(Reading time: 11 - 22 minutes)

அமேலியா - 05 - சிவாஜிதாசன்

Ameliya

டியர் சாரா ,

இந்த முடிவை எடுத்ததற்கு என்னை மன்னித்துவிடு. சிறகுகளை இழந்த பறவை வாழ்வதில் அர்த்தமில்லை. அதே போல தான் என் நிலையும். எப்பொழுதும் ஓடிக்கொண்டிருந்த என் கால்கள் இப்பொழுது இல்லை. என் உடலை நகர்த்துவதற்கு எனக்கு கடினமாக உள்ளது. நம் உயர்ந்த காதலால் என் ஊனத்தை நீ ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நீ நம் பழைய நினைவுகளில் நுழைந்து உன்னையே    வேதனைப்படுத்திக்கொண்டு விதியே என வாழ்வதை நான் விரும்பவில்லை. நீ மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு, நீ நல்ல துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நம் ஆசைகளை புகுத்தி என் ஞாபகங்கள் அறவே இல்லாத சாராவாக நீ வாழ வேண்டும். என் ஊன உடல் மட்டுமே அழிந்து போகும். என் உயிர் உன்னை சுற்றியே வாழும். உன் எண்ணங்களில், சிரிப்பில், கண்ணீரில் நான் கலந்திருப்பேன். இந்த கடிதத்தை நீ படித்துக் கொண்டிருக்கும் வேளையில் உனக்குள் துடித்துக் கொண்டிருக்கும் என் இதயத்துடிப்பை கேட்பாய். உனக்காக ஒரு பரிசை வைத்திருக்கிறேன் அதை நீ நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.  'ஐ லவ் யு சோ மச் சாரா'. என்னை மன்னித்துவிடு.

இறந்தாலும் உன்னுடன் கலந்திருக்கும் வில்லியம்ஸ்

கடிதத்தை படித்து முடித்ததும் வேதனை ததும்பிய முகத்துடன் சுற்றி இருக்கும் தன் சக ராணுவவீரர்களை நோக்கினான் ராணுவவீரன் ஒருவன். அனைவரின் இதயத்திலும் சோகம் படர்ந்திருந்தது. கலகலப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களுக்குள் நீண்ட கொடிய மௌனம் நிரம்பி இருந்தது. தற்கொலை கோழைத்தனம் என்றாலும் வில்லியம்ஸின் நிலையை கருத்தில் கொண்டு பார்த்தால், அவன் எடுத்த முடிவு சரியானது தான் என்று அவர்களுக்குள் தோன்றியது.

"வில்லியம்ஸ் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது" என்றான் ஒருவன்.

"அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று கர்த்தரை வேண்டினான் மற்றொருவன்.

"அவர் தன் காதலிக்காக பரிசு ஒன்று வைத்திருக்கிறேன் என்று சொன்னாரே. அது எங்கே?" என்று வினவினான் இன்னொருவன்.

"அந்த பரிசு அவர் தங்கி இருந்த அறையில் தான் இருக்க வேண்டும்" என்றான் கடிதத்தை படித்தவன்.

அனைவரும் வில்லியம்ஸ் தங்கி இருந்த அறையை நோக்கி ஓடினார்கள். கதவு திறக்கப்பட்டது. எல்லோரும் அந்த அறையை சல்லடை போட்டு தேடினார்கள். அந்த பரிசு அவர்களின் கண்களுக்கு தென்படவில்லை.

மேலியா, அழுது அழுது கண்களில் நீர்வற்றி, மேற்கொண்டு அழ சக்தியற்றவளாய், இனி என்ன செய்யப்போகிறோம்? இந்த பயணத்தின் முடிவு எவ்வாறாக அமையும்? நான் இங்கே இருப்பது என் பெற்றோருக்கு தெரியுமா? இல்லை இல்லை நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தனக்குத்தானே கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

தன் காதருகில் சர்ரென சென்ற துப்பாக்கி குண்டின் சப்தத்தை நினைவுபடுத்திய அவள் தன்னையறிமால் நடுக்கமுற்றாள். அமெரிக்கன் ஒருவன் ஆங்கிலத்தில் கத்தியபடி அவளை நோக்கி ஓடி வந்ததை எண்ணிப் பார்த்தாள். அவனது முகம் அவள் நினைவில் அரைகுறையாக தெரிந்தது. அவள் சரிந்து விழுகிறாள்; அவன் அவளைத்  தாங்கிக்கொள்கிறான். இறுதியாக அவள் சுயநினைவை இழக்கும்போது சலனமுள்ள கானல்நீரை போல பீரங்கி அவள் கண்களில் மங்கலாக தெரிந்தது.

இனி நாம் என்ன செய்யப்போகிறோம்? அவளின் மனதில் இருந்து ஓர் ஒலி கேட்டது. கப்பலில் இருப்பவர்களிடம் தன் நிலையை எடுத்துக் கூறி அவர்களின் உதவியை நாடலாமா?  வேண்டாம்;  அவர்கள் அனைவரும்  ராணுவ வீரர்கள். ராணுவத்தில் இருப்பவர்கள் மிகவும் மோசமானவர்கள் . அவர்களுக்கு இரக்கம் என்பது துளியும் கிடையாது. அவர்களிடத்தில் உதவி கேட்பது சரியான யோசனை அல்ல என்று முடிவு எடுத்தாள்,

திடீரென வித்தியாசமான யோசனை வந்தது  ஒரு வேளை,  அமெரிக்கர்கள் தன்னை ரகசியமாக கடத்திக் கொண்டு செல்கிறார்களா? இந்த கற்பனை அவளின் பயத்தை மேலும் அதிகரித்தது. நிச்சயமாக இருக்காது. அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் நாம் சிறைவைக்கப்பட்டிருப்போம். நான் இங்கு இருப்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறன்.

இந்த கப்பல் எங்கே செல்கிறது? .இந்த கப்பலின் மோசமான பிரயாணத்தின் முடிவில் இவர்களின் கண்களில் இருந்து தப்பித்து யாரிடமாவது உதவி கேட்டு தன் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்துக்கொண்டு தன்னையே ஆறுதல் படுத்திக்கொண்டாள்.

மெல்ல மெல்ல அவளின் மனம் அமைதி அடைந்தது. சிறிது நேரத்தில் அவளது வயிற்றில் பசி உருவானது. பசியை எவ்வாறு போக்கிக்கொள்வது? என்ன செய்வது? என்று அவளுக்கு புரியவில்லை. தாகத்திற்கு தண்ணீர் கூட கிடைக்காததால் தொண்டை வறண்டு போனது.

பீரங்கியில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள். சுற்றிலும் அவள் கண்களுக்கு கடல் நீர் மட்டுமே தெரிந்தது இதுவரை அவள் பார்த்திராத அதிசயமான காட்சியை ரசிக்கவிடாமல் அவளை வாட்டியது பசி. சில்லென்ற காற்று முகத்தில் அறைந்து அவளை குளுமைப்படுத்தியது.தான் இருந்த இடத்தைச்  சுற்றி நோக்கினாள்.

வில்லியம்ஸ் வீசியெறிந்த உணவு ஓர் மூலையில் கிடந்தது. உணவைக் கண்டதும் பசி அவளது வயிற்றைக் கௌவி  இழுத்தது. சில நிமிடங்கள் உணவையே வெறித்துப்  பார்த்த அவள், மெல்ல பீரங்கியினுள் இருந்து வெளியே வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.