(Reading time: 16 - 32 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 04 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

சில நிமிடங்கள் கடந்து நிகழ்ச்சி நிறைவுக்கு வந்திருக்க அங்கிருந்து கிளம்பி ஓடி விடும் தவிப்பிலேயே இருந்தாள் அபர்ணா. பரத்தின் பார்வையை சந்திப்பதை கூட தவிர்த்தபடியே இருந்தாள் அவள். அதை அவனும் உணராமல் இல்லை.

'கிளம்பலாமா விஷ்வா...' என்றாள் அவள் மெதுவாக.

விஷ்வா பதில் பேசுவதற்கு முன்னதாக அவசரமாக பதில் வந்தது பரத்திடமிருந்து.....

'ஏன்??? ஏன்?? ஏன்??? அதுக்குள்ளே??? நைட் டின்னர் அரேஞ் பண்ணி இருக்காங்க. சாப்பிட்டு போலாமே.

'ஹேய்... சாப்பாடா??? சொல்லவே இல்ல... வா வா போலாம்...'  இது விஷ்வா.

தனக்கு நெற்றிக்கண் இல்லையே என்று இருந்தது அபர்ணாவுக்கு. இருந்திருந்தால் விஷ்வாவை அங்கேயே.... அவளது முறைப்பை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. விஷ்வா முன்னால் நடக்க அபர்ணா நகராமல் அங்கேயே நிற்க

'ப்ளீஸ்... அபர்ணா...' அவள் அருகில் வந்து நின்று அழைத்த  பரத்தின் குரல் இளகிக்கிடந்தது. மறுக்க இயலாதவளாக நடந்தாள் அவள்.

அந்த பெரிய அரங்கத்தின் தோட்டத்தில் விருந்து. வந்திருந்தவர்கள் எல்லாம் ஊரில் இருக்கும் பெரிய புள்ளிகள். அவ்வப்போது சிலர் வந்து பரத்தை வாழ்த்தியபடி இருக்க......

இந்த விஷ்வா வேண்டுமென்றே செய்கிறானா??? தெரியாமல் செய்கிறானா புரியவே இல்லை அபர்ணாவுக்கு., அவன் இவள் கண்களுக்கே தட்டுப்படவில்லை!!!!

எப்படி சிக்கினார்களோ??? அந்த விழாவுக்கு வந்திருந்த ஒன்றிரண்டு டாக்டர்களை பிடித்துக்கொண்டு சாப்பிட்ட படியே அவர்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்திருந்தான் விஷ்வா. கண்கள் விஷ்வாவையே தேடிக்கொண்டிருக்க, உணவு தொண்டைக்குள் இறங்க மறுக்க.......

'சாப்பிடுமா...' அருகில் ஒலித்த பரத்தின் குரலில் ஒரு நொடி குலுங்கி ஓய்ந்தாள் அவள்.

'ஆங்?? ம்... சாப்பிடறேன்...

'என்ன சாப்பிடறேன் ... தட்டிலே ஒண்ணுமே இல்ல... இப்படி வா...' அவன் அழைப்பில் அன்பை தவிர வேறெதுவுமே இல்லை. பதில் மொழி எழவில்லை. மூச்சு முட்டியது அபர்ணாவுக்கு.

'முதல்லே ஸ்வீட் சாப்பிடு...'  அங்கிருந்த ஜாமூன்களில் ஒன்றை எடுத்து அவள் தட்டில் வைத்தான் பரத். கொதி மணலில் நிற்பதை போன்றதொரு உணர்வு அவளுக்குள்ளே. தவித்து தளர்ந்து ஒரு முடிவுக்கு வந்தவளாக...

'ப்ளீஸ்... பரத்... இது... இதெல்லாம் வேண்டாம்...'

'ஏன்டா... ஸ்வீட் பிடிக்காதா???'

'அது இல்ல... வேறே... அது நான்... வந்து.... எனக்கு வேறே ஒருத்தர்... அருண்!!!!' திணறி... திக்கி... தடுமாறி முடித்தாள்.

அவன் அதிர்ந்து போவானென நினைத்து அவள் மெல்ல மெல்ல விழி நிமிர்த்த.... தனது தட்டிலிருந்து ஒரு ஸ்பூன் உணவை வாயில் போட்டபடியே படு நிதானமாக கேட்டான் பரத்.

'ஸோ.???'

கொஞ்சம் விக்கித்து போய் நிமிர்ந்தாள் அவள் 'நான் சொல்றது உங்களுக்கு புரியலையா.. நான்...'

'கல்யாணம் ஆயிடுச்சா???' அவள் முடிக்கும் முன்பே இடை மறித்தான்.

.............................................

'பதில் சொல்லு கல்யாணம் ஆயிடுச்சா???'

'ம்ஹூம்.... ' மெல்ல தாழ்ந்தன அவள் விழிகள்.

'ஸோ... அதுவரைக்கும் உன்னை லவ் பண்றதுக்கு எனக்கும் முழு உரிமை இருக்கு அபர்ணா. நான் ஒண்ணும் தேர்ட் ரேடெட் வில்லன் இல்லை. அப்படி ஒரு வேளை உன் கழுத்திலே அவர் தாலி கட்டிட்டார்ன்னு வை.... அதுக்கப்புறம்....' சொல்லிக்கொண்டே இருந்தவன் ஏனோ அந்த காட்சியை கற்பனையில் பார்த்ததை போல் அப்படியே மௌனமானான்..

பின்னர் சட்டென தன்னிலை பெற்றவன் 'அதுக்கப்புறம்...... நான் இந்த நாட்டிலேயே இருக்க மாட்டேன்... இது சத்தியம்... ' என்றான் உறுதியாக. விழிகளை கூட நிமிர்த்தவில்லை பெண்.

'ஆனா அ...து ..வரை....க்கும்..... அது வரைக்கும் எது வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் ..நடக்கலாம் ..... மாறலாம் ..... இல்லயா அபர்ணா.??? ஒரு வேளை நம்ம ரெண்டு பேருக்கும் முடிச்சு போட்டிருந்தா???

விருட்டென நிமிர்ந்தவளின் முகம் அப்படியே வாடி சுருங்கிப்போனது. பேசாமல் விலகி நகர்ந்து அங்கே காலியாக இருந்த ஒரு மேஜையில் சென்று அமர்ந்துக்கொண்டாள் அவள். பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் அவன்.

'நான் எதற்காக என் கண்ணம்மாவை விட்டுக்கொடுக்க வேண்டும்??? மாட்டேன். நிச்சியமாக மாட்டேன்' உள்ளுக்குள் மருகிக்கொண்டான் சில நொடிகள்!!!! ஆனால் அரை நிமிடத்தில் அவன் பார்வை தன்னாலே அவள் புறமாகவே திரும்பியது.

'ஒரு வேளை அழுகிறாளோ???' அந்த எண்ணம் வந்த மூன்றாம் நொடி அவள் அருகில் சென்று அமர்ந்திருந்தான் அவன். அவசரமாக அவள் முகம் ஆராய்ந்த கண்களில் அவள் அழவில்லை என்று புரிந்த பிறகே நிம்மதி ரேகைகள்.

சில நொடிகளுக்கு மேல் பேசாமலும் இருக்க முடியவில்லை அவனால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.