(Reading time: 18 - 35 minutes)

18. உனக்காக மண்ணில் வந்தேன்- குருராஜன்

unakkaga mannil vanthen

சுற்றிலும் பார்த்தவள் மனதில் ஒரு வகை பயம் தொற்றிக் கொள்ள, நிமிர்ந்து விஷ்ணுவைப் பார்த்தவள் சற்று நடுங்கித்தான் போனாள்.

அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களின் ஒருவகையான வில்லத்தனம், அவளைக் கண்களே தின்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவன் உதடுகளோ அவளைப் பார்த்து எலனமாய் சிரித்தது.

மனமெல்லாம் பயம் சூழ அதை வெளிப்படையாய்க் கூறாமல்,  ஏன் சிரிக்கிறாய் என்பது போல் அவள் அவனைப் பார்க்க, “என்னமோ எனக்கு வில்லன் லுக் ஒத்து வராது னு சொன்ன. இப்போ பயந்தல” என்றான் விஷ்ணு.

“யாரு பயந்தது. நாங்களாம் அப்பவே அப்பிடி” என்று இல்லாத காலரை தூக்கி விட்டப் படிக் கூறினாள் அனு. விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பேசினால் அனு.

 “சரி சரி நம்பிட்டேன்” என்று அடங்குவது போல் பாவனாக் காட்டி விட்டு  “ஒரு நிமிசம் அனு” என்று கூறிவிட்டு அவன் மட்டும் இறங்கி, அந்தப் பெரிய கேட்டினுல் இருந்த சின்ன கதவு ஒன்றைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

 உள்ளே சென்றவன் சிறிது நேரத்தில் வாட்ச் மேன் உடையணிந்த ஒருவருடன் சகஜமாக பேசிக் கொண்டே வெளியே வந்தான். வந்தவன் அனுவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவருக்கு வயது 50க்கு மேல் இருக்கும். அவர் மீண்டும் சென்று கேட்டை திறக்க, காரில் ஏறிய விஷ்ணு காரை ஸ்டார்ட் செய்து உள்ளே சென்றான்.

அவளுக்கு நடப்பது ஒன்று புரியவில்லை, விஷ்ணு மேல் நம்பிக்கை இருந்தாலும் அந்த இடம், இந்தத் தனிமை என எல்லாம் சேர்ந்து அனுவிற்கு ஒரு வகை பயத்தை தந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டாள்.

சிறிது தூரம் உள்ளே சென்றவுடன், காரை நிருத்திவிட்டு “இங்க இருந்து நடந்துதான் போகனும் அனு” என்று கூறிவிட்டு கீழே இறங்கினான் விஷ்ணு. அவளும் இறங்க இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

அந்த இடம் முழுதும் மரங்களால் சூழப்பட்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் பறவைகளின் ஓசையும், காற்றில் அசையும் மரங்களின் சத்தமும் என இனிமையாக இருந்தது. வெயில் மேலே படாத அளவிற்கு ஓங்கி உயர்ந்த மரங்களின் நிழலும், அதில் இருந்து வரும் சில் என்ற காற்றும் அவள் பயத்தை போக்கி மனதிற்கு ஆனந்தத்தைத் தந்தது. 

 சுற்றும் முற்றும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவளின் கண்கள் திடீர் என்று மறைக்கப் பட்டது. அது வேறு யாரும் அல்ல விஷ்ணுதான், அவன் கைகளால் அவள் கண்களை பொத்தினான். “விஷ்ணு, என்னது இது” என்று அவள் கூற, அவன் அவள் காதருகே “சர்ப்ரைஸ்” என்று கூறி அவள் கண்களை பொத்தியவாறே அழைத்துச் சென்றான்.

விஷ்ணுவின் ஸ்பரிச தீண்டலும், அவனின் அந்த நெருக்கம் அனுவை ஏதோ செய்தது. அவளுக்குள் ஒரு புது உணர்வு. இது வரை எந்த ஆண் மகனும் (திபக் உட்பட) அவளுக்கு ஏற்படுத்தாத அந்த உணர்வு. அதற்குக் காரணம் அவன் மேல் இருக்கும் காதலா அல்லது அந்த இடத்தின் ரம்யமா என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவளுக்கு அது பிடித்திருந்தது. 

அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவன் கண் பொத்திக் கூட்டி சென்ற திசையிலே சென்றாள் (காதலுக்குக் கண் இல்லை என்று சும்மவா சொன்னார்கள்).

சற்று நேரத்தில் இருவரும் ஓரிடத்தில் நிற்க, அவன் மீண்டும் அவள் காதருகே “அனு” என்று கூற, அந்த வார்த்தைக்கு உருகியே போய்விட்டாள் அவள். “ம்ம்ம்ம்” என்பதைத் தவிர வேறு வார்த்தையை அவள் உதடுகள் உறைக்க வில்லை.

“யுவர் சர்ப்ரைஸ்” என்று அவன் கைகளை விலக்க, கண் திறந்து பார்த்தவள் ஆனந்தத்தில் துள்ளி குதித்துவிட்டாள்.

அவள் நிற்பது ஒரு அழகிய பூந்தோட்டத்தின் நடுவில். தனக்கு பிடித்தமான இடம் என்று விஷ்ணுவின் போட்டோவை காட்டி கூறிய அதே இடம், தன் மனதுக்குப் பிடித்தவனுடன் போக வேண்டும் என்று அவள் கூறிய அதே இடம்.

சுற்றிலும் வண்ண மலர்கள், அதன் மீது உரசி வரும் தென்றலின் வாசம், அந்த மலர்களில் தேன் அருந்தும் வன்னத்துப் பூச்சிகள், அவளுக்காகவே பாட்டிசைக்கும் பறவைகள், அதற்கு ஏற்றார் போல் தலம் போடும் காற்றில் ஆடும் மரங்கள் என அவள் பூமியிலே சொர்கத்தை உணர்ந்தாள். அந்தப் புகைப்படத்தை பார்த்த போது அந்த இடம் எப்படி இருக்கும் என்றெல்லாம் அவள் கற்பனை செய்து வைத்திருந்தாளோ அதை விட அழகாகவே இருந்தது அந்த இடம்.

“விஷ்ணு இந்த இடம், அந்த போட்டோ” என்று அவள் கூற வருவதைக் கூற முடியாத அளவிற்கு அவள் சந்தோஷத்தில் வாய் அடைத்துப் போயிருந்தாள்.

அவள் கேள்வியையும், சந்தோஷத்தையும் புரிந்து கொண்டவன் “ஆம்” என்று மட்டும் தலை அசைத்தான்.

மீண்டும் பூக்கள் பக்கம் திரும்பியவள் சிறு பிள்ளை போல் துள்ளி குதித்து விளையாட ஆரம்பித்தாள். அவள் மனம் முழுவதும் ஆனந்தம், அவள் விரும்பி இடத்திற்கு, அதுவும் இப்போது அவள் மனம் முழுவதும் நிரம்பி இருக்கும் அவனோடு வந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சியினாலோ என்னவோ அவள் தன் வயதை மறந்து சிறு பிள்ளையாகவே மாறிவிட்டாள். மலர்களை உரசிக் கொண்டு ஓடுவதும், செடிகளை அணைத்தவாறே பூக்களைக் கொஞ்சுவதும், அங்கே மலரில் தேன் அருந்தும் வண்ணத்துப் பூச்சிகளை ரசிப்பதும், அதைத் துரத்தி பிடிப்பதும் என அந்த இடம் முழுக்க சுற்றி திரிந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.