(Reading time: 10 - 20 minutes)

07. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

வாங்க… வாங்கண்ணா… என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க…” என பிரசுதி சோமநாதனை வரவேற்க,

“இல்லம்மா ட்ராஃபிக்கில் மாட்டிகிட்டோம்…” என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ஆமா பிரசுதி… கமிஷனர் சாருக்கு நம்ம வீட்டுக்கு வரணும்னு நினைச்சா மட்டும் டிராபிக் வந்துடும்…” என்றபடி வந்தார் தட்சேஷ்வர்…

“ஹேய்… இல்லடா ஈஸ்வர்….” என சோமநாதன் பேச ஆரம்பிக்க,

“ஆமா இந்த ஈஸ்வர்ன்னு கூப்பிடுறதுக்கு மட்டும் ஒரு குறைச்சலும் இல்லை… இஷான் யாருடா… உன் மருமகன் தான… அவன் நிச்சயதார்த்தத்துக்கு வர்ற நேரமாடா இது?...” என தட்சேஷ்வர் முறுக்கிக்கொண்டதும்,

சோமநாதன், அவர் தோள் மீது கை போட்டு, “என்னடா… இப்படி கோபம்… அதுதான் வந்துட்டேனே… இன்னும் என்ன?... பாரு ஃபங்க்ஷன் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல… அப்புறம் என்னடா?...” என கேட்டுக்கொண்டிருக்கும்போது,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“வாங்க அங்கிள்... வந்ததுமே உங்க ஃப்ரெண்ட் உங்களை திட்டுறார் போல…” என்றபடி இஷான் வர…

“டேய்… நான் அவனை திட்டுவேன், அடிப்பேன், அது எங்களுக்குள்ள… நீ போடா…” என்றார் தட்சேஷ்வர், தனது நண்பன் தன் மீது போட்ட கைகளை பிடித்துக்கொண்டே…

“இப்போ எதுக்கு நீங்க நம்ம பையனை திட்டுறீங்க?...” என முறைக்க ஆரம்பித்த பிரசுதியை,

“அடடா… அம்மா…. போதும்… இப்போ நீங்களுமா?...” என இஷான் கேட்க

“நீ சும்மா இருடா… உனக்காகத்தான் நான் பேசிட்டிருக்கேன்…” என்றார் கோபமாக பிரசுதி…

“ஏண்டா நீ இன்னும் மாறவே இல்லையா?... இஷானை எதும் சொல்லலைன்னா உனக்கு தூக்கம் வராதா?...” என சோமநாதனும் தன் பங்கிற்கு கேட்க,

“அப்படி கேளுங்கண்ணா… எப்ப பாரு அவனை எதாவது சொல்லிட்டே இருக்குறாரு… இதே அவர் அருமை பொண்ணுன்னா போதும் வாயே திறக்குறது கிடையாது…” என்றார் பிரசுதி கணவரைப் பார்த்துக்கொண்டே…

“ஏய்… அவ சின்னப்பொண்ணுடி… இவன் தான் எருமை மாதிரி வளர்ந்திருக்கானே… அப்ப இவனை தான திட்ட முடியும்…”

“பாருங்கண்ணா… உங்க ஃப்ரெண்ட் பேசுறதை…” என்றவர் கணவரிடம் திரும்பி என் பையன் எருமைன்னா உங்க பொண்ணு கழுதை…” எனவும்,

“அம்மா… கழுதை மட்டும் இல்ல… குட்டி சாத்தானும் தான்…” என எடுத்து கொடுத்தான் இஷான் பிரசுதிக்கு கேட்கும்படி மட்டும்…

அதைக் கேட்டு பிரசுதி சிரிக்க, தட்சேஷ்வரோ இஷானை முறைத்தார்…

“பாருடா… எனக்கு கேட்ககூடாதுன்னு எதோ அவகிட்ட சொல்லியிருக்கான்… அதுக்குத்தான் உன் தங்கச்சியும் சிரிக்குறா…” என அவர் குறைப்பட,

“விடுடா… சின்னப்பிள்ளை மாதிரி இன்னும் சண்டைபோட்டுகிட்டு…” என்றார் சோமநாதனும் நண்பனை பார்த்து சிரித்துக்கொண்டே…

அந்த நேரம் பார்த்து, “வாங்க வாங்க கமிஷனர் சார்…. என்ன இப்போதான் வர நேரம் கிடைச்சதா?...” என குரல் வந்த திசையில் பார்த்த அனைவரும் ஒரு கணம் என்றாலும் இமை மூடி திறந்தனர்…

“ஹே… குட்டி சாத்தான்… இன்னைக்கு நிச்சயதார்த்தம் எனக்கு…” என்ற இஷானிடம்,

“சோ வாட்….” என்றபடி வந்தாள் சதி…

“அதுக்கென்னவா?... அதுசரி நீ ஏன் கேட்கமாட்ட?... உன்னை யாரு கல்யாணப்பொண்ணு மாதிரி வந்து நிக்க சொன்னது இங்க?...”

“டேய்… அண்ணா… இங்க பாரு… நான் எந்த மேக்கப்பும் போடலை… எப்பவும் போல தான் இருக்கேன்… என்ன ஒன்னு பாவாடை தாவணி போட்டு, பூ மட்டும் நிறைய வச்சிருக்கேன்… அவ்வளவுதான்… அது உன் கண்ணுக்கு உறுத்துதா?...” என அண்ணனிடம் கூறியவள், “பாருங்கப்பா… அண்ணனை…” என்றபடி தட்சேஷ்வரின் தோள்களில் தஞ்சம் புக,

“இத்தனை பேர் இருக்கும்போது என்ன உன் அப்பாகிட்ட கொஞ்சல்… பேசாம இங்க வா…” என பிரசுதி அழைக்க,

“போம்மா… நீ உன் மகனையே கொஞ்சிக்கோ… என்னை நீ ஒன்னும் கொஞ்ச வேண்டாம்… நான் வரலை…” என்றாள் அவள்…

“ஓ… உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா?... கொன்னுடுவேன் பாத்துக்கோ… நாலு அடி போட தான் கூப்பிடுவேனே தவிர, கொஞ்ச எல்லாம் சத்தியமா கிடையாதுடி…”

“அ….ப்….பா…… பாருங்கப்பா…..” என அவள் சிணுங்க,

“உன் அம்மாக்கு பொறைமைடா… நீ எவ்வளவு அழகா இருக்குற தெரியுமா?.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு…” என மகளுக்கு இருகை வைத்து அவர் சுத்தி போட,

“ஆமா… ஆமா… பொறாமை தான்…” என்றபடி பிரசுதியும் மகளை கண்ணிறைய பார்த்து ரசித்தார்…

பின்னே குங்குமப்பூவின் இதழ் நிற தாவணியில் தங்க நிற சரிகை ஆங்காங்கே இழையோடிருக்க, பூவின் மகரந்தமாம் சிகப்பு நிறத்தில் பாவாடையும் உடுத்தி, சின்னதாய் ஒரு ஆன்டிக் வொர்க்கில் கழுத்தை ஒட்டிய நகையும், கை நிறைய ஓசை எழுப்பும் வளையல்களும், இரு தோள்களிலும் இடம் கொடுத்த மகிழ்ச்சியுடன் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மல்லிகையும், நெற்றியில் நீல நிறப்பொட்டும், மொத்தத்தில் தேவலோக மங்கையாக வந்து நின்றவளை எந்த தாய் தான் பார்த்து ரசிக்காமல் இருப்பார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.