(Reading time: 7 - 14 minutes)

02. நிர்பயா - சகி

Nirbhaya

ந்த காலை நேரம் புத்தொளியை தாராளமாக உலகிற்கு நல்கியது.

பனி படர்ந்த உதகை மலைச்சாரல் உணர்வுகளுக்கும் தீனி போட சில்லென்ற தென்றலை தூது அனுப்பியது.

அவளது விழிகளில் விளக்க இயலாத ஒரு தேடல்!!தேடல்கள் எதனால் உருவானது என்பதை அவள் அறியவில்லை.

"இனி என்ன செய்ய போகிறோம் என்ற சிந்தை மேலோங்கும் சமயத்தில் எல்லாம் என் மனவுறுதியை பலப்படுத்தியது என் கடந்த கால வாழ்வே!!இனி உன்னால் என்ன செய்ய இயலும் என்று வினவியவர்களுக்கு பதில் அளித்துவிட்டேன்.இனி யாரை பார்த்து அச்சம் கொள்ள வேண்டும்??"-தனக்கு தானே எழும்பியது அக்கேள்வி.

பல வருடங்களுக்கு முன் அழுதழுது கண்ணீரும் வற்றிய சமயம் தன்னில்,இன்னொரு பெண்ணாக இருந்தால்..நிச்சயம், வாழ்வை விடுத்திருப்பாள்!!ஆனால்,விதியோ!அல்லது வினையோ!இவளை தன் துயரை உலகியலோடு வைத்து சிந்திக்க வைத்தது.

"பாதுகாப்புகள் நிறைந்த எனக்கு இந்நிலை என்றால்,அவை இல்லாத பெண்டிரின் நிலை என்ன?"என்றே அவள் மனம் சிந்தித்தது.

அக்கேள்வி விஸ்வரூபம் எடுக்க,இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் அவளது தைரியம் வெளிப்பட்டு வெடித்து சிதற,அதன் கனலுக்கு துடித்தவர் பலர்!!!

"இன்றும் மனம் குடிக்கொண்ட அக்னி தணியவில்லை.அது அணையவும் விருப்பமின்றி தகித்துக் கொண்டிருந்தது.

"நான் சொல்றதை தான் நீ கேட்கணும்!என் உதவி இல்லைன்னா என்ன பண்ணிட முடியும் உன்னால??உன்னால என்ன கிழிக்க முடியுமோ கிழித்துக்கோ!"-ஆணவமாக ஒலித்த தந்தை என்ற நாமம் கொண்ட மிருகத்தின் வார்த்தைகள் மனதின் தணலுக்கு எண்ணெய் வார்த்தன.

மகுடிக்கு கட்டுண்ட நாகமாய் நன்மனம் கொண்ட தாய் அன்பும் அவள் தந்தையின் உத்தரவினால் அவள் கரம் சேரவில்லை.அச்சமயங்களில் அவள் கண்ணீரை அதிக அளவில் உணர்ந்தது அவளது தனிமையே!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

நானிருக்கிறேன்!என்ற வார்த்தையை இதுநாள் வரை அவள் கேட்டதில்லை.

மனம் வெதும்பிய சமயத்தில் அணைப்பினில் சேர்க்க நெஞ்சம் ஏதும் கிட்டவில்லை.

முற்பிறவி புண்ணியம் ஏதேனும் எஞ்சி இருக்கலாம்!!அதனால்,அவளுக்கு கிட்டிய ஒரே ஆனந்தம்!அவளது பாட்டியும்!பாட்டனாரும்!!

அவள் நொடிந்த சமயத்தில் அவர்கள் கண்ணீரை துடைக்க மறுத்து,'அழுது முடி!மன துயரங்களை கொட்டிவிடு!'என்ற தத்துவத்தை விதைத்தனர்.அழிந்த அவள் நம்பிக்கையை உயிர்பித்து,அதை சுயநலமாக்காமல்,உலகியலை நோக்கி திசை திருப்பினர்.

அவள் வெறுப்பினை பயமின்மையாக மாற்றி அவளுக்கு உயிர் கொடுத்தனர்.

இன்று நிர்பயா என்ற நாமம் உதகை மண்டலத்தையே உலுக்கும் ஒன்றாகும்!!குற்றம் கடிந்த ஒரு மண்டலமாக உதகையை உருமாற்றிய ஒரு பெயராகும்!!!

அவளது மனம் வென்ற ஒரு வாசகம்!

"நெற்றக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!"என்ற அந்த வாசகம் அவளை பிறருக்கு அடையாளம் காட்டும் வாசகமாய் மாறிப்போனது!!!

"குட்டி!மதியம் நேரத்துக்கு வீட்டுக்கு வா!இல்லைன்னா,அடி வாங்குவ!"நிர்பயாவை அன்பால் மிரட்டினார் பார்வதி,அவளது பாட்டி!!

"சரி பாட்டி!நீ ஒழுங்கா மாத்திரை போடு!"

"ம்..சரி!"-என்றார் புன்னகைத்தப்படி!!

"வரேன் தாத்தா!"-அவள் குரல் சோபாவில் அமர்ந்திருந்த வைத்தியநாதனின் செவிகளில் விழ,அவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.நிர்பயாவின் விழிகள் சுருங்கின...

"என்னவாம்?"

"அவர் படத்துக்கு கூப்பிட்டாராம்!நீ வர மாட்டேன்னு சொல்லிட்டியாம்!அதான்,கோபம்!"

"பாட்டி!அது பயங்கரமான பேய் படம் பாட்டி!அதை போய் தியேட்டர்ல!நான் மாட்டேன்!"

"அதெல்லாம் அவ்வளவு பயங்கரமா இல்லையாம்!"-குரல் கொடுத்தார் வைத்தியநாதன்.

"உனக்கென்ன படம் தானே பார்க்கணும்??2 டிக்கெட் போட சொல்றேன்!நீயும்,பாட்டியும் போயிட்டு வாங்க!"-அதைக்கேட்டதும் வைத்தியநாதனின் பார்வை அவர் மனைவியை துளைக்க,அவரது முகம் சிவந்துப் போனது!!முதுமையிலும் அழியாத காதல்..

"என்ன போயிட்டு வரீங்களா?"

"நீ வேற ஏன் ஹனி!அவ அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர்,சிவாஜி படத்துக்கு கூப்பிட்டாலே வர மாட்டா!இதுல,இங்கிலிஷ் பேய் படத்துக்கு கூப்பிட்டா வந்துடவா போறா?"-என்றார் அவர் ஏக்கமாக!!பார்வதியின் முகம் இன்னும் சிவந்துப்போனது!!

"சரி..சரி..போதும்!நான் கிளம்புனதும் உங்க ரொமான்ஸை வைத்துக்கோங்க!"

"ப்ச்...குட்டிம்மா!நீயும் கிண்டல் பண்றீயா?"

"கிண்டல் இல்லை பாட்டி!இந்த வயசுல லவ் பண்ண கூடாதுன்னு சட்டம் இல்லையே!"

"உனக்கும்,அவருக்கும் நான் தான் எப்போதும் மாட்டுவேன்!"

"பார்த்தியா!இப்போ கூட உன் தாத்தான்னு செல்லாம,அவருன்னு உரிமை கொண்டாடுற!"-என்றவளின் குறும்பில் அவர் தலையில் அடித்துக்கொண்டு உள்ளே ஓடிவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.