(Reading time: 10 - 19 minutes)

01. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

சில்லென்ற இதமான மென் காற்றும் சிறு தூறலும் மாலையை அழகாக்கிக் கொண்டிருந்தது.  இது போன்ற மாலை பெங்களூருக்கு புதிதல்ல.  ஒவ்வொரு மாலையையும் புதிதாக எண்ணி ரசிக்கத் தவறியதில்லை, சரயூ தேவி.  வழக்கம் போல் இன்றும் வீட்டு பால்கனியில் நின்று மாலைப் பொழுதை தெவிட்டாது ரசித்துக் கொண்டிருந்தாள்.

நடுத்தர உயரம் எலுமிச்சை நிறம் பெரிய கருநிறக் கண்கள் முகத்திற்கு அழகு சேர்க்க, அவளுடைய வசிகர புன்னகை என அனைத்தும் காண்போரை இன்னும் பார்க்கத் தூண்டும்  அழகு தேவதையாய் மிளிர்ந்தாள் சரயூ தேவி.

“சரயூ!” என்றழைத்தவாறு மிளகாய் பஜ்ஜியோடு அங்கு வந்தார் சரயூவின் அம்மா, சாரதா,.  அவரை பார்த்ததுமே சரயூ அவள் அம்மாவின் சாயலைக் கொண்டு பிறந்திருக்கிறாள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தன் அன்பு தாய் தனக்காக கொண்டுவந்த பஜ்ஜியை சுவைத்தவாறு, “சூப்பர் அம்மா… எப்பவும் போல கலக்கிட்டீங்க” என்றபடி சாரதாவின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

மகளின் அன்பில் நெகிழ்ந்த சாரதா, “எப்பவும் செய்ற பஜ்ஜிதான், சரயூ”

“நீங்க என்னதான் சொன்னாலும் இந்த பஜ்ஜிக்காக என்ன வேணாலும் செய்யலாம்மா” என்று சிரித்தவள் மேலும் தொடர்ந்தாள்

“அம்மா! எனக்கு ஏன் சரயூனு பேரு வச்சீங்க?”

“உங்க அப்பா தான் ரொம்ப ஆசைப்பட்டு இந்தப் பேரை உனக்கு வச்சாரு. சரயூ நதிப்போல என் மகளும் சுதந்திரமா, சந்தோசமா, மத்தவங்களுக்கு உதவியாய், தப்புன்னு தெரிந்ததும் கரைக்கடங்கா கோபத்தோடு பொங்கியெழும் திறமையோடும் இருக்கனும்னு சொல்லுவாரு.  அதேப்போல உனக்கும் எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறோம்.  எங்க வளர்ப்பு தப்பாக முடியாதுன்னு நீதான் வாழ்ந்து காட்டனும்மா”

“என்னோட பேருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கா?! இதை சினிமாக்காரங்க கேட்டா, படமே எடுப்பாங்க!” என்று ஆச்சரியத்தோடு தன் குறும்பு தனத்தையும் வெளியிட்டாள்.

“வாலு வாலு… பேருக்கு காரணம் கேட்டுட்டு, இப்போ இப்படி பேசுறியா நீ?” என்று சரயூவின் காதை மெல்ல திருகினார் சாரதா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - விறுவிறுப்பான திகில் தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ஆ..அம்மா…வலிக்குது விடுமா.. என் செல்ல அம்மா இல்லை.. விடுமா”

“என் மகளை யார் என்னப் பண்ணாங்க?” என்று கேட்டவாறு வந்தார் ரவிகுமார்.  சரயூவின் அன்பு தந்தை, ரவிகுமார், நகரின் பிரபலமான மருத்துவமனைக்கு உரிமையாளர்.  சரயூ அப்பா செல்லம்.  என்னதான் சாரதா அன்பை பொழிந்தாலும் சில சமயங்களில் கண்டிப்பாக இருப்பவர்.  ஆனால் ரவிகுமாரோ எந்த காரியமானாலும் அன்பாலே சாதித்துவிடுவார்.  இதனால் தான் சரயூ அப்பா செல்லம்.

“ஹப்பாடா தப்பிச்சோம்” என்று மனதில் நினைத்தவள், கணவர் புறம் திரும்பியிருந்த சாராதாவின் கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு  தந்தையின் தோளில் தன் தலையை சாய்த்து

“பாருங்கப்பா… அம்மா என் காதை திருகிட்டாங்க” என்று செல்லம் கொஞ்சினாள்.

“என்ன நடந்தது சாரதா? ஏன் இப்படி பண்ணின?”

சாரதா அங்கு நடந்ததை விளக்கினார்.  எல்லாவற்றையும் கேட்ட பின்பு ரவிகுமார் யோசனையோடு மகளைப் பார்த்து

“உனக்கு பேரு பிடிக்கலையாடா?”

“அப்படியெல்லாம் இல்லைப்பா.  என் பேரோட அர்த்தம் எனக்கு தெரியும்.  ஆனாலும் அம்மாகிட்ட ஏன் இந்த பேர் வச்சிங்கன்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்.  என் பேருக்கான காரணத்தை புரிஞ்சுக்கிட்டேன்.  அதுபோலவே நடப்பேன்.  இதுக்கெல்லாம் இவ்வளவு யோசிக்காதிங்க”

“இல்லடா சரயூ… உனக்கு பிடிக்காததை நான் செய்ததில்லை.  ஆனால் பேரு உன்னை கேட்டுட்டு வைக்கலையே.  பேரு வக்கிர வயசுல உன்னை கேட்டு முடிவெடுக்க முடியாதில்லை” என்றார் புன்னகையோடு.

“எனக்கு தெரியுமே. நீங்க எதுவானாலும் என் விருப்பத்தை கேட்பீங்கன்னு.  எனக்கு என் பேரை ரொம்பவே பிடிச்சிருக்கு” என்று புன்னகைத்தாள்.

ஆனால் விதியின் செயல் அவர்கள் யாருக்குமே தெரியாமல் போயிற்று.  அவள் வாழ்க்கையின் பெரிய திருப்பம் அவளின் விருப்பமில்லாமல் நடக்குமென்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

“ராகுல் வர நேரமாச்சு.  நான் டின்னர் ரெடி பண்றேன்” என்றபடி உணவு தயாரிக்க சென்றார் சாரதா.

சரயூவின் அண்ணன் ராகுல்.  பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஒரு பிரபலமான ஐ.டி கம்பெனியில் பணிபுரிகிறான்.  இதில் கிடைக்கும் பணத்தையும் அனுபவத்தையும் முதலாக கொண்டு விரைவில் தொழில் தொடங்குவது அவனின் லட்சியம்.  ராகுலின் இந்த திட்டத்தில் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்லாமல் பெருமையும் கூட.  பரம்பரையாக வந்த சொத்துகளை விற்று கிடைகும் பணத்தை முதலாக கொண்டு தொழில் தொடங்கும் இன்றைய பெருபான்மையான இளைய தலைமுறையினரின் மத்தியில் தங்கள் மகன் அவனின் சொந்த முதலீட்டில் தொழில் தொடங்கவிருப்பது பெற்றவர்களை உச்சி குளிர வைத்தது.  பரம்பரை சொத்துகள் இருந்தும் தன் சொந்த முயற்சியில் முன்னேறி ஒரு மருத்துவமனை உருவாக்கியிருக்கும் தந்தையையே மகனும் பின்பற்றுகிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.