(Reading time: 11 - 22 minutes)

06. என் மனதை தொட்டு போனவளே - VJ G

வீடு முழுக்க மனிதர்கள், கல்யாணக் களை வந்து விட்டது,  கல்பனாவின் பெற்றோரும்,உங்கள் எதிர் பார்ப்பு என்ன என்று?  நீலகண்டனைப் பார்த்து கேட்டார்கள் ,அதற்கு நீலகண்டனோ, ‘இதோ இந்தப் பெண்ணை, இதே புன்னகையோடு எங்கள் வீட்டுக்கு அனுப்புங்கள், அது மட்டுமில்லை அவள் எங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும்... அடிக்கடி பிறந்த வீட்டுக்கு போறேன் என்று போகக் கூடாது, அவள் வந்தாலும், தன் புருஷனுடந்தான் வரவேண்டும் என்று  அறிவுரை கூறவேண்டும்…. நீங்கள், இது ஒன்றுதான் சீராக நாங்கள் கேட்பது, அதற்காக, நான் பிறந்தவீடு போகக் கூடாது என்று சொல்லவில்லை, எப்பப்பாரு, அம்மா வீட்டில் போய் உட்கார்ந்தால், பிறகு கல்யாணம், புருஷன், பசங்க எதற்கு? எங்களைப் பொருத்தவரை, குழந்தைகள் சந்தோஷமாக குடும்பம் நடத்துவதைப் பார்க்கவேண்டும் அவ்வளவுதான், இதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்,’ என்றார் நீலகண்டன்  

‘எங்கள் வீட்டு பெண் அப்படி எல்லாம் இருக்கமாட்டாள், நீங்கள் சொல்வதும் சரிதான்,குழந்தைகள் சந்தோஷமாக வாழவேண்டுமென்று தானே இதெல்லாம் சொல்கிறீர்கள்,’ என்றார் கல்பனாவின் தந்தை

கல்பனா தானே முன் வந்து, நீலகண்டனின் காலில் விழுந்து, ‘நீங்கள் சொல்வதில் எந்த தப்பும் இல்லை  மாமா, உங்கள் அனுமதி இல்லாமல் நான் போகமாட்டேன்,’ என்றாள்

en manathai thottu ponavale

‘ஐயோ, அப்படி சொல்லவில்லையம்மா, நீங்கள் இருவரும் சந்தோஷமாக, சேர்ந்து இருக்கணும், கல்யாணம் செய்வதே அதற்காகத்தான், அதை விட்டு விட்டு வருஷத்தில் முக்கால் வாசி பிறந்த வீட்டில் இருந்து கொண்டால் புருஷனுடன் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும், ஊர் உலகம் வேறு விதமாய் பேசுமே, அதற்காகத்தான் சொல்கிறேன், நீ தவறாக எடுத்துக் கொள்ளாதேமா….’ என்று கூறினார்

'ஐயோ, இல்லை மாமா நான் தப்பாக எடுக்கவே இல்லை,' என்றாள்

‘சரி, நாம் ஒரே வாரத்தில் கல்யாணம் வைக்கலாமென்று நினைக்கிறேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார் நீலகண்டன், கல்பனாவின் பெற்றோரிடத்தில்  

‘ஒரே வாரத்திலா!‘

‘உங்கள் பக்கம் எவ்வளவு பேர் வருவார்கள்?’ என்று கேட்டார் நீலகண்டன்

‘இரு நூறு பேர், வருவார்கள், ஆனால் ஒரே வாரத்தில் என்றால், எங்களால் அத்தனைப் பேரை கூப்பிட முடியாது, இருந்தாலும்  நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும், உங்க இஷ்டம் போலவே செய்துடலாம்,’

‘சொல்லப்பா ருத்ரா, என்ன பண்ணலாம்?’ என்று கேட்டார் தாத்தா

'தாத்தா, ஒரு பெரிய ஹோட்டலா பார்த்து ஏற்பாடு செய்துடலாம் ,’ என்றான், ‘அப்படியே நம்ம வனிதா கல்யாணமும் கூட வைச்சிடலாம்' என்றான்

'சரிப்பா நீ சொன்னால் சரி, அப்படியே ஏற்பாடு பண்ணிடு, ரொம்ப முக்கியமானவங்களுக்கு, மட்டும் போன் பண்ணி சொல்லிடலாம்,’ என்றார்

‘சரி நாங்க கிளம்புகிறோம் சம்பந்தி,’ என்று கிளம்பினர், கல்பனா வீட்டார்

எல்லோரும் சென்றுவிட்டார்கள் ,

'கமலாவை வரச் சொல்,' என்று சொல்லி தன் ரூமுக்கு போய் விட்டார், ருத்ரா கூடவே போனான், தாத்தா கோபப்படாமல் பார்த்துக் கொள்ள,

கணேஷும், கமலாவும் நீலகண்டன் ரூமுக்கு போனார்கள்,

நீலகண்டன் அவர்களை உட்காரச் சொன்னார், கணேஷ் உட்கார்ந்தான், கமலா நின்று கொண்டாள், ' என்னம்மா, பிறந்த வீட்ல, எல்லோரும் நலமா?' என்று கேட்டு ஒரு பார்வை பார்த்தார்

'ம்ம், எல்லோரும் நலம்' என்றாள்

'நல்லது, இங்கே, உன் புருஷன், உன் பெண்களை, விசாரித்தாயா? அவர்கள் நலமா? என்று, ஏன்னா, அவர்களுக்கும், உனக்கும் உள்ள தொடர்பு அப்படித்தான் இருக்கிறது, நீ இப்படி உன் பிறந்த வீட்டார்களை விசாரிக்க வேண்டும், அவர்கள் இங்கு வந்து ,நீ குடும்பம் நடத்தும் அழகை பார்க்க வேண்டும்…. ஆனால் நீயோ, அங்கேயே இருக்கிறாய், நீ மாதத்தில் ஐந்து நாட்கள் இங்கிருக்கிறாய், மீதி நாட்கள் உன் பிறந்த வீட்டில் இருக்கிறாய். உன் பெண்கள் என்ன படிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியுமா, சரி ஒன்று கேட்கிறேன், உன் புருஷனுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியுமா...சரி உன் புருஷன் இதே மாதிரி நீ வீட்டில் இருக்கும்போது  லேட்டாக வீட்டுக்கு வந்தால், நீ எப்படி நடந்துப்ப? சரி, உன் தம்பி பெண்டாட்டியும் உன்னை மாதிரி அடிக்கடி அவர்கள் பிறந்த வீட்டுக்கு போகிறாளா? என்று கேட்டு, எதுக்காவது பதில் சொல்லு,’ என்று கேட்டார்

'எல்லாவற்றிற்கும் காரணம், எனக்கு இங்கு பிடிக்கவில்லை, நான் குடித்தனம்  போக வேண்டும் என்று சொன்னேன், ஆனால் இவர் வரவில்லை...'என்றாள் கமலா

'ஓ, அப்படியா! பிடிக்காமல் எதற்காக மாதத்தில் ஐந்து நாட்கள் இங்கு வருகிறாய், ஏன் இந்த மூன்று பெண்களைப் பெற்று அவர்கள் வாழ்வை பாழாக்கினாய், இந்த விஷயத்தை ஏன், முன்னாலேயே எனக்குச் சொல்லவில்லை?,'

'நான், ரொம்ப வருஷமாகவே... இவர, உங்களிடம் பேசச் சொன்னேன், ஆனால் இவர்தான், உங்களிடம் பேசமாட்டேன்,  நான் தனியாக வரமாட்டேன் என்று விட்டார், அதனால் தான்,  நான் என் வீட்டுக்கு போனேன்' என்றாள் கமலா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.