(Reading time: 13 - 25 minutes)

02. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

கிறிஸ் சீக்கிரம் வா நேரமாகுது? கிரிக்கெட் மட்டைகள், கிரிக்கெட் பந்து சகிதம் சிறுவர் பட்டாளம் வாயிலில் வந்து நின்றது.

 “என்னடா, எல்லோரும் விளையாட புறப்பட்டாச்சா?

“ஆமாம் அத்தே”… தீபன் பதில் கூறினான்.

“லீவு விட்டதும் எல்லோரும் வெயிலில அலைய ஆரம்பிச்சிட்டீங்களா? உள்ளே வாங்களேண்டா எல்லோருக்கும் ஜூஸ் போட்டுத் தாரேன்”.

“வேண்டாம்மா எங்களுக்கு நேரமாகிடுச்சி” அவசரமாக புறப்பட்டான் கிறிஸ்.

“என்னதான் அவசரமோ?” சொல்லித் திரும்பியவள் அவசர அவசரமாக இடது கால் செருப்பை வலது காலிலும், வலது கால் செருப்பை இடது காலிலும் போட்டு அண்ணன் பின்னால் சென்ற இரண்டரை வயது வாண்டைப் பார்த்து,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

 “அனிக்கா (Anikka) குட்டி எங்கடா போற? எனக் கேட்க, விறு விறுவென சென்றவள்

“கித் அண்ணா கிக்கெட், கிக்கெட்” என்று அவன் காலைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

 கையில் ஸ்டம்ப்களோடு நின்றுக் கொண்டிருந்தவனுக்கு சிடு சிடுப்பாக இருந்தது. ஆனால்,அவளைப் பார்த்த அவன் நண்பர் குழாமுக்கு உற்சாகம் கூடிற்று, சும்மாவா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானவளாயிற்றே. “அனிக் குட்டி” என அவளை முத்தமிடக் குனிந்த ராஜேஷிடம்,

 “ராஜேஷ் இப்படில்லாம் பாப்பாவ கிஸ் பண்ணக் கூடாது, இன்ஃபெக்ஷன் ஆகிடுமாம் டாக்டர் சொல்லியிருக்காங்க, பாப்பாக்கும் யாரும் கிஸ் செய்தா பிடிக்காது. ரொம்ப அழுவா. இங்கே பாரு இப்படி கிஸ் செய்தா அழ மாட்டா”. அவள் கன்னத்தை தன் விரல்களால் தொட்டு தன் விரல்களை முத்தமிட்டான்.

 பார்த்துக் கொண்டிருந்த சாராவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது. அண்ணன் தங்கைக்குமிடையே 10 வருட வித்தியாசம் அதனாலோ என்னவோ அவளை அவ்வளவாக பாதுகாக்கும் குணம் அவனுக்கு. இது வரை தன் தங்கையை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், நண்பர்கள் யாரும் முத்தமிட அவன் அனுமதித்தது இல்லை, ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து விடுவான். ஒருவழியாக அவன் நண்பர் குழாம் அனியைக் கொஞ்சி முடித்து புறப்படுகையில் கால்களை உதைத்துக் கொண்டு தானும் வருவதாக அடம் பிடிக்க ஆரம்பித்தாள் அவள்.

 “அம்மா பாப்பாவை தூக்கிக்கோங்களேன் ப்ளீஸ்” எரிச்சலோடு பேசியவனிடம்,

 “ப்ளேகிரவுண்ட் பக்கத்திலதானடா இருக்கு கூட்டிட்டு போய் ஐஞ்சு நிமிஷம் கழித்து திருப்பி கொண்டு விடுங்கடா, எதுக்கு பிள்ளையை அழ விட்டுகிட்டு” என்ற தாயை முறைத்துக் கொண்டு,

 "அம்மா என்னம்மா? இப்போ யார் இவளைத் தூக்கி கிட்டு வருவா?" கையில் இருக்கும் ஸ்டம்ப்கள் இருந்த பையைக் காட்டி விளையாடப் போகும் அவசரத்தில் சலித்துக் கொண்டான் அவன்.

 ஒவ்வொருவர் கையிலும் கிரிக்கெட் விளையாடத் தேவையான ஒவ்வொரு பொருள் இருக்க, யார் அவளைத் தூக்குவது என்ற பிரச்சினைக்கு சுலபமாக தீர்வுச் சொன்னான் தீபன்

 “ரூபன் உன் கைல தான் எதுவும் இல்லல்ல பாப்பாவ தூக்கிக்கிறியா நீ? என்ற தீபனிடம்,“சரிண்ணா” என முன் வந்தவன் “வா பாப்பா” எனத் தூக்கிக் கொண்டான். ஒரு வழியாக சிறுவர் பட்டாளம் கிரவுண்ட் நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

 தங்கையை நிழலில் உட்கார வைத்து விட்டு ரூபனையும் துணைக்கு இருக்கச் சென்ற கிறிஸ்ஸிற்கு முதல் பேட்டிங் கிடைத்தும் மனம் கேட்காமல் 2 முறை தங்கையை வந்துப் பார்த்துச் சென்றான். மறுபடியும் ரெண்டே நிமிடத்தில் திரும்பி வந்து நின்றான்.

“ரூபன் ரொம்ப வெயில் அடிக்குது பாரு, அதுமட்டுமில்ல யாராவது சிக்ஸர் அடிக்கும் போது பாப்பா மேல பட்டுட்டா… பேசாம இவளை வீட்டில விட்டுட்டு வந்திடுறியா?, நீ திரும்ப வந்ததும் உனக்கு பேட்டிங்க் தரேன்” என்று நின்றான்.

 அவனுக்கும் அந்த டீலிங்க் பிடித்திருக்க “பாப்பா வீட்டுக்குப் போலாமா” என்றதும் அதுவரை வேடிக்கைப் பார்த்தது சலித்ததோ என்னமோ "சரி" என்று தலையாட்டியவளை தூக்கிக் கொண்டு ரூபன் திரும்பி விடச் சென்றான்.

 “புரிந்தும் புரியாமலும் ஏதேதோ மழலையில் மிழற்றிக் கொண்டு கன்னம் குழிய சிரித்துக் கொண்டு, அவன் முகத்தில் தன் கைகளால் தொட்டுப் பேசிக் கொண்டு வந்தவளைப் பார்த்து ரூபனுக்கு உற்சாகமாக இருந்தது. அவள் வயதில் அவனுக்கும் வீட்டில் தம்பி இருக்கின்றான்தான். ஆனால்,அம்மாவிடம் எந்த நேரமும் ஒட்டிக் கொண்டே திரியும், கிட்டே போனாலே சிடு சிடுத்து அழத்துவங்கும் அவனை இவன் அவ்வளவாகத் தூக்கியது கிடையாது.

 “பேசாம நம்ம அம்மாவும், அத்த வாங்கின மாதிரி பாப்பா வாங்கியிருக்கலாம் தம்பி பாப்பா உவ்வே” என்று நினைத்துக் கொண்டான். மற்ற வாண்டுகளைப் போலவே அவனுக்கும் அவளுக்கு முத்தம் கொடுக்கத் தோன்றிற்று, கிறிஸ்ஸின் பார்வையிலிருந்து தூரம் வந்ததை நிச்சயப் படுத்திக் கொண்டு "செல்லக் குட்டிப் பாப்பா"வெனச் சொல்லிக் கொஞ்சியவனாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். முத்தமிட்ட பின் தான் அவள் அண்ணன் சொன்னது ஞாபகத்திற்கு வர, எங்கே தான் முத்தமிட்டதால் அழுது விடுவாளோ என அவன் கலவரமாக அவளைப் பார்க்க, அனிக்காவோ கைக் கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

காட்சி சட்டென்று மாறியது ….

“பதில் சொல்லுங்கறேன்ல” ஏறத்தாழ உறுமினான் அவன்.

 எதிரில் நின்றவளுடைய வார்த்தைகள் ஏற்கெனவே அவனது கோபத்தை தூண்டி விட்டிருக்க ஆத்திரத்தில் அவள் கழுத்தை நெறித்து விடுவோமோ? என்னும் அச்சத்தில் தன் கைகளை வெகு பிரயத்தனப் பட்டு இறுக்கிக் கொண்டிருந்தான் அவன்.

 கண்களில் கலக்கமும், கண்ணீரும் வழிந்து நின்ற அவளின் தோற்றம் அன்று அவனை அசைக்கவே இல்லை.

அதன்பின் அவள் எப்போது பதில் சொன்னாள், அவன் கை எப்போது அவள் கன்னங்களில் வேகமாய் இறங்கியது என்று நினைவில்லை. அவள் மயங்கிச் சரியவும் தான் அவனுக்கு தன்னுணர்வு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.