(Reading time: 11 - 22 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலா

Vivek Srinivasan

வேகம்!!!        

யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத ஒரு வேகத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பறந்துக்கொண்டிருந்தது அந்த ஹோண்டா சிட்டி!!! நேரம் இரவு ஒன்றை தாண்டிக்கொண்டிருக்க, சென்னையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது அந்த கார்.

நிறம் மங்கிப்போயிருந்த வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவும், நான்கைந்து நாள் ஷேவ் செய்யபடாத தாடியும், அதிக கவனம் எடுத்துக்கொள்ளாமல் வாரப்பட்ட கேசமுமும், இவை எல்லாவற்றையும் தாண்டி முகத்தில் எதை பற்றியுமே கவலை படாத ஒரு பாவமுமாக, அந்த காரை செலுத்திக்கொண்டிருந்தான் அவன்!!!!

சட்டென அவனது கைப்பேசி ஒலிக்க, ஒரு முறை அதை எடுத்து பார்த்தவன் காரின் வேகத்தை குறைத்து, அதை ஓரமாக நிறுத்தி விட்டு அழைப்பை ஏற்றான். அவனது அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு.

'ம்...'

.........

'யா....'

..........

'ஷூர்...'

பேசி முடித்தவன், மொபைலை காரின் பக்கத்து சீட்டில் போட்டு விட்டு கதவை திறந்துக்கொண்டு இறங்கினான். காருக்குள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டான். பின்னர் மெல்ல விழிகளை சுழற்றினான். சுற்றும் முற்றும் சூழ்ந்திருந்த இருள் அவன் நினைவுகளை சுழற்றியது.

'அப்பா... வேண்டாம்பா... எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா... ரொம்ப இருட்டா இருக்கு பா... ப்ளீஸ் பா .... தனியா போக மாட்டேன் பா....'

'பயமா??? அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்... 'பயம்'ங்கிற வார்த்தையே என் பையன் வாயிலிருந்து வரக்கூடாது... போடா... போய் பத்து நிமிஷமாவது ரோட்டிலே தனியா நடந்திட்டு வா போ...' அவனது ஒன்பதாவது வயதில், அவனுக்கு அப்போதிருந்த பயங்களை ஒன்றொன்றாக தெளிவிக்க அவன் அப்பா கற்றுக்கொடுத்த முதல் பாடம் இது.

இப்போது அவனுக்கு வயது 32!!!  இப்போது பயமே அவனை பார்த்து பயப்படும்!!!! தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் அவன்!!!

'அப்பா!!! அவன் அப்பா!!!' அவனுக்கு எல்லாமே அவர்தானே!!! ஏதேதோ நினைவுகள்!!!'

ஏனோ ஒரு முறை ரோட்டில் தனியே நடந்து விட்டு வர வேண்டும் போல் இருந்தது. காரை பூட்டி சாவியை பைஜாமாவின் பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு நடந்தான் அவன்.

கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் நடந்து விட்டு காருக்கு திரும்பி, காரை திறக்க நினைத்தவனுக்கு கையில் தட்டு படவில்லை கார் சாவி.

பதற்றம், அவசரம், பரபரப்பு எதுவுமே இல்லை அவனிடம். இவை எல்லாம் அவனை விட்டு போய் பல வருடங்கள் ஆகின்றன.

'எங்கே விழுந்திருக்கும் அது???.' அவனது கண்கள் சுழன்றன. மொபைலும் காருக்குள் இருக்க, நிலவின் ஒளி மட்டுமே அவனுக்கு உதவியது. பல நேரங்களில் இருளை ஊடுருவி  பழக்கபட்டவை தானே அவனது விழிகள்!!!

சாவியை தேடி எடுத்துக்கொண்டு அவன் காருக்கு அருகில் வந்து காரின் மீது கை வைத்த போது அவனது தோளில் விழுந்தது ஒரு கை. அவன் சட்டென திரும்ப அங்கே நின்றிருந்தனர் இரு போலீஸ்காரர்கள்.

'அப்போலேர்ந்து பாக்குறேன் இந்த காரையே சுத்தி சுத்தி வரே??? என்ன காரை தள்ளிட்டு போலாம்னு பாக்குறியா??? அவர்கள் கேட்க கண்கள் விரிய கேள்வியான பார்வையுடன் திரும்பினான் அவன்.

இருவரையும் ஏற இறங்க பார்த்தவன் 'என்னது???' என்றான் நிதானமாக 'காரை தள்ளிட்டு போறேனா???'

பின்ன....  இந்த காருக்கு சொந்தகாரனா நீ??? ஆளையும், டிரஸ்சையும் பாரு.... மூஞ்சியிலேயே திருடன்னு எழுதி ஒட்டி இருக்கு....' அதில் ஒரு போலீஸ்காரர் சொல்ல ஒரு முறை தன்னை பார்த்துக்கொண்டான் அவன்.

இதழ்களில் சின்னதாக ஒரு புன்னகை ஓட்டம். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு காரில் சாய்ந்து நின்று கொண்டான். அந்த காட்சியை சுவாரஸ்யமாக ரசிக்கும் பாவத்துடன் அவர்களை பார்த்தபடியே தனது பாக்கெட்டில் இருந்த சியூங் கம்மை எடுத்து வாயில் போட்டு சுவைக்க ஆரம்பித்தான்.

'என்னடா ஸ்டைலா லுக் விடறே... நடடா ஸ்டேஷனுக்கு...' போலீஸ்கராரின் குரலில் மரியாதை குறைய, இவன் முகத்திலும் கொஞ்சம் கோப ரேகைகள். எப்போதுமே தனது கோபத்தை படாரென வெளிப்படுத்தி பழக்கம் இல்லை அவனுக்கு. அசையவில்லை அவன்.

'நீயா வரியா... இல்லை அடிச்சு இழுத்திட்டு போகவா...' அவர் சொல்ல சுறுசுறுவென ஏறியது இவன் கோபம். அவன் முகமும் கண்களும் அதை பிரதிபலித்த விதத்தில் கொஞ்சம் திகைத்துதான் போயினர் அந்த போலீஸ்காரர்கள். அவர்கள் கால்கள் தன்னாலே இரண்டடி பின்னால் நகர்ந்தன.

'ஏன் பின்னாடி போறீங்க??? என் மேலே கைவெச்சு தான் பாருங்களேன்....' என்றான் சூடான குரலில். அவர்கள் கொஞ்சம் தடுமாறி நிற், அப்போது  அங்கே வந்து நின்றது  போலீஸ் ஜீப். அதிலிருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர். அவரிடம் ஓடி சென்றனர் இருவரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.