(Reading time: 29 - 58 minutes)

19. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

ணி பதினொன்று ஆகப் போகிறது இன்னும் பிருத்வி வீட்டுக்கு வரவில்லை என்று கவலையோடு காத்திருந்தாள் வளர்மதி... " அவன் வீட்டுக்கு வந்தா பெல் அடிப்பான்... இல்லை போன் பண்ணுவான் மதி... ஏன் இப்படி முழிச்சுக்கிட்டு இருக்க வா வந்து படு.." என்று அழைத்துப் பார்த்துவிட்டு இவள் போகவில்லை என்றதும் செந்தில் படுக்க போய்விட்டார்...

பொதுவாக பிருத்வி வர தாமதமாகும் என்று தெரிந்தால் வர லேட்டாகும் அம்மா... நீங்க படுங்க நான் வந்தா உங்களுக்கு போன் பண்றேன் என்று சொல்வான்... அவங்க கதவு உள்ளே தாழ்ப்பாள் போடுவது போல் அமைந்துள்ளதால் இப்படி கதவு திறந்து விட காத்திருக்க வேண்டியுள்ளது... அப்படியே இல்லையென்றாலும் மகன் ஏதாவது சாப்பிட்டு போய் தூங்கட்டும் என்று இருப்பவள் இல்லை மதி... பிருத்வி தகவல் சொல்லிவிட்டதால் போய் படுத்துக் கொள்வாள்... அப்படியே படுத்துக் கொண்டிருந்தாலும் தூங்க மாட்டாள்... பிருத்வி வந்து அவன் சாப்பிட்டு சென்றவுடன் போய் படுத்தாள் தான் அவளுக்கு தூக்கம் வரும்...

அப்படியே சில நாட்களில் அசதியில் தூங்கிவிட்டாலும்... பிருத்வி வந்ததும் தூக்க கலக்கத்தோடு எழுந்து சென்றால்... அதை பார்க்கும் அவன்  என்னால உங்களுக்கு கஷ்டம்மா... உங்க தூக்கம் கெட்டுப்போகுதுன்னு சொல்லி வருத்தப்படுவான்... அதற்கு மதியோ எனக்கு இந்த கஷ்டம் எவ்வளவு நாள் டா இருக்கப் போகுது... உனக்கு கல்யாணம் ஆனா உன்னோட பொண்டாட்டி எல்லாம் பார்த்துக்கப் போறா... அப்போ நான் ஃப்ரீ ஆயிடுவேன் என்று சொல்வாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஆனால் திருமணம் ஆகியும் இன்றும் இதையெல்லாம் இவளே செய்வதை நினைத்தால் கவலையாக தான் இருக்கிறது மதிக்கு... இன்றைக்கோ பிருத்வி ஒரு தகவலும் சொல்லவில்லை... செந்திலிடம் கேட்டால் கம்பெனியில் அவ்வளவா வேலையில்லையே... புது ப்ராஜக்ட் வேலையும் இனி தான் ஆரம்பிக்கனும் என்று கூறினார்... போன் போட்டாலும் அவன் எடுக்கவில்லை... இப்படி அவன் எப்போதும் செய்ததில்லை... கல்யாணத்தன்று தான் அப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனான்... ஆனால் அன்று இரவும் சீக்கிரமாக வீடு வந்து விட்டான்...

ஆனால் இன்று என்ன ஆச்சு... ஏன் இன்னும் அவன் வரவில்லை என்று கவலையாக இருந்தது மதிக்கு... இந்த மாதிரி நேரத்திலோ ஆக்ஸிடெண்ட் அது மாதிரி ஏதாவது இருக்குமோன்னு பயம் வேறு வந்தது மதிக்கு...

"என்ன அத்தை இன்னும் பிருத்வி வரலையா...??" என்று கேட்டுக் கொண்டே மதி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் யுக்தா..

"இல்லம்மா... நானும் போன் பண்றேன் அவன் எடுக்கமாட்டேங்கிறான்... வேலை ஜாஸ்தியா இருக்கான்னு உங்க மாமாக்கிட்ட கேட்டா அப்படி எதுவும் இல்லையேன்னு சொல்றார்ம்மா.. எப்பவும் தகவல் சொல்லிடுவான்... இன்னைக்கு எதுவும் சொல்லலை அதான் பயமா இருக்கும்மா..."

"அத்தை கவலைப்படாதீங்க... பிருத்விக்கு வேலை இருக்கறது மாமாக்கு தெரியாம இருந்திருக்கும்... போன்ல ஏதாவது பிரச்சனையா இருந்திருக்கும்... பிருத்வி வந்துடுவாரு அத்தை...

ரொம்ப லேட்டா ஆயிடுச்சு... நீங்க போய் படுங்க... நான் வேணும்னா பிருத்வி வந்தா கதவை திறந்து விடுறேன்.."

"இல்லம்மா... அவன் தகவல் சொல்லியிருந்தா பரவாயில்லை... இப்போ அவன் வீட்டுக்கு வரவரைக்கும் எனக்கு படுத்தா தூக்கம் கூட வராது... ஆமாம் நீ தூங்கலையா இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்க..."

"இல்லை அத்தை... மாமா கொஞ்சம் வேலை கொடுத்திருக்காரு... அதை தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன்... தண்ணி குடிக்கலாம்னு வந்தேன்... சரி அத்தை நான் போய் மீதி கொஞ்சம் வேலையிருக்கு அதை முடிக்கிறேன்..."

"எந்த வேலையா இருந்தாலும் பகலில் பார்த்துக்கலாம்... ராத்திரி தூக்கத்தை கெடுத்துக்காதம்மா... கொஞ்ச நேரம் செஞ்சுட்டு தூங்கப் போ..."

"சரி அத்தை" என்று அவள் அறைக்கு போய்விட்டாள் யுக்தா...

மதியும் இந்த ஒருமாதமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள்... பிருத்வி தாமதமாக வரும் நாட்களில் யுக்தா தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பாள்... கேட்டால் வேலை இருக்கு... புக் படிச்சிக்கிட்டு இருந்தேன் என்று ஏதாவது காரணம் சொல்வாள்... பிருத்வி வந்து சாப்பிட்டு போனதும் அவள் அறையின் விளக்கும் அணைந்துவிடும்...

இந்த வீட்டில் இருக்கும் பழக்கவழக்கங்கள் யுக்தாவிற்காக மாறிவிட்டது... பொதுவாக எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது தான் பழக்கம்... செந்திலும் பிருத்வியும் வீட்டில் இல்லாத சமயங்களை தவிர மற்ற நேரங்களில் எல்லோரும் ஒன்றாக தான் சாப்பிடுவார்கள்... பரிமாறிவிட்டு சாப்பிடுகிறேன் என்று மதி சொன்னாலும்... செந்தில் அதை வேண்டாம் என்பார்... எல்லாம் டைனிங் டேபிளிலேயே இருக்கு... எடுத்து போட்டு சாப்பிடலாம்... நீயும் உட்காருன்னு சொல்வார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.