(Reading time: 38 - 76 minutes)

27. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

நிஜமா.. நிஜமா..

இது என்ன நிஜமா..

நீ வந்த நொடி நிஜமா..

நிஜமா.. நிஜமா...

இது என்ன நிஜமா..

நீ நான் நாம் நிஜமா..

ண்மையிலேயே இது கனவா..?? இல்லை நிஜமா..?? என்று தெரியவில்லை யுக்தாவிற்கு... அவள் பிருத்வியின் கையணைப்பில் இருந்தாள்... அதுவும் அத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கும் விமான நிலையத்தில்... அவன் அணைப்பில் இருப்பது கனவென்று தோன்றினாலும்... அவன் ஸ்பரிசம் தந்த சிலிர்ப்பு அது உண்மை என்பதை உணர வைத்தது...

சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவனை ஒருமுறையாவது பார்த்துவிட்டு செல்ல மாட்டோமா என்று ஏங்கி கொண்டிருந்தாள் அவள்... அவளுக்கு வேண்டியவர்கள் அனைவரும் அந்த விமான நிலையத்தில் சூழ்ந்து இருந்தாலும்... அவளவன் அவளை காண வரவில்லையே என்ற ஏக்கம் மனதில் இருந்துக் கொண்டிருந்தது... கண்கள் அவனை தேடியது... நியூயார்க் செல்வதற்கு முன் ஒருமுறையாவது அவனை பார்க்கமுடியாதா?? என்று மனம் எதிர்பார்த்தது...

இதற்குப் பிறகு அவள் அவனை பார்க்க இயலாமல் போகாது... நிரந்தரமான பிரிவு தான் இருவருக்குள்ளும் ஏற்படப் போகிறது என்றாலும் அதற்காக அவனை பார்க்க முடியாமல் போகாது... அம்மா, அப்பாவிடம் கொஞ்ச நாள் நியூயார்க்கில் இருக்கப் போவதாக தான் சொன்னாள்... ஆனால் நிரந்தரமாக அங்கேயே ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்ற முடிவு தான் இவள் மனதில் இருந்தது... ஆனால் அப்படி இருக்க முடியுமா என்று தான் தெரியவில்லை...

இவளுக்காக வேலையை விட்டு இங்கேயே வந்து விட நினைத்த பெற்றோர் இப்போது இவளுக்காகவே திரும்ப நியூயார்க் வருகிறார்கள்... அவர்களிடம் சொல்ல முடியுமா நான் திரும்ப வரப் போவதில்லை என்று... அது அவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்... நீ நியூயார்க் போயே ஆகனுமாடா..?? இங்கேயே இரேன்... என்று கெஞ்சிய சாவிம்மாவை பார்க்காமலே இருந்திட முடியுமா..??

அவன் உன்னை வேண்டாம்னு சொன்னா என்னம்மா... எங்களுக்கு நீதான் எப்போதும் மருமக... இப்போ மகளும் கூட... அதை நீ மனசுல வச்சிக்கம்மா... என்ற சொன்ன இவள் மாமானார், மாமியாரின் அன்பை இவளால் இழக்க முடியுமா...??

இவளுக்காக திருமணத்தை நிறுத்தி வைத்திருக்கும் வரூன், பிரணதி... காதலை சொல்லாமலே மறைத்து வைத்திருக்கும் கவி, தேவா.... இந்த இரண்டு ஜோடிகளுக்கும் சீக்கிரம் திருமணத்தை நடத்தும் முயற்சியை இவள் தான் மேற்கொள்ள வேண்டும்... அப்படி இவர்களின் திருமணம் நடக்கும் போது இவள் திரும்ப இந்தியா வராமல் இருக்க முடியுமா..??

அப்படி வரும்போது பிருத்வியை பார்க்காமல் தான் இருக்க முடியுமா..?? ஏன் இவர்களுக்கு விவாகரத்து ஆகும்போது அவனை பார்த்து தானே ஆக வேண்டும்... அதனால் பிருத்வியும் இவளும் பிரிந்தாலும் அவனை பார்க்கும் சந்தர்ப்பம் இவளுக்கு கிடைக்கும்... இருந்தாலும் இப்போது அவனை பார்க்காமலேயே செல்வது தான் இவளுக்கு கஷ்டமாக இருந்தது... எல்லோரோடும் பேசிக் கொண்டிருந்தாலும்... அடிக்கடி அவள் பார்வை அவன் வருவானா..?? என்றே பார்த்துக் கொண்டிருந்தது....

அன்று இவளை கூப்பிட வீட்டிற்கு வந்த போது கூட... நியூயார்க் போகப் போறீயா..?? போ.. நானே வந்து வழி அனுப்பி வைக்கிறேன் என்றானே... அவன் சொன்னது போல் வரமாட்டானா..?? என்று அவள் எதிர்பார்த்திருக்க... விமான நிலையத்தில் அறிவிப்பு வர... எல்லோரிடமும் விடைப்பெற்று மூவரும் கிளம்ப ஆயத்தமாகும் போது கடைசியாய் ஒருமுறை அவன் வருகிறானா..?? என்று இவள் பார்க்க... அங்கே பிருத்வி வந்துக் கொண்டிருந்தான்... அவளை அறியாமலேயே கால்கள் அவன் பக்கம் சென்றது....

பிருத்விக்குமே யுக்தா தன் கையணைப்பில் இருப்பது கனவா..?? இல்லை நிஜமா..?? என்று புரியவில்லை... ஆனால் மனதில் குடியிருந்த பாரம் இறங்கியது போல் ஒரு உணர்வே அதை உண்மை என்று உணர்த்தியது...

அவளை விட்டு பிரிவது தான் நல்ல முடிவு என்று பிருத்வி திரும்ப திரும்ப சொல்லி தன் மனதை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான் காலை வரை... அப்போது தான் அவனை பார்க்க அலுவலகத்திற்கு தேவா வந்தான்...

"வா தேவா... என்ன இவ்வளவு தூரம்... "

"பிருத்வி இன்னிக்கு ஈவ்னிங் யுக்தா நியூயார்க் போறா தெரியுமில்ல..."

"ம்ம் தெரியும் அப்பா சொன்னாரு..."

"அவளை வழி அனுப்ப வருவீயா..?? நீ  வந்தா யுக்தா சந்தோஷப்படுவா..??"

அவளே அப்படி சொல்லியிருப்பாளா..?? என்று ஒரு கேள்வியோடு பார்த்தான் பிருத்வி...

அதை தேவா அறிந்துக் கொண்டான்.. "அப்படி அவளா சொல்லல பிருத்வி.. ஆனா அப்படி எதிர்பார்ப்பா..?? அது எனக்கு தெரியும்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.