(Reading time: 11 - 21 minutes)

06. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

சோமநாதனின் கேள்வியில் அப்படியே நின்றிருந்தவனை மீண்டும் தன் வார்த்தைகளால் உலுக்கினார் அவர்…

“சொல்லுப்பா… நான் உனக்கு அப்பா இல்லையா?... தூக்கி வளர்த்தவன் தான் நான்…. அதுக்காக தகப்பன் இல்லன்னு ஆகிடுமா?.. இல்ல தகப்பனே வேண்டாம்னு நீ முடிவு பண்ணிட்டீயா?... சொல்லிடுப்பா… என் மரமண்டைக்கும் உரைக்குற மாதிரி சொல்லிடு, தகப்பன் என்ற தகுதியே இந்த சோமநாதனுக்கு இல்லன்னு…” என அவர் சொல்லி முடிக்கையில்,

“அ…………ப்……………..பா………………………..” என அவரின் வலது முழங்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டவன்,

“எனக்கு தான்ப்பா உங்களுக்கு மகனா இருக்க தகுதி இல்ல….” என தொண்டை கம்ம சொல்ல, சோமநாதன் அவன் முகத்தை பார்த்தார்…

“யார் சொன்னா அப்படி?...”

“யார் சொல்லியிருந்தா என்ன?.. அதுதான உண்மை?..”

“அடுத்தவங்க சொல்லுறதை நீ ஏண்டா காதுல வாங்குற?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“நான் ஜடம் இல்லையேப்பா… கண்டுக்காம போறதுக்கு… நானும் மனுஷன் தான… எனக்குள்ளேயும் உணர்வுகள் இருக்குதே… அது என்னை உங்களை விட்டு விலகி தான போக சொல்லுது…” என எங்கோ வெறித்த பார்வையோடு அவன் சொல்ல,

“அதே போல எனக்கும் உணர்வுகள் இருக்குதேப்பா… அது உன் பக்கம் தான வருது… என்ன இருந்தாலும் உன்னை தூக்கி வளர்த்தவண்டா நான்… இதோ இப்போ பிடிச்சிருக்கீயே என் முழங்கையை கெட்டியா… இதே மாதிரி தான ஒவ்வொரு தடவையும் நீ சின்னப்பிள்ளையா இருக்கும்போது பிடிச்சிப்ப… இடையில என்னென்னமோ ஆகிடுச்சு… இப்போ பல வருஷம் கழிச்சு என் பையனோட ஸ்பரிசம் மறுபடியும் எனக்கு இன்னைக்கு கிடைச்சிருக்கு… இது போதும்டா எனக்கு… போதும்… இன்னும் சில காலம் தாங்கும்…” என கண் மூடி சொல்லியவரை இறுக அணைத்துக்கொண்டான் ஜெய்…

“ஜெய்…..” என்ற அவரின் குரல் தழுதழுக்க, மகனை அவரும் விடாது அணைத்துக்கொண்டார்…

“என் புள்ளைடா நீ… என் வாரிசு நீ… என் கவுரவம், பெருமை எல்லாமே நீ தாண்டா எனக்கு…” என மகனின் முகம் பற்றி அவர் முத்தமிட, அவன் சிரித்தான்…

“என் பையன் முகத்துல இந்த சிரிப்பை பார்த்து எத்தனை நாள் ஆச்சு?... இன்னைக்குத்தாண்டா நிறைவா இருக்கு…”

“நீங்க இதுபோலவே சந்தோஷமா இருக்கணும்ப்பா என்னைக்கும்…”

“அது நீ என் பக்கத்துல இருந்தா தான் நடக்கும் ஜெய்…” என்றதும் எதுவோ சொல்ல முயன்றவனை வேகமாக தடுத்தவர்,

“நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்கு தெரியும்… இல்லப்பா அதெல்லாம் வேண்டாம்னு தான… முடியாது ஜெய்… நான் ஒத்துக்க மாட்டேன்… இனி நான் உன்னோடு தான் இருப்பேன்… அதுவும் என் பையன் வீட்டுல தான் இருப்பேன்… வேற எங்கேயும் அசைய மாட்டேன்… ஆமா… சொல்லிட்டேன்….” என பிடிவாதமாய் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள,

அவரின் அருகே சென்று அவரது கால்மாட்டில் அமர்ந்தவன், “நான் வேண்டாம்னு இனியும் சொல்லமாட்டேன்ப்பா… இனி நீங்க என்னைக்கும் உங்க பையன் கூட தான் இருக்கணும்… உங்களை நான் இத்தனை நாள் பிரிந்து இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்கப்பா… ப்ளீஸ்…” என்று சொல்ல,

“வேணும்னே நீ விலகி இருக்கலையேப்பா… சில பேர் பேசினது உன் மனசுல அந்த சின்ன வயசில ஆழமா பதிஞ்சிட்டு… விடு… அதை நீ முடிஞ்ச அளவு மறக்கப் பாரு… அது தான் நல்லது… ஆனா அதைவிட முக்கியமா, இப்போ சில வருஷமா எங்கிட்ட இருந்து மொத்தமா விலகி போனீயே தயவு செய்து அதை திரும்ப செய்யாத ஜெய்… அப்பாவால தாங்கிக்க முடியலை…” என அவர் கலங்க,

அவரை இலகுவாக்க, “ஊருக்குத்தான் கமிஷனருன்னு பேரு… வீட்டுக்குள்ளே வந்து பார்த்தா தான் தெரியும் சின்னப்பிள்ளை மாதிரி அழுதுகிட்டு… உங்களுக்கு வயசு என்னமோ 55 ஆகுது… ஆனா மனசு மட்டும் இன்னும் அதே 5 வயசு தான்…” என புன்னகையுடன் கூற,

“போடா…..” என்றார் அவர்….

“சரி இருங்கப்பா… நான் போய் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்…” என அவன் நகர்ந்ததும், மகன் தன்னை சமாளிக்கத்தான் இப்படி பேச்சை திசை திருப்பினான் என புரிந்து கொண்டவருக்கு சின்ன வயதில் அவன் திடீரென்று அவரை விட்டு பிரிந்த நாள் நினைவு வந்தது…

“என்னப்பா… யோசனை?...” என காபியோடு வந்து கேட்ட ஜெய்யிடம்,

“ஒன்னுமில்லப்பா…” என்றார் அவர்…

அவரை தெரியாதா அவனுக்கு?... நன்றாகவே தெரிந்து தான் இருந்தது தகப்பன் எதை நினைத்துக்கொண்டிருந்தார் என…

“அப்புறம்ப்பா… சொல்லுங்க…” என அவன் சாதாரணமாக கேட்க,

“சின்ன வயசில என்னால நிறைய காயம் பட்டுட்டல்ல ஜெய்… அதுக்காக அப்பா உன்கிட்ட மன்…னி……….” என சொல்லிக்கூட அவரை முடிக்கவிடவில்லை அவன்…

“அப்பா………. என்ன இதெல்லாம்?... விடுங்கப்பா… அதான் உங்க பையன் உங்களுக்கு கிடைச்சிட்டேனே மறுபடியும்…”

“கிடைச்சிட்ட…. ஆனா அது தான் எனக்கே ஆச்சரியமா இருக்கு… எப்படி, நான் பேசினதும் மாறிட்ட…. அது தான் எவ்வளவு யோசிச்சாலும் எனக்கு புரிய மாட்டேங்குது…”

“உங்களுக்கு அது இன்னும் தெரியலையா அப்பா… கமிஷனரா கண்டுபிடிங்க பார்ப்போம்…” என அவன் சிரித்துக்கொண்டே கூற,

“கண்டுபிடிக்குறதுக்குத்தான் என் பையன் ஐ.பி.எஸ் ஆஃபீசர் ஜெய் இருக்குறானே….” என அவரும் சிரிக்க, அவனும் அவரின் சிரிப்பில் கலந்து கொண்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.