(Reading time: 17 - 33 minutes)

24. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

னந்த் குடும்பத்தவர் மன்னிப்பு கேட்டு வெளியேறிய அடுத்த நொடியே ராமமூர்த்தி, "வசந்த், என்ன நடக்கிறது இந்த வீட்டில்.. எப்பொழுதிலிருந்து நீ இப்படி எடுத்தேன், கவிழ்த்தேன்னு இருக்க ஆரம்பிச்சே?.. உன்னை என்னவோன்னு நினைச்சேன் நான்.. எப்படிடா காதல், ஊதல் இந்த கண்ணராவியெல்லாம்?... நம்மாத்துக்கு இதெல்லாம் சரி படுமா?.. உனக்கு கூட பிறந்த அக்கா இத்தனை வயசாகியும், கல்யாணத்துக்கு காத்துக் கொண்டிருந்திருக்கா.. நீ என்னடாவென்றால், படிக்கிற காலத்திலேயே காதலிக்க தொடங்கியிருந்திருக்கே?.. நான் இதை கொஞ்சம் கூட உங்கிட்ட எதிர்ப்பார்க்கவில்லடா?"

"சாரிப்பா.. எதோ ஒரு வயசு கோளாறு.. நான் எப்படி இப்படி காதல்ல மாட்டிண்டேனோ தெரியலை.. நான் அவாகிட்ட சொன்னது போல, இதெல்லாம் எப்ப வேணா, யாருக்கு வேண்டுமானால் வரலாம்.. ஆனா இந்த காதல் எனக்கு வந்த சமயமும் சரியில்லை,  வாய்ச்ச நபரும் சரியில்லை.. ப்ளீஸ், இது பற்றி இனி பேச வேண்டாம்.. இந்த மாதிரி இனி நடக்காது.. அதுக்கு நான் உத்தரவாதம் தரேன்.. இனிமே என்னோட நோக்கம் எல்லாம், எப்படி என் டிரையினிங்கை நல்லபடியா முடிச்சு, கலெக்டர் போஸ்டுல உட்காரரதுதான்".. என்று வசந்த் தழுதழுத்தபடி தலை குனிய,

"சரி.. போறது விடுங்கோன்னா.. ஏதோ தெரியாதனமா இப்படி நம்ம குழந்தை காதல்ல மாட்டிண்டுட்டான்.. பாருங்கோ எப்படி தலை குனிஞ்சுண்டு வெட்கி நிக்கறான்.. இத்தோட பேச்சை விடுங்கோ"  என சாரதா தன் அருமை பிள்ளைக்கு பரிந்து கொண்டு வர,

vasantha bairavi

ராம மூர்த்தி ருத்ர மூர்தியானார்..

"சாரதா .. நீ கொஞ்சம் வாயை மூடிக்கறையா?.. நடுவில வந்து குறுக்கிடாதே.. இப்படி நீ அவனை எதற்கெடுத்தாலும் ஒரே பையன்னு செல்லங்கொடுத்து குட்டி சுவராக்காதே.. எனக்கும் தெரியும், தோளுக்கு மேலே வளர்ந்த பையன் கிட்டே எப்படி நடந்துக்கணம்னு"  என்று தன் பார்யாளை அதட்டியவர்,

"ஏன்ப்பா, வசந்த்.. நீ இவ்ளோ தூரம் இதை வளர விட்டிருக்க வேண்டாமே.. காதலிச்சே சரி, அப்ப காதலிச்சவன் அதுலேயே நின்னு ஒழுங்கா கல்யாணம் பண்ணியிருக்கலாமே?.. ஒன்னு பெத்தவா, சம்மத்ததோடு கல்யாணம் பண்ணிக்கனும், இல்லைன்னா தைர்யமா எதிர்த்து நிக்கனும்.. நீ இரண்டு வகையாவும் இல்லை.. என்னவோ ஆத்துல ஒருக்கால், சேத்துல ஒருக்கால்ன்னு நிக்கறே.. உனக்கு என்ன இதெல்லாம் விளையாட்டாப் போச்சா"..

"ஏன் ஒரு பொண்ணை காதலிக்கிற துணிவு இருந்தவன், முதல்லேயே தெரிஞ்சுண்டு இருந்திருக்கனும், அவ எப்படிப்பட்டவ என்று.. என்னவோ, பழகிப் பார்த்தேன், அவளோட குணம் எனக்கு பிடிக்கலை.. அவ செல்பிஷ், அப்படி, இப்படி சொல்லறது எந்த விதத்துல நியாயம் சொல்லு.. நீ இப்படி ஒருதலைப் பட்சமா முடிவு எடுத்துருக்கிறாயே.. இது சுயனலம் இல்லையா?..நாம என்ன வெளினாட்டு கலாசாரத்தையா இங்கே ஃபாலோ பண்ணரோம்.. நம்ம நாட்டு வளர்ப்பு முறைக்கு அதெல்லாம் சரியா வருமா என்ன"..

"நீ செஞ்சது தப்பு வசந்த்.. என்ன படிச்சு என்ன பெரிய உத்யோகத்துக்கு போனா என்ன, ஆம்பளை புத்தியை நீயும் காண்பிச்சிட்டேயே.. ஒரே நிமிஷத்துல நீ அந்த பொண்ணோட நடவடிக்கை பிடிக்கலைன்னு சொல்லிட்டே?.. சரி, உனக்கென்ன, நீ ஆண்,.. அந்த பெண்ணுக்கு தானே மொத்த அவமானமும்..  இதுல அவாத்துலேயே வேறே இத்தனை நாள் உத்யோகம் பார்த்திருக்கே"..

"அந்த பொண்ணு கேட்டதுல என்ன தப்பு.. நீயே சொல்லு..ஒரு வேளை நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சிக்காதே... நீ இந்த பொண்ணு பைரவியை உன் மனசுல நினைச்சுண்டு அவளை ஒதுக்கறயா என்ன?... இதுல இரண்டு பொண்ணு வாழ்க்கை சம்மதப் பட்டிருக்கு.. எனக்கே இந்த பொண்ணு பைரவி எதிரிலேயே கேட்க கஷ்டமாத்தான் இருக்கு.. ஆனா வந்துட்டு போன அந்த கவிதா, இவளை காரணமா சொல்லி நீ அவளை ஒதுக்கறேன்னு சொல்லிட்டு போயிருக்கா.. நீயும் அதுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை"..  என ராமமூர்த்தி கேட்க,

பதறிய சாரதா, " ஏன்னா என்ன பேசறேள் நீங்கோ"

"நீ சும்மாயிரு சாரு"  என்று அவளை அடக்கியவர்,  "வசந்த் .. நீ சொல்லு.. பேச்சுன்னு வந்தாச்சு.. நீ ஏற்கனவே ஒருத்தியை காதலிச்சேன்னு சொல்லிட்டு, இப்ப அவளை மறுத்துட்ட .. நான் உன்னை நம்பறேன்.. உன் மேலே தப்பே இல்லை, நீ காதலிச்சவள் தப்பா போயிட்டா.. அடுத்த வீட்டு பெண்ணை பற்றி நாம் பேச வேண்டாம்.. அவளும் யாரையாவது கல்யாணம் பண்ணிண்டு நன்னா இருக்கட்டும்.. அதை விடு, இப்ப சொல்லு, நீ இந்த பெண் பைரவியை விரும்பறீயா என்ன?"

"அம்மாடி பைரவி, இப்படி நான் உன் எதிரிலேயே பேசறதுக்கு என்னை மன்னிச்சிக்கோம்மா.. உங்க அப்பா, அம்மா உன்னை நம்பி இங்கே அனுப்பி வைச்சிருக்கார்.. நீ எங்காத்து மனுஷியாயிட்டே.. உன்னை ஒருத்தர் ஒரு வார்த்தை தேவையில்லாமல் பேசினாலும், அது உன்னை பாதிக்கும்.. இப்போ பேச்சு உன்னை என் பையனோட இணைச்சி அந்த பொண்ணு பேசிட்டு போயிட்டா.. அதான் இப்படி கேட்க வேண்டியதா போச்சு?"  என்றவர்,

"டேய் வசந்த், இப்ப சொல்லு, நீ இந்த பொண்ணு பைரவியை காதலிக்கிறாயா என்ன?.. அப்படின்னா இப்பயே சொல்லு.. அவளுக்கும் இதில் இஷடம் இருந்தால் நானே அவாத்துல பேசறேன்"  என்று நேரடியாகவே ராமமூர்த்தி கேட்க,

பைரவி இந்த பேச்சை கேட்டு அதிர்ந்து விட்டாள்.. "அய்யோ, மாமா .. நீங்க என்ன பேசறேள்?"  என்றபடி சாரதா மாமியை பார்க்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.