(Reading time: 31 - 61 minutes)

13. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ர்னவினை தன் நினைவில் உலவவிட்டுக்கொண்டிருந்த ஜானவியை அதே நேரத்தில் தனது சிந்தையில் படரவிட்டுக்கொண்டிருந்தான் அவன்…

அவனுக்கே அவனது நடவடிக்கை பிடிக்கவில்லை… அவள் பெரிதாய் ஒன்றும் கேட்கவில்லை… என்ன வேலை என்று தான் கேட்டாள்… அதற்கே தான் அப்படி கோபப்பட்டிருக்கக்கூடாது என மனதினுள் தன்னையே திட்டிக்கொண்டான்…

இருந்தாலும் அந்த சமயத்தில் அந்த கோபம் தான் அவனுக்கு உதவி செய்கிறது… அந்த ஒரு சமயத்தில் மட்டுமல்ல…. அவளுடன் பேசும்பொழுதெல்லாம் அவன் இந்த கோப சாயத்தை முகத்தில் பூசிக்கொள்வான்… மேலும் அதன் துணையோடு அவளை வாட வைத்து விட்டு இங்கே அவன் பட்டே போவான்…

அனைத்தும் அவனுக்கே தெரிந்த போதிலும், அவனால் அந்த கோபத்தை உதவிக்கு அழைக்காமல் இருக்க முடிவதில்லை…

அவளுடன் ஒவ்வொரு முறை போனில் பேசிவிட்டு வைக்கும்போதும், மனதில் பல மடங்கு பாரம் ஏறியது போல் உணர்வான்… இருந்தும் என்ன செய்ய, அதே பாரத்தை தானே, தானும் அவள் மனதில் ஏற்றி வைத்திருக்கிறேன் என்று எண்ணிய வேளையே அவன் துவண்டு போவான்…

ஆனாலும் எதையும் அவன் வெளிக்காட்டிக்கொண்டதில்லை எப்போதும் யாரிடத்திலும்… முகத்தில் புன்னகை மயமாக உலாவருபவனிடத்தில் யாரும் எதையுமே கண்டுபிடித்திட முடியாது… எனினும் உள்ளுக்குள் அவன் உடைந்த கண்ணாடி சிதறலாய் இருக்கிறான் என்பது அவனும் அந்த கடவுளும் மட்டும் அறிந்திட்ட பரம ரகசியம்…

பாவம்… அவன் அறிந்திடாத உண்மையும் ஒன்று உண்டு… அது யாதெனில், அவனின் இந்த கோபம் தனக்காகவே என அறிந்து தான் வைத்திருந்தாள் ஜானவி…

நெருங்கி நெருங்கி வருபவளிடத்தில் தூர தூர விலகி போகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல் அவளை தூர விலக்கி வைப்பதொன்றே அவனது முதல் குறியாக இருந்தது…

என்ன செய்தால் தன்னை விட்டு அவள் விலகி போவாள் என்று யோசித்து யோசித்து அவன் எடுத்த முடிவே இந்த கோபச்சாயம்…

அதை பூசிக்கொள்ளும் போது அவனுக்கே அவன் மேல் எண்ணிலடங்கா கோபமும் வெறுப்பும் வரும்… இருந்தும் காலத்தில் கட்டாயத்தின் பேரில் அவன் அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தும்போது அவள் நொறுங்கி போகிறாளே இல்லையோ இங்கே அவன் கொஞ்சமும் மிச்சம் இல்லாமல் துண்டு துண்டாய் உடைந்தே போவான்…

விதி வலியது என்ற வாசகத்தை மனதினில் நிறைத்துக்கொண்டு அவளை மாற்றுகிறேன் என்ற பெயரில், தானே புது முகம் கொண்ட மனிதனாக மாறிப்போவதை கண் கூடாக கண்டு வேதனை கொள்வான் அவன்…

பெண் அவள் அழுது தீர்த்து விடலாம் தனது ஆதங்கத்தை… இல்லையேல் நெருங்கிய தோழியிடம் இறக்கி வைத்திடலாம் தனது மனக்குமுறலை…

ஆனால் அவன்?... அவன் நிலைமை யார் அறிவார்?... இல்லை யார்தான் அறியக்கூடும்?...

அவனுக்கு நெருக்கமான தோழியே அவள் மட்டும் தான்… அவளிடமே அவளை காயப்படுத்திய நோக்கத்தை அவன் பகிர்ந்து கொள்ள முடியுமா?... இல்லை அது கொண்ட ரணத்தை தான் அவன் அவளிடம் காட்டி மருந்திட செய்ய முடியுமா?...

எதுவுமே அவனால் முடியாதே… அவன் கொண்ட துக்கம் அவன் நெஞ்சில் மட்டும் தானே தங்கி நிற்கிறது குளம் போல்… வடிகாலும் உருவாக்கிடாமல், கொஞ்சமும் துக்கம் வற்றும் நாளும் இல்லாமல்…

வார்த்தைகளில் அவளை அவன் வதைப்பதென்னவோ உண்மைதான்… அதைவிட பலமடங்கு அவன் இங்கே வதைக்கப்படுவது மற்றவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவளுக்கு தெரியும்…

அவனின் மனதை புரிந்து கொண்டவள் போல் அவள் அவனுக்கு ஆதரவாக அன்பாக பேச முனையும் நேரம், அவன் அவளை புறக்கணிக்க ஆரம்பிப்பான் வேண்டுமென்றே….

எவ்வளவு தான் பிரம்மபிரயத்தனப்பட்டு அவள் அவனை நெருங்க முற்பட்டாலும் அவன் அவளை துளியளவு கூட நெருங்க விடமாட்டான்…

தெரியும் அவனுக்கு, அவளை நெருங்கவிட்டால் என்னாகும் என்று…. அதனாலே அவளை ஓர் வார்த்தை கூட தன்னிடம் அன்பாக பேச அனுமதித்திட மறுப்பான்…

சாப்பிட்டீங்களா என்று அவள் அன்பாக கேட்கும் நேரம் காயம்கொண்ட மனதுக்கு இதமாக இருந்தாலும் அதை வலுக்கட்டாயமாக தள்ளி நிற்க வைத்து துரத்திடுவான் அவன்…

அவளுடைய எந்த கேள்விகளுக்கும் அவன் சரியாய் பதில் சொல்லிட மாட்டான்… அது தெரிந்தும் அவனிடம் கேள்வி கேட்பதை தனது வழக்கமாகி கொண்டிருக்கிறாள் என தெரிந்து தான் வைத்திருந்தான் அவனும்…

அதனாலேயே அவள் போன் செய்தாலும் எதுக்கு போன் பண்ணின? என்று தான் முதலாக கேட்பான்… அப்பொழுது தானே அவளும் கோபப்பட்டு உடனே போனை வைத்திடுவாள் என்ற நப்பாசையும் அவனுக்கு தோன்றாமல் இருந்ததில்லை….

ஆனால் அவள் அப்படி செய்திட்டால் தானே… நீ என்னதான் முறைத்துக்கொண்டு நின்றாலும் நான் இரண்டு வார்த்தை பேசிவிட்டு தான் வைப்பேன் என்று வீம்புடன் அவனிடம் பேசுவாள் போனில்…

என்ன தான் அவனது நிராகரிப்பை ஏற்றுக்கொண்டு பேசினாலும், கடைசியில் வலியுடனே அவள் போனை வைக்கும்படி செய்திடுவான் அவன்… அதில் அந்த வீம்புக்காரிக்கு சளைத்தவன் இல்லை என புரியவைத்திடுவான் அவன்…

பெரும்பாலான சமயங்களில் அதை ரசிப்பவள், சில சமயங்களில் அழுதிடவும் செய்வாள் யாருக்கும் தெரியாமல்…

என்ன செய்வது?... நேசம் கொண்ட நெஞ்சத்திற்கு காதலை சுமப்பது போல் காயத்தை சுமப்பது அவ்வளவு எளிதாக இல்லை…

அப்படித்தான் இருந்தது அர்னவிற்கு அவள் காதல் சொல்லிய நொடியும்… காதலை ஏற்பதா?... இல்லை காயத்தை அனுபவிப்பதா? என்று… இறுதியில் அவளுடைய காதலை ஏற்பதை விடுத்து, காயத்தை அவளுக்கும் கொடுத்து தானும் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றான் இன்றளவும் கொஞ்சமும் மாற்றமில்லாமல்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.