(Reading time: 44 - 87 minutes)

37. கிருஷ்ண சகி - மீரா ராம்

krishna saki

னதில் இருந்த பாரம் இறங்கிவிட்டிருந்த திருப்தியுடன் அனைவரும் இருக்க, மகத்தும், ருணதியும் மட்டும் உள்ளுக்குள்ளே புழுங்கினர்…

அருள் இல்லத்திற்குள் அனைவரும் நுழைவதைக் கண்ட பவித்ராவும், பார்வதி பாட்டியும் அவர்களின் அருகில் வந்து குழந்தைகளை தூக்கி முத்தமிட, ஜித்தின் அருகில் நின்று கொண்டிருந்த கன்யா அப்போது தான் கவனித்தாள் அதனை…

பவித்ரா மற்றும் பார்வதி பாட்டியின் அருகே சென்றவள், அவர்கள் தூக்கி வைத்திருந்த குழந்தைகளை பார்த்தாள்…

முதலில் அவள் பார்வை சென்றது துருவனிடத்தில் தான்… அப்படியே ஜித்தினை உரித்து வைத்திருந்த அவனை அள்ளிக்கொண்டாள் கன்யா…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“துருவ்…” என்றபடி அவனை தூக்கி முத்தமிட்டவளுக்கு எங்கிருந்து தான் கண்ணீரும் வந்ததோ தெரியவில்லை… அழுது கொண்டே அவள் அவனை முத்தமிட, அதுவரை உறங்கிக்கொண்டிருந்த துருவ் அவளின் கண்ணீர் பட்டு விழிக்க, இதுவரை பரீட்சயமில்லாத ஒருவரிடத்தில் தான் இருப்பதை உணர்ந்தவன், அவளையேப் பார்த்தான்… பின் மெல்ல அவளின் கண்ணீரை துடைத்தவன், “ஏன் அழறீங்க?... அழாதீங்க….” என சொல்ல, அவனின் பிஞ்சுக் கைகளை தொட்டு முத்தமிட்டு அவனை அணைத்துக்கொண்டு அவன் முகம் எங்கும் முத்தங்கள் வாரி வழங்க, அவளின் அருகே ஜித் வந்தான்… அவள் ஜித்திடம், “அப்படியே என் இந்தர் தான்…” என சிரித்துக்கொண்டே சொல்ல, அவன் துருவிடம் கை நீட்ட, துருவ் “அப்பா……………” என்றபடி அவனிடம் தாவிக்கொள்ள, மனதில் எதுவோ ஒன்று உறுத்தியது….

மெல்ல திரும்பி பவித்ராவின் கையில் இருந்த நதிகாவைப் பார்த்தவள் தன்னையும் அறியாமல் தன் வயிற்றின் மீது கைகளை வைத்து ஜித்தினைப் பார்க்க, அவன் கண் மூடி திறந்தான்…

எந்த குழந்தையை காப்பாற்ற அவள் போராடினாளோ, எந்த குழந்தை இல்லாது அநாதை போல அவள் பேதலித்தாளோ, அந்த குழந்தையைப் பார்த்தே அவள் அநாதை எனவும் சொன்ன நாள் நினைவுக்கு வர, தன்னையும் மீறி தலையில் அடித்துக்கொண்டு அழுதவளை ஜித், காவேரி என இருவரும் சமாதானப்படுத்த, அந்த சத்தத்தில் கண்விழித்த, நதிகா, சுற்றி அனைவரும் கன்யாவினை சமாதானப்படுத்துவதையும், அவள் அழுவதையும் கண்டவள், மெல்ல பவித்ராவிடமிருந்து கீழிறங்கி, கன்யாவின் அருகில் சென்றாள்…

“அம்மா………………….”

மூன்றே மூன்றெழுத்து தான்… ஆனால் அது கொடுத்த நிறைவினை கன்யாவை அன்றி வேறு யார் அந்நேரத்தில் உணர்ந்திருக்க முடியும்?....

அழுத விழிகளுடன் நதிகாவினைப் பார்த்தவள், அப்படியே அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆராய்ந்தாள்…

தன் இந்தர் கொடுத்த பரிசு… அத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் தான் பெற்றெடுத்த மகள்… தூக்கி அணைத்து முகம் பார்த்து கொஞ்சும் முன்னரே பெற்ற பிள்ளையை தன்னிடம் இருந்து பறித்த தந்தையின் கோரமான முகம்… தான் பெற்ற பிள்ளையை தானே கொல்லத்துணிந்த தனது ராட்சஸ மனம்… என அனைத்தும் அவள் கண் முன் நிழலாட, அவள் வேதனையோடு கண் மூடினாள்…

தன் மீது மெல்லிய ஸ்பரிசம் விழுவதை உணர்ந்தவள் கண் திறந்த போது, அவளின் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த நீரை துடைத்துக்கொண்டிருந்தாள் நதிகா….

இந்த ஸ்பரிசம் தானே நான் இதுநாள் வரை இழந்தது… கர்ப்ப காலத்தில் என் வயிற்றில் எட்டி உதைத்த கைகள் தானே இவை… நான் சுமந்த மகள்… என் இரத்தம்… என் இந்தர் எனக்கு கொடுத்த பரிசு என சந்தோஷத்தின் மொத்த உருவமாய் நதிகாவினைக் கண்டாள் அவள்…

“அழாதீங்கம்மா…. நீங்க அழுதா எனக்கும் அழுகை வரும்… அழாதீங்கம்மா….” என்ற நதிகாவிற்கும் ஏக்கத்தில் கண்ணீர் வந்துவிட, சட்டென்று அவளை அணைத்து கதறினாள் கன்யா…

பெற்ற பாசம், பிரிந்திருந்த புத்திர துயரம், என அனைத்தும் அவளை மொத்தமாக புரட்டி போட, நதிகாவின் முகம் பற்றி முத்தமிட்டாள் அவள் ஆசைதீர….

பின்னர் அவளை மெல்ல விடுவித்தவள், இந்தரிடம் இருந்த துருவினை வாங்கிக்கொண்டு, “நம்ம குழந்தைங்களோட நம்ம வாழ்க்கையை வாழலாம் இந்தர்… இனியும் என்னால உங்களை விட்டும் இருக்க முடியாது… இவங்க இரண்டு பேரை விட்டும் இருக்க முடியாது….” என நதிகாவையும், துருவனையும் பார்த்து அவள் சொல்ல,

நதிகாவை நோக்கி அவன் கை நீட்டி வா என்று அவன் அழைக்க, அவள் பார்வை சட்டென மகத்திடம் வந்து நின்றது…

போ… என அவன் தலை அசைத்த போது அவன் மனதும் ஒரு நொடி துயரத்தில் ஆடித்தான் போனது…

மெல்ல ஜித்திடம் வந்தவளை தூக்கி, அணைத்து முத்தமிட்டவன், குட்டி வினயா தானோ என்றெண்ணிக்கொண்டான்… மகளின் கன்னத்தில் சிரிப்புடன் நிறைவுமாக முத்தமிட்டவன், ஒரு தடவை அப்பா சொல்லுடா….” என சொல்ல, நதிகா விழித்தாள்… இங்கே இறுக கண் மூடினான் மகத்…

“ப்ளீஸ்டா… அப்பா சொல்லுடா… ஒரு தடவை மட்டும்டா… சொல்லும்மா….” என அவன் நதிகாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்ச, நதிகாவின் பார்வை கன்யாவினையும் மகத்தினையும் தொட்டு சென்றது….

“இவர் தாண்டா உன் அப்பா ஜிதேந்தர்….” என கன்யா நதிகாவிடம் எடுத்து சொல்ல, அவள் பார்வையோ கலங்கியபடி மகத்தினை வந்து அடைந்தது…

அந்த பார்வையில் அதன் வீச்சில் மொத்தமாய் துவண்டான் மகத்…

அங்கிருந்து வேகமாக அகல நினைத்தவனின் கால் அசையாமல் அப்படியே நின்றது…

மெல்ல திரும்பியவனின் பார்வையில் நதிகா அவனது காலைப் பிடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது…

“துருவ்… அம்மா என்ன சொல்லுறாங்க… எனக்குப் புரியலை… நீ தான என் அப்பா… அப்போ அம்மா ஏன் மாத்தி சொல்லுறாங்க?... சொல்லுப்பா… ஏன் அம்மா அப்படி சொல்லுறாங்க… சொல்லுப்பா…” என்றவளுக்கு அப்போதே அழுகை முட்டிக்கொண்டே வர, அவன் அமைதியாக இருந்தான்…

“சொல்லு துருவ்… சொல்லு…. ப்ளீஸ்… சொல்லுப்பா…. நீதான் என் அப்பான்னு அம்மாகிட்ட சொல்லுப்பா…” என ஏங்கி ஏங்கி சொல்லிய மகளின் முன் மண்டியிட்டு சட்டென்று அணைத்துக்கொண்டவனின் கண்கள் சிவந்து போயிற்று கலங்கி….

மெல்ல அவளுக்கு தெரியாமல் அதனை துடைத்தவன், தன்னிடமிருந்து அவளை விலக்கி, அவள் முகத்தினை அழுந்த துடைத்து, “நான் சொன்ன என் நதி கேட்பா தான?...” என அவன் கேட்க,

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்ப்பா… சொல்லுப்பா?... அம்மா ஏன் அப்படி சொன்னாங்க?...” என கேட்டவளிடம்

“நான் உன்னை வளர்த்த அப்பா… ஜிதேந்தர் தான் உன்னோட சொந்த அப்பா… கன்யா அம்மாவுக்கும் ஜித் அப்பாவுக்கும் கல்யாணம் முடிஞ்சு நீ பிறந்தப்போ, இரண்டு பேரும் வேலை விஷயமா வெளியூர் போயிட்டாங்க… அப்போ நீ ரொம்ப சின்ன பிள்ளையா இருந்தீயா, பாட்டி தான் உன்னை இங்க தூக்கிட்டு வந்து வளர்த்தாங்க… அப்போ நான் உன்னை எப்பவும் தூக்கியே வச்சிருப்பேனா, நீ எங்கிட்டயே தான் இருப்ப… ஒருநாள் என்னை அப்பான்னு சொன்ன, என்னால அதை வேணாம்னு சொன்ன முடியலை… கன்யாவும் ஜித்தும் வர வரைக்கும், உன்னை நானே வளர்த்துக்குறேன்னு பாட்டிகிட்ட சொல்லிட்டு உன்னை தூக்கிட்டு போயிட்டேன் தனியா… நீயும் என் பொண்ணாவே வளர்ந்த… அப்பதான் அம்மா யாருன்னு நீ எங்கிட்ட கேட்ட… உன் அம்மாவும் ஊரிலிருந்து வந்தாங்களா, நானும் இவங்க தான் உன் அம்மான்னு உங்கிட்ட சொன்னேன்… ஆனா உன் அப்பா ஊரிலிருந்து இன்னும் வரலைன்னு என்னால சொல்ல முடியலை… அப்படி நான் சொன்னா, நீ என்னை அப்பா சொல்லிட மாட்டியோன்னு ஒரு பயம்… அதனால தாண்டா உங்கிட்ட இருந்து மறைச்சிட்டேன்… அப்…பா…வ…..” என சொல்ல சொந்தவன், ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்து “வளர்த்த இந்த அப்பாவை மன்னிச்சிடுடா… உன் ஜித் அப்பாகிட்ட இருந்து உன்னை பிரிச்சிட்டேன்ல… சாரிடா…” என சொல்லியவனின் கண்களை உற்று நோக்கியவளின் மீது அவனின் கண்ணீர் விழ,

“ஜித் அப்பாவ இனி நான் அப்பா சொல்லுறேன்… ஆனா அப்பா இல்லாத குறையை எனக்கு தெரியாம வளர்த்த என் துருவும் எனக்கு அப்பாதான்… அதும் என் செல்ல துருவ் அப்பா….” என்றவள், அவன் அவளை அதிசயமாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவனின் நெஞ்சில் சாய்ந்து அவனை இறுக அணைத்துக்கொண்டாள் நதிகா…

அந்த பிஞ்சுக்கரங்களின் தழுவல், அவன் மனதில் உண்டான காயத்திற்கு மருந்திடுவது போல் இருக்க, அவனும் அவளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டான்…

“ஐ ஆல்வேஸ் லவ் யூ துருவ்…. லவ் யூ அப்பா….” என அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், கண்ணீரோடு ஜித்திடம் சென்று அவனின் கைப்பிடித்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.