(Reading time: 26 - 51 minutes)

16. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

மௌனம்… மௌனத்திற்கு வர்ணனை என்ன கூற முடியும்?... அழகான உணர்வுகள் அப்படியே காற்றில் மிதக்க, வார்த்தைகள் அப்படியே மறைந்து போக, விழிகள் மட்டும் சத்தமின்றி உறவாடிக்கொள்ளும் தருணம் கேட்டாலும் கிடைத்திடுமா என்ன?...

சதி ஜெய்யையும், ஜெய் சதியையும் இமைக்காது சில நொடிகள் மட்டும் பார்த்துக்கொண்டிருக்க, அந்த சில நேர பார்வைகள் அவர்களுக்குள் என்னென்ன தகவலை பரிமாறியிருக்குமமோ!!!… இருவருமே அந்த மென் மௌனத்தில் கரைந்து கொண்டிருந்த பொழுது சட்டென தன்னிலை அடைந்து அவளிடமிருந்து பார்வையை விலக்கிக்கொண்டான் ஜெய்…

என்ன காரியம் செய்துட்ட ஜெய்?... என அவனை அவனே மனதினுள் திட்டிக்கொள்ள,

“டேய்…. பாவி… ஒரு நிமிஷம் கூட பார்க்கலையேடா நல்லா…. அதுக்குள்ள உன் மூளை முழிச்சு, ஏண்டா நான் பண்ணுற காரியத்தை கெடுத்துச்சு???….” என அவன் மனமும் அவனை வசைபாட தொடங்கிய போது,

அவன் பார்வை தன்னிடமிருந்து விலகி நிற்பது அறிந்து, சிறியதாய் நீண்டிருந்த அந்த மௌனத்தை கலைத்தாள் சதி மெதுவாக…

“அவன் என்னத்தான கொல்ல வந்தான்… எதுக்கு நீங்க குறுக்க வந்தீங்க?...”

அவளிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவனுக்கு சட்டென தோன்றிய கோபம் அடுத்து அவள் சொன்ன வார்த்தைகளில் வந்த வழி காணாமல் மறைந்து போனது மாயமாய்…

“உங்களுக்கு எதும்னா என்னால தாங்க முடியாது….. அது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டிக்குது… உயிர் போய் உயிர் வந்திருக்கு தெரியுமா எனக்கு?...” என முழுதாக சொல்லி முடிப்பதற்குள் ஏகப்பட்ட விசும்பல், அழுகை…

அத்தனையும் தீர காத்திருந்தவன், அவள் அழுது முடித்து ஓய்ந்த பின், பேச முனைந்த போது, அவள் தடுத்தாள்..

“ஒன்னும் சொல்ல வேண்டாம்… நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்… போலீஸ்காரன் லைஃப் அப்படித்தான் இருக்கும்… அதுக்குத்தான் உன்னை ஒதுங்கி போக சொல்லுறேன்னு எதாவது கடுப்படீச்சீங்க அப்புறம் நான் மனுஷியாவே இருக்கமாட்டேன் சொல்லிட்டேன்….”

அவளது பேச்சைக்கேட்டு அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது… எனினும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே அவன் இருக்க,

“சரியான அழுத்தம் தான் உங்களுக்கு… ஒருவார்த்தை பேசுறீங்களா?...” என பொய்க்கோபம் கொண்டவள், மறுகணமே,

“இல்ல இல்ல வேண்டாம்… எதுவும் பேச வேண்டாம்… உடம்பு குணமாகட்டும்… அப்புறம் நிறைய பேசுங்க… நான் கேட்குறேன்… சரியா?...” என குழந்தை போல அவள் தலைசரித்து கேட்க, அவன் அவளை இமைக்காமல் பார்த்தான்…

“தூக்கம் வருதா ஜெய்?... தூங்குறீங்களா?... உட்கார கஷ்டமா இருக்கா?... படுத்துக்குறீங்களா?...” என மாறி மாறி கேட்க, அவனுக்கு அவளின் அக்கறை இதத்தை அளித்தது…

“ம்ம்ம்…..” என அவன் குரல் வெளிவர, அவனருகில் சட்டென குனிந்தவள்,

“நீங்க படுத்துக்கோங்க ஜெய்… ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க….” என தலையணையின் மீது கைவைக்க போகையில்,

“நான் பார்த்துக்குறேன்….” என்பது போல் சைகை காட்டியவன், மெதுவாக நகர்ந்து கொள்ள, அவள் நேராக இருந்த தலையணையை படுக்க வைக்க, அவனும் மெல்ல அதில் தலை சாய்த்து படுத்தான்….

“எதும் வேணும்னா கூப்பிடுங்க…. சரியா?..” என சொல்லிவிட்டு, அவனைப் பார்க்க, அவன் தனது விழி மூடிக்கொண்டான்…

“வலிக்குதா ஜெய்….?...” என அவள் கேட்க அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை… சீரான சுவாசம் மட்டும் வர, தூங்கிவிட்டார் போல என்றெண்ணிக்கொண்டவள், அவனை மனதே இல்லாமல் விட்டுவிட்டு வெளியே செல்ல எத்தனித்தாள், அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே….

வாசல் அடைந்தும் அவள் பார்வை அவனிடமிருந்து அகலவில்லை…

“பாவம் அவர்… தூங்கட்டும்…” என தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல அங்கிருந்து அவள் சென்றவுடன், அவன் விழி திறந்தான்…

அவள் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே சென்றது, வலிக்குதா ஜெய் என கேட்டது?... தான் படுப்பதற்கு உதவ முன் வந்தது, அவனுக்கு அடிபட்ட போது அவள் கொண்ட பதட்டம், துடிப்பு, தவிப்பு, அழுகை, என அனைத்தும் கண் முன் நிழலாட, அவன் மனதினுள் பல உணர்ச்சிகள் தோன்றி மறைய,

“சதி…..” என்றான் இதழ்திறந்து…

அந்நேரம் சட்டென கதவைத்திறந்து சதி உள்ளே வர, அவன் விழிகள் மூடிக்கொண்டது பட்டென….

“கூப்பிட்டீங்களா ஜெய்…” என வாசல் கதவின் அருகில் நின்றவாறே அவள் அவனைப் பார்த்து கேட்க, அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை…

“ஏனோ நீங்க கூப்பிட்ட மாதிரியே இருந்துச்சு…” என அவளும் சொல்ல, இமை மூடியிருந்த அவனுக்குள் ஒரு அதிர்வு உண்டானது….

“அவர் தான் தூங்குறார்ல… இன்னும் ஏண்டி இங்கயே நின்னுட்டிருக்குற… போ போய் பேசாம வெளியே உட்காரு… அவர் தூங்கட்டும்…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டு அவள் கதவை சத்தமில்லாமல் சாத்திவிட்டு செல்ல, அவன் விழிகள் திறந்தன…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.