(Reading time: 12 - 24 minutes)

01. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

நேற்றைய தோல்விக்கான காரணத்தையும்,நாளைய வெற்றிக்கான காரணத்தையும்,தீர்மானிக்கும் இன்றைய  பொழுது நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு காரைவிட்டு இறங்கினான் யஷ்வந்த் கிஷோர்.

அவனுடன் அவனது அம்மா தாமரையும் இறங்கினார்.

கார் டிரைவரிடம் பூஜைக்கான பொருளை எடுத்துக்கொண்டு வருமாறு பணித்துவிட்டு இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர்.

பட்டுவேஷ்டி பட்டு சட்டையில் மாப்பிள்ளை போலவே இருந்த யஷ்வந்திற்கு நான்கு வருடமாக திருமணத்திற்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை.

கோவிலில் பரிகாரம் செய்தாலாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம் என்ற நம்பிக்கையில் மகனை அழைத்து வந்திருந்தார் தாமரை.

யஷ்வந்த் அப்படியே அம்மா பிள்ளை.அவரது பேச்சுக்கு மறுபேச்சு அவனிடம் கிடையாது.இப்போதும் அம்மா அழைத்ததும் வந்துவிட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

பூஜை சாமன்களை அய்யரிடம் கொடுத்துவிட்டு விஷயத்தை சொன்ன தாமரையிடம்,”முன்னாடியே உங்க ஆத்துக்காரர் சொல்லிட்டார்.இதோ சித்த நாழியில எல்லா ஏற்பாட்டையும் பண்ணிடறேன்”என்றவர் எல்லா பொருள்களையும் எடுத்து கடவுளின் முன் வைத்தவர்,பூ மாலையை பார்த்துவிட்டு குழம்பியவராய்,

“இந்த பூ எங்க வாங்கினேள்”என்று கேட்டார்.

“கடையில தான் சார்”என்று யஷ்வந்த் முந்திக்கொண்டு சொல்ல,

“நேக்கு அது நல்லாவே தெரியுது அம்பி.உன் தோப்பனார்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா,பூவை நான் சொன்ன இடத்தில தான் வாங்கணும்னு சொல்லிவிட்டேனே.மறந்துட்டாரா”என்று கோபமாகவே கேட்டார்.

“இல்ல சார்.நேரமாயிட்டதினால அட்ரெஸ் கண்டுபிடிக்க முடியல.அதான் கடையிலையே வாங்கிட்டு வந்துட்டோம்”என்று தன் மூக்கு கண்ணாடியை சரிபடுத்திக்கொண்டு பொறுமையின் சிகரமாய் பதில் சொன்னான்.

“இந்த ஊர் அம்பாளுக்கு மாலை கொடுக்கறவா இருக்கா.அவாளை தவிர வேற யார் பூவையும் அம்பாள் ஏத்திக்கிட மாட்டா.சித்த இருங்கோ.நான் கொண்டு வர சொல்றேன்”என்றவர் கோவிலுக்குள் இருந்தே,

“செவ்வந்தி”என்று உரக்க அழைத்தார்.

“இதோ வந்துட்டேன் மாமா”என்று ஸ்பீக்கர் இல்லாமையே அந்த பெண்ணின் குரல் கேட்க தாமரை காதை ஒருமுறை தேய்த்துக்கொண்டார்.

கோவிலை அடுத்து இரண்டு வீடுகள் தாண்டி செவ்வந்தியின் வீடு இருந்தாலும் சில வினாடிகளில் கோவிலுக்கு வந்துவிட்டாள்.

“சொல்லுங்கோ மாமா”என்று மூச்சு வாங்க வந்து நின்றவளிடம்,

“ஒரு ரோஜா மாலையும்,மல்லிகை பூவும் கொஞ்சம் எடுத்துட்டு வா”என்றார்.

“பூவெல்லாம் மார்க்கெட்க்கு அனுப்பியாச்சு மாமா.இப்போதைக்கு இந்த செவ்வந்தி தான் இருக்கா..வேற ஏதும் வேணும்னா சொல்லுங்கோ.கொண்டு வரேன்”

அங்கிருந்தவர்களை கொஞ்சம் சங்கடமாக பார்த்த சாரதி அய்யர் செவ்வந்தியை சற்று தூரம் கூட்டிக்கொண்டு சென்று,”அவா நல்ல பெரிய இடம் செவ்வந்தி.நீ கொடுக்கற மாலைக்கு எவ்வளவு வேணா பணம் தருவா.எப்பவும் போல 50 பர்சன்ட் அம்பாளுக்கு.10பர்சன்ட் எனக்கு.நாற்பது பர்சன்ட் உனக்கு.என்ன சொல்ற”அவசரமாய் கணக்கு சொன்னார்.

அவசரமாக செவ்வந்தியின் வியாபரா மூளை கணக்கு போட”இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு”சரியென்று ஒத்துக்கொண்டவள்,”எங்க வீட்ல இருக்க ரோஜாவை தான் பறிக்கனும் மாமா.மல்லிகை கொஞ்சம் இருக்கு.நான் பத்து நிமிஷத்துல மாலை கட்டிட்டு வர்றேன்.அவங்களை சரிகட்டி நிற்க வையுங்கோ”என்று சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வேகமாக சென்றாள்.

ரோஜாக்களை பறித்து மாலையாக்கியவள்,கொஞ்சம் மல்லிகை பூவையும் கட்டிக்கொண்டு இருபது நிமிடத்தில் கோவிலுக்குள் வந்துவிட்டாள்.

“உன் கையோட வேகம் வேற யாருக்கு வரும்”என்று சிலாகித்துக்கொண்ட சாரதி அவள் கொண்டு வந்திருந்த ரோஜா மாலையை சாமிக்கு கொடுத்துவிட்டு யஸ்வந்த்திற்கும் மாலையை கழுத்தில் போட்டு தன்னுடைய பூஜையை செவ்வனே நடத்த ஆரம்பித்தார்.

அவருக்கு உதவுகிறேன் என்று பொருளை எடுத்துக்கொண்டு மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தவர் அருகில் சென்றவள்,”மாமா..அந்த ஆளுக்கு கல்யாண யோகம் வர்றதுக்காக பூஜை செய்யவெல்லாம் வேண்டியது இல்ல.முதல்ல அந்த சோடாபுட்டி கண்ணாடியை கலாட்டிட்டாலே போதும்..முதல்ல அதை போய் சொல்லுங்கோ”என்று விரட்டினாள்.

“பூக்கு இன்னும் காசு கொடுக்கல செவ்வந்தி.அது வரைக்கும் வாய கொஞ்சம் அடக்கி வாசி”என்று சொல்லவும் நல்ல பிள்ளையாக பிரகாரத்தில் அமர்ந்துகொண்டவள் ரோஜா இதழ்களை பறித்து வாயில் போட்டாள்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.