(Reading time: 17 - 33 minutes)

ப்ச்ச்ச்.,. நான் உன்கிட்ட அப்பறமா பேசுறேன்” என்று ஃபோனை கட் செய்தான் வெற்றி. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. “ இந்த பேச்சையே எடுத்திருக்க வேணாம்..இந்த பேச்சை ஆரம்பித்தாலே அது சண்டையில் தான் முடியும்ன்னு தெரிஞ்சும் பேசி இருக்கேனே ! எனக்கிது தேவைத்தான்” என்று நினைத்தவள் மீண்டும் மீண்டும் அவனை அழைக்க அவன் ஃபோனையே எடுக்கவில்லை.. எப்படியும் சென்னை சென்றதும் தன்னை அழைப்பான்..இப்போதைக்கு அவனது கோபம் குறைய கொஞ்சம் நேரம் அவனை இம்சிக்காமல் இருப்போம் என்று விட்டுவிட்டாள்.

காட்சி 2

டுத்தர குடும்பங்கள் வாழும் காலனியில் அழகுக்கு பஞ்சமே  இல்லாத வீடு அது. எழில் கொஞ்சும் வண்ண வண்ண பூக்கள் பூத்துக்குளுங்கும் தோட்டத்தின் நடுவே ப்ரதானமாய் இருந்தது அந்த வீடு. எழில் பொங்கும் அந்த வீடு அதிரும் படி கர்ஜித்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.

“ தத்தி தத்தி,நீ படிச்சு என்ன கிழிக்க போற? இத்தனை வருஷம் உன் மண்டையில ஏறாத படிப்பா இப்போ ஏறிட போகுது?”

“இல்லப்பா.. அது வந்துப்பா..நான் எப்படியாவது இந்த தடவை நல்லா படிக்கிறேன்பா..எனக்கு இந்த சினிமா எல்லாம் வேணாம்பா” சிங்கம் போல கர்ஜித்து தன்னை பார்த்து முறைத்து கொண்டிருந்த தந்தையை மிரட்சியாய் பார்த்து பேசினாள் அர்ப்பணா.

“ இது பாரு அர்ப்பணா, நான் முடிவு பண்ணிட்டேன். நீ அந்த படத்துல நடிக்கிற! அவ்வளவுதான் ! பிரபலமான ஒரு டைரக்டர் உன்னைய எங்கயோ பார்த்துட்டு நீதான் அவர் படத்துல ஹீரோயினாக நடிக்கனும்ன்னு சொல்றாரு, எப்படி அதை நான் மறுத்து பேச முடியும்? அது மட்டுமா, அவரு எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா? அவருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. நான் என்ன கண்டவன் படத்துலயும் போயி நடின்னா சொல்லுறேன்?” என்றார் அவர். தந்தையின் குரலில் தெரிந்த பிடிவாதம் அர்ப்பணாவிற்குள் கலவரத்தை உண்டாக்கியது. கெஞ்சும் பார்வையுடன் தனது அன்னையை பார்த்து மன்றாடினாள்.

தன் கணவருடன் இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழும் மீனாட்சிக்குத் தெரியும், எப்படியும் தன் கணவர் தனது பிடிவாதத்தை கைவிட மாட்டார் என்று.! எனினும் ஒரு தாயாக தனது கடமையில் இருந்து தவற கூடாதே என்று தவித்தது அந்த தாயுள்ளம்.

“ என்னங்க பேச்சு இது ? நமக்கும் சினிமாவுக்கும் என்னங்க சம்பந்தம் ? பெத்த பொண்ணை யாராவது,கண்ணை கட்டி காட்டுல விடுவாங்களா?”

“ எதுடீ காடு ? இந்த  வாய்ப்புக்காக எத்தனை பேரு வீடு, நாடு விட்டு சுத்திட்டு இருக்காங்க தெரியுமா டீ உனக்கு ?”

“ எதுவுமே தெரியாத மாதிரி பேசாதிங்க.. ஒரு பையன் சினிமாவில் நடிச்சா அதுல எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா ஒரு பொண்ணுக்கு அப்படியா? சொந்த பந்தம் என்ன சொல்லும் ? இவளுக்கு எப்படி மாப்பிள்ளை பார்ப்பிங்க ? அதை விடுங்க, அவளுக்கு அங்க பாதுகாப்பு இருக்குமா? உலகம் அறியாமலா நாம இருக்கோம்?” மீனாட்சியின் விழிகளில் கண்ணீரும் இதயத்தில் குருதியும் வழிந்தது.

“ முட்டாள் மாதிரி பேசாத..எல்லாம் எனக்கு  தெரியும்.. நான் வாக்கு கொடுத்துட்டேன்.. என் பொண்ணு நான் சொன்ன பேச்சை மீற மாட்டான்னு சொல்லிட்டு வந்துருக்கேன்.. கெட்டதை மட்டுமே நினைச்சு பார்க்காம,கொஞ்சம் நல்லதையும் யோசிச்சு பாரு.. நம்ம பொண்ணுக்கு புகழ் கிடைக்கும். ஒருவேளை இந்த படம் வெற்றியடைஞ்சா, நம்ம வாழ்க்கையே ஒருபடி மேல போயிடும். நான் என்ன இவளை நடிச்சிட்டே இருன்னா சொல்லுறேன்? ஒரே ஒரு படம் தானே ?” என்றார் அவர். அவர் பேசிய விதத்திலேயே இந்த முடிவில் இனி மாற்று கருத்து இல்லை என்று புரிய வந்தது. மேலும் மனைவி, மகள் இருவரும் பேசுவதற்கு வாய்ப்பே தராமல் அங்கிருந்து சென்றிருந்தார் அவர்.

“அம்மா” என்று கேவிய மகளை இயலாமையுடன் பார்த்தார் மீனாட்சி. அர்ப்பணாவின் முகத்தை பார்ப்பதற்கே அவருக்கு சங்கடமாய் இருக்க, அமைதியாய் அவளின் அறையை விட்டு வெளியே சென்றார். கசப்பாய் புன்னகைத்தாள் அர்ப்பணா.. “ என் விதி இவ்வளவுதான் ! யாரு என்ன சொன்னாலும் தலை ஆட்டி வாழனும்.. இதுதானே என் வாழ்க்கை?” அவளுக்கு அவளே சொல்லி கொண்டாள்.

ஆம், இயல்பிலேயே மற்றவரை எதிர்த்து பேசும் குணமில்லை அவளுக்கு. அடிப்படையில் இது நல்ல குணம் தான் என்றாலும் கூட அவளின் வாழ்வை பலமுறை திருப்பி போட்ட குணம் அது. தனக்கான நியாயமான உரிமைகளை கூட அவள் விட்டுக்கொடுத்தே பழகிவிட்டாள். விளைவு? அவள் வாழ்க்கை பிறர் கையில் !

காட்சி 3

தற்கு தேவையில்லாத வேலை பார்க்குறிங்க மேனஜர் அங்கிள் ? நான் உங்களை என் காலேஜ்க்கு வர சொன்னேனா?  என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டிங்களா? ச்ச!!” பற்களை கடித்தபடி கர்ஜித்து கொண்டிருந்தான் சத்யன்.

கோபத்தில் வெடிக்கும்  மகனையும், வீட்டு வாசலையும் பரிதவிப்புடன் பார்த்து கொண்டிருந்தார் அவனின் தாயார் சுலோட்சனா. அவரின் இறைஞ்சும் பார்வைக்கோ அல்லது மேனெஜரின் “சாரி” க்கோ மனம் இறங்கவில்லை சத்யன். அவனைப் பொருத்தவரை இது மிகப்பெரிய குற்றம். இதற்கு அவரை எரித்தாலும் பரவாயில்லை என்று எண்ணிகொண்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.