் அவர்கள் கொண்டல்புரத்தை விட்டு வெளியே அல்லவா போய்க் கொண்டிருக்கிறார்கள்……அபயன் சூழ்நிலையை அவளுக்கு விளக்க தொடங்கிய நேரத்திற்குள் அவனுக்கு அடுத்து பின்னிருந்த கதவை பிடித்து திறக்க முயன்றாள் அவள். பயந்தில் அந்த பெண் நடுங்கிக் கொண்டிருப்பது அபயனுக்கு தெளிவாக புரிகிறது.

அபயனுக்கு பின்னிருந்தவர் அப்பா அல்லவா….அவருக்கு இப்பொழுது பக்கவாட்டு கதவை பிடித்து பயந்தபடி உலுக்கிக் கொண்டிருக்கும் அவள் சன்ஃபில்மையும் தாண்டி முழுவதுமாக பார்வைக்குப் பட…..”அதி கதவ திறக்காம என்ன பண்ற…?” அவசரமாக அவளுக்கு கதவை திறந்து விட தானும் முயன்று சென்டர் லாக்கினை மகன் இன்னும் திறக்கவில்லை என புரிந்து அவனை அதட்டினார்.

“அப்பா வேண்டாம்பா……அவ என்ன ப்ளான்ல ட்ராமா போடுறாளோ?...” மனமெல்லாம் அவள் பிக்பாக்கெட் அடித்த அழகில் நிரம்பி இருக்க அதிபனுக்கு இது ஏதோ திருட்டுப் ப்ளானக மட்டுமே தெரிகிறது. மறுக்க முயன்றான் அவன்.

இதற்குள் “அதி… …உள்ள மூனு வயசு பசங்க இருக்கீங்க…” என்றார் அம்மா….ஒரு பொண்ணுக்கு பயந்து கதவ திறக்க மாட்டியா நீ….என்பது அதன் முழு அர்த்தம்.

“அது இல்லமா….. என வேகமாக சொல்ல ஆரம்பித்தவன் பின் என்ன நினைத்தானோ ஒரு கணம் அழுத்தமாக கண்ணை மூடி திறந்துவிட்டு அமைதியாக சென்டர் லாக்கை ரிலீஸ் செய்தான். அண்ணனின் முக பாவத்தையும் பேச்சையும் கவனித்த அபயனின் முகம் சட்டென எழுந்த வேதனையில் சோர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.