(Reading time: 8 - 16 minutes)

02. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

                   தூக்கங்களை தூக்கிச் சென்றாய்.... ஏக்கங்களை தூவி சென்றாய்

                  காதல் எனை கேட்கவில்லை...... கேட்டால் அது காதலில்லை                   

வாங்கோ, வாங்கோ வாங்கோ ஜானகி.  வாங்கோ மாமா.  எப்படி இருக்கேள்.  கௌரியும், ஹரியும் போன் பண்ணினாளா”, வீட்டிற்கு வந்த தன் சம்மந்தியை ஆரவாரமாக வரவேற்றார் லச்சு மாமி.  

 கௌரி கல்யாணத்தின் போது பார்த்த லக்ஷ்மி மாமியா என்று சந்தேகப்படும் அளவு மாற்றம் அவரிடம்.  எல்லாம் கௌரி அவர்கள் வீட்டிற்கு வந்த இந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்ததுதான்.  தான் மட்டும் வாய் ஓயாமல் பேசுவது இல்லாமல், தன் மாமியாரையும் சேர்த்து மாற்றி இருந்தாள்.  ஏற்கனவே கௌஷிக் பேசுவதற்கே திருப்பி கவுன்ட்டர் அடிக்கத் தெரியாமல் முழிக்கும் ஸ்வேதா இப்பொழுது லச்சுவும் அந்த குரூப்பில் சேர, மொத்தமாக அவள் வாய் அடைந்து போயிற்று.  அதுவும் கௌஷிக்கும், கௌரியும் சிங்கப்பூரில் இருந்து வந்துவிட்டால் அவர்கள் மூவரும் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.   மிக நன்றாக பேசும் பத்மநாபனே இப்பொழுதெல்லாம் சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கிறார்.   

“நாங்க நன்னா இருக்கோம் மாமி,  நீங்க எப்படி இருக்கேள்.  போன வாரம் MVக்கு போகணும்ன்னு சொன்னேளே.  போயிட்டு வந்துட்டேளா.  டாக்டர் என்ன சொன்னார்.  நீங்க அங்க வர்றச்ச அப்படியே ஆத்துக்கு வருவேள்ன்னு நினைச்சேன்”, பதில் குசலம் விசாரித்தார் ஜானு மாமி. 

ஐந்து வருடத்திலேயே லச்சு மாமி இத்தனை பேசுகிறார் என்றால், ஜானு மாமி அவள் பிறந்ததில்  இருந்தே கௌரியுடன் இருப்பவர், அப்பொழுது அவர் எத்தனை பேசவேண்டும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“போயிட்டு வந்தாச்சு மாமி.  எப்பவும் சொல்றதேதான்.  அதே மாத்திரையை கண்டின்யூ பண்ண சொல்லி இருக்கார்.  கார்த்தாலையும், சாயங்காலமும் வாக்கிங் ரெகுலரா போக சொல்லி இருக்கார்.  நானும், என்னோட ப்ரிண்டும் சேர்ந்து வந்தோம் ஜானகி, அதான் ஆத்துக்கு வர முடியலை.   ஸ்வேதா கிளம்பினப்பறம் ஒரு நாள் சாவகாசமா நானும், இவரும்  வரோம்”

“கண்டிப்பா வாங்கோ.  மாமா ஆத்துல இல்லையா?”

“ஸ்வேதாக்கு ஏதோ மருந்தெல்லாம் வேணும்ன்னு கேட்டா.  அதை வாங்க பக்கத்துல இருக்கற மெடிக்கல் ஷாப்க்கு போய் இருக்கார்.  இப்போ வந்துடுவார்.  நீங்க உக்காருங்கோ.  நான் காப்பி கலந்து எடுத்துண்டு வரேன்”

“எதுக்கு மாமி ஸ்ரமம்.  இப்போதான் ஆத்துல குடிச்சுட்டு கிளம்பினோம்”

“நன்னா இருக்கே.  இதுல என்ன ஸ்ரமம் இருக்கு.  நீங்க குரோம்பேட்டைல இருந்து கிளம்பி வேளச்சேரிக்கு வர்றதுக்குள்ள அதெல்லாம் எட்டூருக்கு ஜீரணம் ஆயிருக்கும்”, லச்சு மாமி சொல்லியபடியே சமயலறைக்கு செல்ல, அவருக்கு உதவும் சாக்கில் ஜானுவும் உடன் சென்றார்.  வந்தவுடன் தன் சம்மந்தியைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பை மட்டுமே உதிர்க்க ராமனுக்கு கேப் இருந்தது.  அதன் பிறகு அதற்குக்கூட கேப் விடாமல் ரெண்டு மாமியுமே பேசிவிட்டார்கள்.  பாவம் அவரும், பத்து மாமா எப்பொழுது வருவார், என்று ஆவலுடன் வாசலையே பார்த்திருந்தார்.  சிறிது நேரத்தில் பத்துவும் வந்து சேர, ஸ்வேதாவும் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க கீழே இறங்கி வந்தாள்.

“வாங்கோ மாமா.  எப்படி இருக்கேள்.  மாமியும் வந்திருக்காளா?”

“நன்னா இருக்கோம்மா.  மாமி உள்ள அம்மாவோட பேசிண்டு இருக்கா.  நீ பாக்கிங் எல்லாம் முடிச்சுட்டியா?”

“அல்மோஸ்ட் ஓவர் மாமா.  கடைசி நிமிஷம் ஏதானும் விட்டு போச்சுன்னா எடுத்து வச்சுக்கணும்”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பத்து உள்ளே நுழைந்து, ராமனை குசலம் விசாரித்தார்.  அதற்குள் லக்ஷ்மியும்,ஜானகியுமாக சேர்ந்து  அனைவருக்கும் காபி, டிபனை கொண்டு வந்தனர்.

“ஸ்வேதா எல்லா வேலையும் ஆயிடுத்தா.... மறக்காம எல்லாம் எடுத்து வச்சுண்டுட்டயா”

“ஆச்சு மாமி.  மூணு மாசம்தானே.  ரொம்ப ஜாஸ்தி சாமான் இல்லை மாமி.  அங்க என்னோட friend கூடத்தான் தங்கப்போறேன்.   சமையலுக்கு வேணுங்கறது அவ ஏற்கனவே வச்சுண்டு இருக்கா”

“ஹரிக்குதான் பொடி, ஊறுகாய் எல்லாம் பண்ணிக்கொடுத்திருக்கேன் ஜானகி”

“எதுக்கு மாமி அதெல்லாம்.  அவன் முக்காவாசி வெளிலதான் சாப்ட்டுண்டு இருக்கான்.  அவன் போகும்போது நான் பண்ணிக்கொடுத்தாலே இதெல்லாம் எடுத்துண்டு போக முடியாதுன்னு குதிப்பான்.  பாவம் குழந்தையே இங்க இருந்து அத்தனாம் தூரம் தனியாப் போறது.  அவளை எதுக்கு கஷ்டப்படுத்தறேள்”

“இதுல என்ன மாமி கஷ்டம்.  அவளாத் தூக்கிண்டு போகப்போறா.  இங்க ஏத்தினா அங்க போய் எறங்கப்போறது.  அங்க இருந்து கார்ல அவ இருக்கற எடத்துக்குப் போகப்போறா.  அப்பறம் என்ன”

“என்ன சொல்லுங்கோ மாமி.  இருவது மணி நேரம் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு போகணும்ன்னா எத்தனை கஷ்டம்.  இதா இருக்கற சிங்கப்பூர்.  கொஞ்சம் சத்தமா பேசினா போன் இல்லாமையே பேசறது கேக்கும்.  அதுக்கே கௌரி, இல்லாத அலட்டு அலட்டிப்பா.  ஆனா ஸ்வேதா போறது எத்தனை தூரம்.  சென்னைல இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல டெல்லி போறா மாதிரி, அத்தனை நேரம்.  அட்லீஸ்ட் ட்ரைன்லயானும் வேடிக்கை பாக்கலாம்.  இங்க அதுவும் முடியாது.  சீட்டோட சீட்டா கட்டிப்போட்டு ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு கஷ்டம்தான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.