(Reading time: 35 - 69 minutes)

28. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

மூன்று மாதங்களுக்குப் பிறகு..

பொழுது புலர்ந்தும், புலராத அந்த விடியல் பொழுதில் அந்த வீடு கல்யாண களை கட்டியிருந்தது... வீட்டின் வெளிப்புற சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த வண்ண மின்விளக்கு பந்தலில் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று ஒவ்வொரு வண்ணமாக மாறி மாறி எரிந்து ஜொலித்துக் கொண்டிருக்க... வாழைமர பந்தல், மாவிலைத் தோரணத்தோடு, வண்ணங்களால் வாசலில் அழகாக கோலமிட்டு அதன் நடுவே சாணம் வைத்து... அதில் அழகாக பூ ஒன்று வைத்து நல்வரவு என்று எழுதியிருந்தது... அருகிலேயே கவி, தேவாவின் புகைப்படத்தோடு...

மணமகள் - சங்கவி B.E

மணமகன் - தேவசேனன் M.B.A

என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது...

இன்னும் இரண்டு மணி நேரத்தில் கவி, தேவாவின் திருமணம் வடபழனி முருகன் கோவிலில் நடைபெற உள்ளது... தன்னுடைய ஒரு மகளின் திருமணம் தான் ஏதோ கட்டாயத்தில் எளிமையாக கோவிலில் நடந்ததால்... இன்னொரு மகளின் திருமணத்தை ரொம்ப சிறப்பாக தன் சொந்த ஊரிலோ, இல்லை இங்கே சென்னையிலேயே பெரிய மண்டபம் வைத்தோ நடத்த வேண்டும் என்று மாதவன் முடிவு செய்திருந்தார்..

ஆனால் கவியோ... யுக்தாவின் திருமணம் எளிதாக நடந்ததால் அதே போலவே தன்னுடைய திருமணமும் நடக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிட்டதால்... அதே போல் வடபழனி முருகன் கோவிலிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்... ஆனால் சொந்தப் பந்தங்களை கூட கூப்பிடாமல் நடந்த யுக்தாவின் திருமணம் போல் இல்லாமல், எல்லா சொந்தப் பந்தங்களையும் இந்த திருமணத்திற்கு அழைத்திருந்தார் மாதவன்..

வீட்டின் உள்ளேயும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது... இன்னும் கொஞ்ச நேரத்தில் கோவிலுக்கு கிளம்ப வேண்டும் என்பதால்... மாதவன், சுஜாதா, சாவித்திரி எல்லோரும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்... கூடவே தேவாவின் பெற்றோர் ஆன லஷ்மி, சுந்தரமும் கூட பரபரப்புடன் காணப்பட்டனர்... தேவாவின் தாத்தாவும், பாட்டியும் கூட தன் பேரனுக்கு நடக்கும் திருமணத்தை குறித்த சந்தோஷத்தோடு உறவினர்களோடு பேசியப்படி இருந்தனர்... மணமகனான தேவாவும் பட்டு வேட்டி மற்றும் சட்டையுடன் தயாராகி இருந்தான்...

மணமகளான கவியும் அவள் அறையில் இளம் பச்சை நிறத்தில் நீல பார்டர் போட்ட பட்டுப் புடவையில் அதற்கேற்றார் போல் நகைகளைப் போட்டு, கோவிலிலுக்குப் போனதும் பூச்சடை வைப்பது மட்டும் தான் வேலை என்பது போல் தலையையும் பின்னி தயாராயிருந்தாள்...  தேவாவின் தங்கை தர்ஷினி தான் அவளுக்கு அலங்காரம் செய்தாள்... அவள் கர்ப்பமாக இருப்பதால் கோவிலுக்கு கிளம்பும் வரை ஓய்வெடுக்க சொல்லி கவி சொல்லவே அவளும் ஏதாவது சாப்பிட்டு விட்டு தன் கணவனோடு அமர்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்...

இப்போது தனியாக அறையில் இருந்த கவி... இன்னும் சில மணி நேரங்களில் தேவாவின் மனைவியாகப் போகும் பூரிப்பும், கொஞ்சம் படபடப்பும் சேர்ந்த கலவையாக இருந்தாள்... மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தேவாவோடு இவளது திருமணம் நடக்கும் என்று இவள் கனவிலும் நினைத்ததில்லை... யுக்தாவுக்காக, பின் தன் அத்தை ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதற்காக என்று தன் மனசுக்குள்ளேயே காரணம் சொல்லி, தேவா தனக்கு இல்லை என்று  மனதை தேத்திக் கொண்டிருந்தவளுக்கு இப்போது இந்த கல்யாணம் எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறது என்பதை வாய் வார்த்தையால் சொல்லிட முடியாது... மனம் தானாகவே அவன் காதல் சொல்லிய தினத்தை  நினைத்துப் பார்த்தது...

அன்று விமான நிலையத்தில் பிருத்வி எல்லோர் முன்னிலையிலும் இவர்கள் காதலிப்பதாக சொன்னதில் இவள் உண்மையிலேயே அதிர்ந்து தான் போனாள்... ஆனால் அந்த அதிர்வையும் மீறி தேவாவும் இவளை காதலிக்கிறானா..?? என்ற கேள்விதான் மனதில் எழுந்தது... அப்போது அவனை இவள் பார்க்கும் போது இவள் பார்வையை அவன் தவிர்த்தான்... அப்போது மட்டுமல்ல எல்லோரும் ஏர்போர்ட்டிலிருந்து கோவிலுக்கு போகும் வரையிலுமே இவளை அவன் நேருக்கு நேராக பார்க்கவில்லை...

ஏன் என்னை அவன் பார்க்கவில்லை..?? பிருத்வி ஒருவேளை ஏதாவது தெரியாமல் சொல்லிட்டாங்களா..?? ஆனால் தேவா அதை மறுக்கவில்லையே..?? சித்தப்பா, சித்தி கல்யாணத்தை பத்தி பேசும்போது கூட அவன் அமைதியாகத் தானே இருந்தான், எப்போதிலிருந்து அவன் என்னை காதலிக்கிறான்... நான் காதலித்தது அவனுக்கு எப்படி தெரியும்..?? இப்படி பல கேள்விகள் அவள் மனதில் இருந்தது...

இந்த குழப்பத்தோடு சாமிக் கும்பிட்டு வந்ததும் எல்லோரும் கோவிலில் இருந்து வெளியே வந்ததும் இவள் ஒரு காரில் ஏறப் போக... அந்த காரில் வேண்டாம், இந்த காரில் ஏறு என்று அவளுக்கு முன் கதவை வரூன் திறந்துவிட இவள் ஏறி அமர்ந்ததும் தான் கவனித்தாள்... அருகில் உட்கார்ந்திருந்தது தேவா...

அப்புறம் தான் தெரிந்தது வரூனுடைய காரில் இவர்களை மட்டும் விட்டு விட்டு மற்ற காரிலும், பிருத்வி வந்த பைக்கிலும் எல்லோரும் சென்றுவிட்டனர்... இது கண்டிப்பா சம்யூ, வரூனுடைய வேலையா தான் இருக்கும்... பெரியவர்களெல்லாம் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று ஒருபக்கம் மனம் யோசித்தது... இன்னொரு பக்கமோ, ரொம்ப நாள் கழித்து இன்று தான் பிருத்வியும், சம்யூவும் சேர்ந்திருக்கிறார்கள்... அவர்களுக்கு தனிமை கொடுக்காமல், இவர்களுக்கு கொடுத்திருக்கிறார்களே என்று நினைத்தது... ஆனால் இதுதான் நல்ல சந்தர்ப்பம் இவனிடம் தன் மனதில் உள்ள சந்தேகங்களை கேட்பதற்கு என்று முடிவு செய்தாள்...

ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை... அவனாகவே எதாவது பேசுவான்... அதை வைத்து கேட்கலாம் என்றாலோ... அவன் அமைதியாக கார் ஓட்டிக் கொண்டு வந்தான்...

ஏதோ நினைக்கிறேன்... அதை

ஏனோ மறைக்கிறேன்...

ஏதோ நினைக்கிறேன்... அதை

ஏனோ மறைக்கிறேன்...

பேசிட தான் வந்தேன்

மொழி வரவில்லை...

மௌனமாக செல்ல

மனம் வரவில்லை...

அடடா.. அடடா... காதல்

அழகிய தொல்லை...

உன்கிட்ட ஒன்னு சொல்லனும்...

உன்னோட ஒன்னா இருக்கனும்...

இவள் மனநிலைமைக்கு ஏற்றார் போல் அந்த காரில் இந்த பாட்டு ஓடிக் கொண்டிருந்தது... இப்படியே அமைதியாக இருந்தால் அப்படியே வீட்டுக்குப் போக வேண்டியது தான்... அதற்குள் இவனிடம் பேசிட வேண்டும் என்று நினைத்தவள்... அவனிடம் பேச ஆரம்பித்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.