(Reading time: 29 - 58 minutes)

21. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

ரண்டு மாதங்களுக்குப் பிறகு...

காலையில் செய்து வைத்த உணவு யாருமே சாப்பிடாமல் அப்படியே இருந்தது... பிருத்வி எனக்கு டிபன் வேண்டாம் என்று  சென்றுவிட்டான்... பிரணதியும் காலேஜ்ல போய் சாப்பிட்டுக்கிறேன் என்று சென்றுவிட்டாள்... செந்திலோ இப்போது பசிக்கவில்லை பிறகு சாப்பிட்டு கொள்கிறேன் என்றார்... யாருமே சாப்பிடாமல் மதிக்கு மட்டும் எப்படி சாப்பிடத் தோன்றும்... அவளும் சாப்பிடாமலே வேலை செய்துக் கொண்டிருந்தாள்...

இது போல் இன்று மட்டுமல்ல யுக்தா என்று வீட்டை விட்டு சென்றாளோ அன்றிலிருந்தே யாருக்கும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதில்லை... ஏதோ உயிர் வாழ வேண்டுமே என்று தான் சாப்பிடுவதே...

யுக்தா இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.. அவள் எல்லோருடைய மனதிலேயும் இடம் பிடித்துவிட்டாள்... இந்த இரண்டு மாதமாக அவள் இல்லாத வீடு கலையிழந்து இருக்கிறது...

"மதி எனக்கு பசிக்குது சாப்பிடலாமா..??" என்று மதியை செந்தில் அழைத்தார்... பசிக்குது சாப்பிட வேண்டும் என்றெல்லாம் இல்லை... மதி சாப்பிடாமல் இருக்கிறாளே என்று தான் அழைத்தார்... மதிக்கும் அப்படித்தான் தான் கூட சாப்பிட்டாலாவது அவர் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடுவார் என்றே அவருடன் சேர்ந்து சாப்பிடப் போனாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனு.Rன் "நறுமீன் காதல்..." - காதல் கலந்த கவிதை தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

இந்நேரம் யுக்தா இருந்திருந்தால் இரண்டுப்பேரையும் இவ்வளவு நேரம் பசியோடு இருக்க வைத்திருக்க மாட்டாள்... மணியாகுது ரெண்டுபேரும் சாப்பிடுங்க என்று சாப்பிட வைத்திருப்பாள்... யுக்தாவின் நினைவுகளோடு இருவரும் சாப்பிட்டு முடிக்கவும்... செந்திலுக்கு போனிலிருந்து அழைப்பு வந்தது... கம்பெனியிலிருந்து தான் என்று அழைப்பை ஏற்று பேசினார்...

"ஹலோ.."

"........"

"ம்ம் அப்படியா... சரி வரேன்.. வந்து நானே பார்த்துக்கிறேன்.." என்று பேசிவிட்டு வைத்துவிட்டார்.

"யாருங்க போன்ல..." என்று மதி கேட்டாள்.

"அது நம்ம கம்பெனியிலிருந்து தான் பேசினாங்க... புது ப்ராஜக்ட்க்கு ஏதோ ப்ளான் வரையனுமாம்... இப்போ யுக்தாவும் இல்லை... பிருத்விக்கிட்ட கேட்டா அப்பாக்கிட்ட சொல்லுங்க அவர் வரைஞ்சு தருவாருன்னு சொல்றானாம்... அதான் என்னை கூப்பிட்டாங்க.."

"ஏங்க நம்ம யுக்தா வீட்டை விட்டு போனதிலிருந்து பிருத்வி சரியே இல்லீங்க... சரியா சாப்பிடறதில்ல.. சரியா தூங்கறதில்ல... ஒழுங்கா வேலையிலும் கவனம் செலுத்தறதில்ல.. அவனுக்கும் யுக்தா வீட்டை விட்டு போனதுல வருத்தம் இருக்கு... அவ இங்க இல்லாதத நினைச்சு கஷ்டப்பட்றானுங்க..." என்று பிருத்விக்காக மதி பேச செந்தில் கோபப்பட்டார்.

"மண்ணாங்கட்டி... கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்னு சொல்வாங்களே... அப்படி தான் இருக்கு நீ சொல்றது... கூட இருக்கும்போது அந்த பொண்ணை எப்படி பார்த்துக்கனும்னு தெரியல... இப்போ உருகுறானாம்.."

"அவன் மேல தப்பு இருக்குங்க நானும் ஒத்துக்கறேன்... ஆனா அவனை பார்த்தா உங்களுக்கு தெரியலையா..?? யாருக்கிட்டேயும் பேசாம... வீட்ல இருந்தா ரூம்லயே அடைஞ்சு கிடக்கறான்.. அதைத் தானே நான் சொல்றேன்.."

"அதைத் தான் கேக்கறேன்... இந்த நிலைமை அவனுக்கு தேவையா..?? கோபத்தை குறைச்சுக்கிட்டு அந்த பொண்ணு மேல அக்கறையா இருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா..??

யுக்தா கோச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருந்தா கூட பரவாயில்லை... யார்கிட்டயும் சொல்லாம கொல்லாம போயிருக்கான்னா... அவ எவ்வளவு கஷ்டத்தோட போயிருப்பா... அதுவும் தெரியாத ரொம்ப பழக்கமில்லாத இந்த நாட்டுல அவ எங்க இருக்காளோ..

ஆனா ஒன்னு சொல்றேன் மதி... கல்யாணம் வேண்டாம்னு சொன்னவனுக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சோமில்ல.. அந்த பொண்ணோட பாவம் பிருத்விக்கு போறதை விட நமக்கு தான் முதலில் வந்து சேரும்... ஏதோ மாதவனும் சுஜாதாவும் என்பதால நாம வீட்ல இருக்கோம்... இதுவே வேற யாராவது இருந்தாங்க... நாம ஜெயில்ல தான் இருக்கனும்.." என்று ஆதங்கப்பட்டுவிட்டு கம்பெனிக்கு கிளம்பினார்.

செந்தில் சொல்வதெல்லாம் சரிதான்... மதிக்கும் புரிகிறது... இருந்தாலும் பெற்றவளாயிற்றே தன் மகனின் இப்போதைய  நிலைமையை பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது... ஆனால் அன்றைக்கு யுக்தா வீட்டை விட்டு போனது தெரிந்ததும் எதற்கும் அதிகம் கோபப்படாத மதிக்கே தன் மகன் மீது கோபம் வந்தது... தானாகவே அன்றைய நிகழ்வு கண் முன்னே வந்தது மதிக்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.