(Reading time: 9 - 18 minutes)

அமேலியா - 01 - சிவாஜிதாசன்

Ameliya

நீங்கள் அதிசயங்களை நம்புகிறீர்களா? திடீரென உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாத ஓர் இடத்தில நீங்கள் நிற்கிறீர்கள் என்றால் என்ன நினைப்பீர்கள்? பகலில் நிலவு தெரியாது என்பதனால் நிலவு இல்லவே இல்லை என உங்களால் கூற முடியுமா? அதிசயங்கள் பார்ப்பதற்கு விநோதமாக இருந்தாலும் அதுவும் நடக்கக்கூடிய ஒன்று தான்.

அப்படி ஓர் அதிசயத்தை ஒருத்தி சந்திக்கிறாள். தன் வாழ்வு இப்படியொரு திசையில் பயணமாகும் என்று இதுவரை அவள் கற்பனை கூட செய்ததில்லை. விதியின் கண்கள் அவள் மீது விழுந்ததினால் நடக்க சாத்தியமே இல்லாத அதிசயம் ஒன்று அவளை தன்னுடன் அழைத்துச் சென்றது. நிச்சயம்  அவள் இதை விரும்பவில்லை. ஆனால், என்ன செய்வது? கடலில் விழுந்தால் நீந்தித்தானே ஆக வேண்டும். அலையோடு போராடி கரையைத் தேட வேண்டும். இல்லையேல், மரணத்தை அணைக்கவேண்டும். அவளது முடிவு என்ன? கரையை அடைவாளா ? தன் விதியை முடித்துக்கொள்வாளா?

இதுவரை குடும்பத்தினுள்ளேயே பயணித்த அவளது வாழ்க்கை இன்று தனியாக பயணமாகிறது. இந்தப் பயணம் எளிதானதல்ல. ஆனால், என்ன செய்வது? அவள் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டாள். வாழ்க்கை என்பதே பயணம் தானே. வாருங்கள். அவளோடு சேர்ந்து பயணத்தைத் தொடங்குவோம்.

அவள் யார் என்று கேட்கிறீர்களா? 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவள் தான் அமேலியா. 

கோரமான கார்காலம். மழையை ரசிப்பவர்கள் கூட வெறுக்கும்படி அமைந்தது அந்த நாள். கடல் அலைகள் பனைமர உயரத்திற்கு எழுந்து விழுந்தன. அந்த அலைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் கர்வத்துடன் குலுங்கியபடி சென்றுகொண்டிருந்தது அமெரிக்காவின் ராணுவக்கப்பல் ஒன்று.  தூரத்தில் இருந்து பார்த்தால் ஓர் ஊரே மிதந்து செல்வது போல இருந்தது. அந்த அளவிற்கு பெரியாதாய் இருந்தது ராணுவக் கப்பல்.

அந்த கப்பல் கவிழாது என்ற நம்பிக்கை இருந்தாலும், எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடத்திக்காட்டும் இயற்கைக்கு முன்னால் அந்த நம்பிக்கைக்கு உத்திரவாதம் இல்லையே!

நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் அந்தக் கப்பலில் இருந்தார்கள்.  அதில் பயணித்த ராணுவ வீரர்கள் எல்லாம் ஒருவித பயத்துடனே பயணித்தார்கள்.சிலர்  மது அருந்தியபடி சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கொந்தளிக்கும் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் உறக்கம் தேவைப்பட்டவர்கள் உறங்கினார்கள். இப்படி அவரவர் வேலையை செய்த படி கடலை கடந்து கொண்டிருந்தார்கள் .

கோர மின்னல், காதைக் கிழிக்கும் இடி, கொந்தளிக்கும் கடல், குலுங்கும் கப்பல் இவையெதுவும் தெரியாமல் அந்தக் கப்பலின் மேல் மாடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழுதடைந்த பீரங்கியினுள் மயக்க நிலையில் படுத்துக்கொண்டிருந்தாள் அமேலியா.

அவள் எதற்காக அங்கே இருக்கிறாள்?

வாருங்கள்! அதற்கான காரணத்தையும் அவள் வாழ்ந்த வாழ்க்கையையும் ஒரு முறை பின்னோக்கி சென்று பார்த்து வருவோம்.

ராக், 2003 ஆம் ஆண்டு.

சதாம் ஹூசைனைத் தேடி அமெரிக்கா ராணுவம் அலைந்து கொண்டிருந்த காலம். இருக்கும் சிறிது நிம்மதியையும் பறிகொடுத்து உயிரோடு இருந்தால் போதும் என வாழப் பழகிக்கொண்ட மக்கள்.

தினம் தினம் பல மரணங்கள். மக்களைத் தீவிரவாதிகளாய்ப் பார்க்கும் ராணுவம்.  அதனால், வெளியுலக தொடர்பையே துண்டித்துக்கொண்டு வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள். நிச்சயமாக, நரகம் எவ்வாறு இருக்கும் என கடவுள் நம்மை ஊகிக்க வைத்த காலம்.

கடைத்தெருவுக்குக் கூட சுதந்திரமாக செல்ல முடியவில்லை. இரவில் பத்து மணிக்கு மேல் வீட்டை விட்டு யாரும் வெளிவருவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழல் அமேலியாவிற்கு புதுமையாகவும் பயமாகவும் இருந்தது. 

அமெரிக்காவினர் அனைவரும் சைத்தானின் பிள்ளைகள் என அவளுடைய அப்பா முகமது யூசுப் சொல்வது உண்மை தான் என அவள்  நம்பினாள். காரணம், அவர்கள் நடந்து கொள்ளும் விதம். பெண்களை சோதனை செய்கிறேன் என்ற பேரில் வரம்பு மீறுகிறார்கள். யா அல்லாஹ்! எதற்கு இந்த சோதனை! அமேலியா வெளியில் செல்லவே பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

அமேலியா ஒன்றும் தெய்வப்பிறவியோ சாகசங்கள் நிகழ்த்தும் துணிச்சல் நிறைந்தவளோ அல்ல. அவள் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஏழ்மையான பெண். அப்படியென்றால், அவளது வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா? நிச்சயம், நீங்கள் எதிர்பார்க்கும் சுவாரசியங்கள் நிறையவே உண்டு.

அமேலியாவின் தந்தை முகமது யூசுப், மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. அவரது தினசரி வருமானத்தில் தான் குடும்பம் என்னும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

வெளியுலக நிகழ்வுகள் ஏதும் தெரியாமல் பருவ வயதை அடைந்தும் சிறிய குழந்தையைப் போல அமேலியாவை வளர்த்து வந்தார்கள் அவளது பெற்றோர்.

அமேலியா பள்ளிப் படிப்பு தொடங்கியதில் இருந்தே ஓவியம் தான் அவளது தோழி. படிப்பில் சுமாராக இருந்தாலும் ஓவியம் வரைவதில் எல்லோரையும் வியக்க வைத்தாள். காரணம், அவள் வரையும் ஓவியம் அவ்வளவு உயிர்ப்போடு இருக்கும்.

ஓவியக் கலையே அவளது தனிமைக்கும் ஆறுதல் தந்தது. சில நேரம் காரணமே இல்லாமல் தன் மனதில் இருக்கும் கற்பனை கொண்டு ஓவியம் வரைவாள். அதை நீண்ட நேரம் பார்த்தபடியே இருப்பாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.