(Reading time: 7 - 14 minutes)

17. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த பைக்கினை மிதுத்து உதைக்க, அது சத்தத்துடன் சீறிப்பாய்ந்தது…

போகும் வழி எங்கும் எதுவும் அவன் பேசவில்லை… அவளும் பேசும் மனநிலையில் இல்லை…

கணவன் என்ன செய்யப்போகிறானோ என்ற பதட்டம் மட்டும் நெஞ்சில் ஒடிக்கொண்டே இருந்தது…

திடீரென வண்டி நிறுத்தப்பட, அவள் அதனை கூட உணராமல் வண்டியிலிருந்த கம்பியினை இறுகப் பற்றிக்கொண்டிருந்தாள்…

“இறங்கு…” என அவள் அதிரும் வண்ணம் திலீப் பேசியதும், அமைதியாய் வண்டியை விட்டு கீழே இறங்கினாள்…

“கடைசியா உங்கிட்ட கேட்குறேன்… இப்போகூட ஒன்னும் கெட்டுப்போகலை… நீ சரின்னு சொல்லு… அது போதும்….”

அவன் வார்த்தைகளில் பித்து பிடித்தவளாய் இருந்தவள் அவனை விரக்தியோடு வெறிக்க, அவன் எதுவும் பேசாமல் நின்றான்…

“நீ ஒத்துக்க மாட்டல்ல?...”

கேள்வி கேட்டுவிட்டு அவளைப் பார்க்க, அவள் மூச்சுக்கூட விடவில்லை…

“சரி… நீ ஒரு முடிவெடுத்த பின்னாடி நானும் ஒரு முடிவெடுக்குறது தான் சரி….” என்றவன்,

“இதை நானா உனக்கு கொடுக்கலை… நீயா தான் தேடிக்கிட்ட….” என்றபடி பைக்கில் ஏறி அமர்ந்தான்…

“இனி நிம்மதியா இருக்கலாம்… என்னோட தொந்தரவு கொஞ்சம் கூட இருக்காது….” என சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக சில நொடிகள் காத்திருக்க, அவள் விழிவிரிய அவன் சொன்னதின் அர்த்தத்தை உள்வாங்கினாள்….

அவள் வார்த்தைகள் இன்றி மௌனமாக உதடு கடித்து நிற்க, அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க விரும்பாது சட்டென்று வண்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான் திலீப்….

அவன் சென்ற திசையையே திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, அப்போது தான் உறைத்தது தான் நிற்பது பஸ் ஸ்டாண்டில் என்று…

அவளது அருமைக் கணவன் கையில் ஒரு ரூபாய் கூட கொடுக்காது உடுத்தியிருந்த துணியோடு அவளை வீட்டை விட்டு வெளியேற்றி இருந்தான்…

வெளியேற்றிவிட்டான் என்று சொன்னால் கூட தவறு தான்… அவனேக்கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய் விட்டான் ஊருக்கு போவதற்கு ஐந்து பைசா கூட தராமல்…

மனம் வேதனையில் முழுக, கன்னங்கள் கண்ணீரில் நனைந்தன சரயூவிற்கு….

மற்றவர்கள் பார்ப்பார்களோ, யாரும் எதுவும் கவனிப்பார்களோ என்ற உணர்ச்சிகளே இல்லாது, தன்னை மீறி வரும் அழுகையை அடக்கப் போராடிக்கொண்டிருந்தாள் அவள்…

அவ்வளவுதானா?... அவ்வளவே தானா?... தன் ஒன்பது வருட கல்யாண வாழ்வு ஒரு சில விநாடிகளில் சிதைந்து விட்டதா?...

நம்ப முடியாத வலியுடன் அவள் எத்தனை மணி நேரம் அங்கேயே கால் கடுக்க நின்றிருந்தாளோ தெரியாது…

சுற்றி தெரிந்த ஆள் நடமாட்டம் ஒன்றிரண்டாக குறைந்த வேளை, பஸ் சத்தம் தவிர, வேறேதும் சத்தம் இல்லாது நிசப்தம் மட்டுமே அவளுக்கு கேட்க, அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது…

கண்ணுக்கு எட்டிய தொலைவில் கடைகளில் நின்று கொண்டிருந்த ஒரு சில ஆண்கள் தன்னைப் பார்ப்பதும் ஏதோ பேசிக்கொள்வதும் கண்களில் பட, அவளுக்கு அந்த இடத்தில் நிற்பதே நெருப்பு மேல் நிற்பது போன்று இருந்தது….

புகுந்த வீட்டிற்கு போவதானால் மகனைப் பெற்றுகொடுக்க வேண்டும்… பிறந்த வீட்டிற்கு போவதானால் நாலுபேரிடம் கையேந்த வேண்டும்… இதில் எந்த முடிவெடுப்பது?...

இல்லை எந்த முடிவை தான் எடுத்திட முடியும் அவளால்?... இப்படி ஒரு அவலநிலை தனக்கு வருமென்று அவள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது…

வாழ்க்கையில் கல்யாணம் என்ற பெயரில் அவள் கொண்ட துன்பம் கொஞ்ச நஞ்சம் கிடையாது…

ஆனால் அது அனைத்தையும் இந்த நடுராத்திரி பயம் ஒரு சில விநாடிகளில் அடித்து துரத்தி முதலிடம் பிடித்திட்டது என்று சொன்னால் நிச்சயம் மறுத்திட மாட்டாள் அவள்…

நிறைந்த சபையில் பெற்ற தகப்பன் தன்னை திலீப்பின் கையில் தாரை வார்த்து கொடுத்ததும், இன்று திலீப் தன்னை நட்ட நடுராத்திரி என்றும் பாராமல் இப்படி தனியே தவிக்க வைத்து சென்றதையும் மனம் நினைத்துப் பார்க்க, வேதனையில் மனம் தத்தளிக்க ஆரம்பித்தது சரயூவிற்கு….

போன் செய்து அர்னவிடம் பேசலாம் என்றாலும் கூட அதற்கான யாதொரு வழியும் தென்படவில்லை அவளுக்கு…. கையில் போனும் இல்லை… காசும் இல்லை… பக்கத்தில் யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று நினைத்தாலும் ராத்திரி வேளை மனதினை இறுக பிழிந்தது… எனில் என்ன செய்து இப்போது இந்த இடத்திலிருந்து நகர என எண்ணமிட்டுக்கொண்டிருந்த வேளை அவளருகில் ஒரு வண்டி பாய்ந்து வந்து நின்றது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.