(Reading time: 11 - 22 minutes)

12. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ரயூ… இந்த பையை பிடிம்மா…” என்ற சண்முகத்தின் குரல் கேட்க, வாசலுக்கு ஓடினாள் அவள்…

“நீங்க ஏன் மாமா இந்த வேலை எல்லாம் செய்யுறீங்க?...” என சரயூ விரைந்து போய் அவரிடம் பையை வாங்க,

“கடைக்குப் போற நேரத்தை தவிர மத்த நேரம் நான் சும்மாதானம்மா இருக்குறேன்…” என்றார் அவர்…

“மாமா... அதுக்குன்னு இந்த வேகாத வெயிலில் நீங்க போகணுமா?...”

“பரவாயில்லம்மா… நீ இத கொண்டு உள்ள வை…”

“சரிமாமா…” என்றபடி காய்கறி பையை தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சரயூ…

சமையலறைக்குள் நுழைந்தவள் வெளியே சென்றுவிட்டு வந்தவருக்கு ஒரு டம்ளரில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்…

அதை வாங்கி பருகியவர், “வாசலில் திலீப் பைக் நிக்குது… கடையில இருந்து வந்துட்டானாம்மா?.....” என அவளிடம் கேட்க,

“ஆமா… மாமா… இப்போதான் வந்தார்….” என்றாள் அவள்…

சரி என்றபடி மோரை குடிக்கப்போனவர், உடைந்து கிடந்திருந்த பூச்சாடியை பார்த்துவிட்டு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“என்னம்மா இது எப்படி உடைஞ்சுச்சு?...” என கேள்வியுடன் கேட்க

என்ன சொல்லி சமாளிப்பது என்று ஒரு வினாடி யோசித்தவள், சட்டென, “இல்ல மாமா… துடைச்சிட்டிருந்தேன்… அப்ப தெரியாம கைதவறி கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு மாமா… நான் அதை எடுத்து வெளியே போட்டுடுறேன்…” என அவள் அதை எடுக்க முனைந்த போது, விசாலம் உள்ளே வர,

“நீ இரும்மா…” என மருமகளை நிறுத்தியவர், விசாலத்திடம், “வா விசாலம்… கொஞ்சம் இதை கவனமா எடுத்து வெளியே போட்டுடு… பார்த்து ஜாக்கிரதை…” என சொல்ல,

“சரிங்கய்யா…” என்றவள் முகத்தை சுணக்காமலே அதை கவனமாக எடுத்து அப்புறப்படுத்தினாள்…

ஒரு கணம் மருமகளின் முகத்தினைப் பார்த்தவருக்கு, எதையும் கண்டுபிடுக்கமுடியவில்லை… சிரித்த முகமாக இருப்பவளிடம் என்ன கண்டுபிடிப்பார் அவரும்?

கண நேரம் யோசித்தவர், “திலீப் மேலதானம்மா இருக்குறான்?...” என கேட்க

“ஆமா மாமா….” என்றாள் அவள்…

“சரிம்மா… நான் என் ரூமுக்குப் போறேன்…” என அவர் அகன்றதும், அவளுக்கும் அப்போது தான் மூச்சே வந்தது போல் இருந்தது…

“நீங்க காலையில சாப்பிட்டீங்களா?...” என பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த விசாலத்திடம் சரயூ கேட்க,

“இல்லை…” என்றாள் விசாலம்…

“அதை நான் பார்த்துக்குறேன்… நீங்க முதலில் சாப்பிடுங்க… இங்க வாங்க…” என சரயூ அழைத்ததும், எதுவும் பேசாமல் பாத்திரத்தை போட்டுவிட்டு சரயூவின் பக்கம் வந்தாள் அவள்..

“இதுல தோசை இருக்கு… இதுல சாம்பார், சட்னி இருக்கு… நீங்க சாப்பிடுங்க… நான் போய் பாத்திரத்தை கழுவுறேன்…” என்றவள் விசாலம் பேசும் முன்பே தனது வேலையை தொடர்ந்தாள்…

“நான் சாப்பிட்டு கழுவிக்குறேன்… நீ அதை வைச்சிடு…” என்ற குரல் கேட்டதும்,

சரயூ சட்டென நிமிர்ந்து பார்த்தாள் விசாலத்தை…

பின், “இல்ல… இருக்கட்டும் பரவாயில்லை… நீங்க சாப்பிட்டு வாங்க…” என்றாள்…

“உடம்பு இப்போதான் கொஞ்சம் பரவாயில்லை உனக்கு… எதுக்கு அதை இதை போட்டு இழுத்து வச்சு வேலை செஞ்சு கூட கொஞ்சம் உடம்பை கெடுத்துக்கணும்… அதான் சொன்னேன்… வேற ஒன்னுமில்லை…” என்ற விசாலத்தின் வார்த்தையில் பேசுவது விசாலம் தானா என்ற கேள்விக்குறியோடு சரயூ நிற்க,

“உன் நல்லதுக்குத்தான் சொன்னேன்… கேட்குறதும் கேட்காததும் உன் இஷ்டம்….” என விசாலம் தோளைக்குலுக்க,

“சரி… சரி… நீங்களே பாருங்க… நான் மதியத்துக்கான சமையலுக்கு காய்கறி எதாவது நறுக்குறேன்….” என்றாள் சரயூ சிரித்துக்கொண்டே….

தனதறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சண்முகம் நேரே திலீப்பின் அறைக்குள் சென்றார்…

தகப்பனை பார்த்ததும், “என்னப்பா… சொல்லுங்க…” என்றான் திலீப் கோபமான குரலை மறைத்துக்கொண்டே….

மகனை சில நொடிகள் உற்றுப்பார்த்தவர், “வரும்போது அந்த முத்துவை பார்த்தீயா?...” எனக் கேட்டதும்,

தகப்பனிடம் எதுவும் சொல்லாமல் திரும்பிக்கொண்டான் அவன்…

“ஏன் திலீப் இப்படி இருக்குற?... கண்டவன் சொல்லுறதை எல்லாம் மனசுக்குள்ள எடுத்துகிட்டு உன் சந்தோஷத்தை கெடுத்துக்குறீயே ஏண்டா?...”

“என் சந்தோஷத்தை நானே கெடுத்துக்கணும்னு எனக்கென்ன வேண்டுதலா?...”…

அவனின் குரலில் சுள்ளென கோபம் தெறித்தது இப்போது…

“நீ அப்படித்தானடா நடந்துக்குற?... நீயே தான உன் தலையில மண்ணை அள்ளிப்போட்டுப்பேன்னு அடம்பிடிக்குற?...”

“பச்…… எல்லாரும் சேர்ந்து தான் என் நிம்மதியைப் பறிக்குறாங்கன்னா நீங்களுமாப்பா?...”

இப்போது அவன் குரலில் ஒருவித கலக்கம் தெரிய, மகனின் அருகில் வந்து, “நல்ல பொண்ணுடா சரயூ… அப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்… நீ படுத்துற பாட்டுக்கு இந்நேரம் வேற ஒரு பொண்ணா இருந்தா எப்பவோ உன்னை விட்டு பிரிஞ்சு போயிருப்பா… ஆனா சரயூ நீ மாறுவேன்னு நம்பிட்டு இருக்குறாடா… அவ நம்பிக்கையை கெடுக்காதடா… குட்டி தேவதை மாதிரி இரண்டு பெண் பிள்ளைகள் உனக்கு இருக்குறாங்க… நல்ல வாழ்க்கையை நீயே நாசமாக்கிடாதடா இதுக்குமேலயும்….” என்றவரின் குரலில் கவலையும், எச்சரிக்கையும் மாறி மாறி பிரதிபலித்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.