(Reading time: 20 - 40 minutes)

08. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

ரவு மணி ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது. “ சாரி டீ ரொம்ப லேட் ஆகிடுச்சு உன்னை வீட்டில் விடுறதுக்கு! அப்பா ரொம்ப கோபமா இருப்பாரா? நாம எக்ஸ்ப்லைன் பண்ணினா புரிஞ்சுப்பார் தானே யாழி?” கவலையாய் கேட்டான் புகழ். அவர்கள் இருவரும் தமிழின் வீட்டில் இருந்து வெளியேரும்போதே நேரமாகி இருந்தது. எப்படியாவது அவளை சீக்கிரமாய் வீட்டில் இறக்கி விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சற்று வேகமாகவே பைக்கை ஓட்டினான் புகழ். ஆனால், என்ன செய்வது ? சாலை நெரிசலை கட்டுப்படுத்தும் சக்தி அவன் கைகளில் இல்லையே !

அந்த சாலை நெரிசலை கடந்து யாழினியின் வீடு அமைந்துள்ள சாலையில் வளையும்போதுதான் கவலையுடன் கேள்வி கேட்டான் புகழ். யாழினிக்குமே இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை. இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட அவள் எட்டு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் இருந்ததே இல்லை! அதனால் அவளது தந்தை என்ன சொல்வாரோ என்று அவளும் அறிந்திருக்கவில்லை. ஏற்கனவே தமிழை நினைத்துக் கொண்டு அவள் சில நிமிடங்கள் அமைதியாய் வரவும் புகழ் எரிச்சல் அடைந்து கோபப்பட்டான்.

“ இவ்வளோதானா யாழினி நீ? யாரையோ மைண்ட்ல வெச்சுகிட்டு என்கிட்ட சரியா பேசாமல் மூஞ்சிய தூக்கி வெச்சுக்கிட்டு இருக்காத.. எனக்கு அது சுத்தமா பிடிக்கல.. பிடிக்காது!” என்று அழுத்தமாய் சொன்னான் புகழ். யாழினிக்கு தெரியும், புகழ் தனது மனநிலையை நன்கு புரிந்து வைத்திருப்பவன் என்று. அதனால் வீணாக அவன் சொன்னதை எதிர்த்து பேச அவள் விரும்பவில்லை. மேலும் அவன் சொன்னதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? என்று நினைத்தாள் யாழினி. அவளுக்கும் தமிழுக்கும் நடக்கும் மௌனப்போருக்குள் புகழை இழுக்க அவசியம் இல்லையே ! மேலும் புகழ் அவளின் இன்னுயிர் நண்பன்.. ஆனால் தமிழ்? அவர்களுக்குள் என்ன உறவு? பெயரே இல்லாத உறவிற்காக உற்ற நண்பனை காயப்படுத்துவதா? இல்லை இல்லை ! அது நிச்சயம் தப்புதான். தனக்குள்ளேயே பேசி தெளிவாய் முடிவெடுத்தாள் யாழினி.

புகழோ தற்பொழுது யாழினி தமிழை பற்றி எண்ணி கவலை கொண்டிருக்க அவசியமில்லை என்ற எண்ணத்தில் இருந்தான். அதை தடுக்க விரும்பினான். அதனால்தான் அவளிடம் கோபமாய் பேசுவது போல அதட்டல் போட்டான். அவன் அதட்டலுக்கு பலன் கிட்டயது! தமிழை பற்றிய நினைவுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு புகழிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவன் கேள்வி கேட்டதும்மீண்டும் மௌனமாய் இருந்தால்,புகழ் என்ன நினைப்பானோ என்று நினைத்தபடி உடனே பதில் கூறினாள் யாழினி.

“இதுவரைக்கும் இப்படி ஆனதில்ல டா..சோ தெரியல”

“ இட்ஸ் ஒகே டீ..நான் பார்த்துக்குறேன்.. பயப்படாதே”

“ ஹா ஹா எனக்கென்ன பயம் ? எங்கப்பாவை பார்த்து நீ பயப்பாடாமல் இருந்தாலே போதும்”

“ என்னடீ பில்டப் ஜாஸ்தியா இருக்கு ? எதுவா இருந்தாலும் நானே பார்த்துக்குறேன்.. நீ தயவு செஞ்சு இப்போவே காதுக்குள்ள சங்கு ஊதாதே” என்று பயந்தவன் போல நடித்தான் புகழ். இருவருமே தலைகவசம் அணிந்திருக்க, அதை ஒரு கணம் மறந்தவளாய் அவனது தலை கவசத்தின் மீது தலையை முட்டுவதை போல முட்டிக் கொண்டதில் “நங்..” கென சத்தம் வரவும் வாய்விட்டு சிரித்தான் புகழ்.

“ உணர்ச்சிவசப்படும்போது கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ? டியுப் லைட்!” என்று அவன் சிரிக்க, வாயை மூடிக்கொண்டாள் யாழினி. அவள் வாயை மூடிக் கொண்டதின் காரணம் புகழின் பரிகாசம் இல்லை ! தன் வீட்டு வாசலில் மதுரைவீரன் போல கம்பீரமாய் நின்ற தந்தையை பார்த்துத் தான் வாயை மூடி கொண்டாள் யாழினி. பைக்கை லாவகமாய் நிறுத்தினான் புகழ். யாழினி உடனே பைக்கில் இருந்து இறங்கிட இருவரும் ஒரே நேரத்தில் தலைக் கவசத்தை கழற்றிட அவர்களை எதிரில் நின்றார் மோகன்.

வழக்கம்போல, வலது கையால் மீசையை முறுக்கி விட்டபடி புகழை பார்த்தார் மோகன். பொதுவாகவே ஏதாவது யோசனையில் இருந்தால் மீசை முறுக்கி கொள்வது அவரின் பழக்கம். தன் தந்தை தனது நண்பனை பார்வையால் ஆராய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டாள் யாழினி. கொஞ்சமும் நேரத்தை கடத்தாமல்,

“ அப்பா, இவன் தான் புகழ். என்னுடைய ப்ரண்ட்.. புகழ்.. அப்பா” என்று பார்வையாலேயே அவனுக்கு சமிக்ஞை காட்டினாள் யாழினி. புகழ் இயல்பாகத்தான் இருந்தான். மோகனின் தோற்றத்தில் யாழினி தேவையில்லாமல் பதருவதாய் தோன்றியது அவனுக்கு.

புகழுக்கு யாழினியின் தந்தையை பார்த்ததுமே பிடித்து போனது. அவன் தனது வாழ்வில், தந்தையுடன் வாழ்ந்த காலங்கள் கொஞ்சம் தான். தந்தையின் அன்பும் கண்டிப்பும் எப்படி இருக்கும் என்று அவன் முழுமையாக உணர்ந்ததே இல்லை. யாழினி அவளின் தந்தையைப் பற்றி சொல்லி இருந்ததை வைத்து ஓரளவு அவரை தெரிந்து வைத்திருந்தவன்,அவரை நேரில் பார்த்ததுமே “ அப்பான்னா இப்படித்தான் இருக்கனும், கம்பீரமாய்!” என்று மனதில் சொல்லிக்கொண்டான். மேலும் அவரின் பார்வையில் இருந்த தீட்சன்யம், அவனுக்கு கொஞ்சம் பரிட்சயமாய் இருந்தது. இப்போதுதான் எங்கோ பார்த்த மாதிரி தோன்றியது.

அடுத்த நொடியே அவனது அகக்கண்ணில் தமிழ் வந்து நின்றான். தமிழ் !! ஆம், அவனும் இப்படித்தானே பார்வையில் தீட்சன்யமும், தோற்றத்தில் நிமிர்வுமாய் இருந்தான் ? யாழினியின் மனதை அவன் பாதித்ததற்கு இதுவும் ஒரு காரணமாய் இருந்திருக்க வேண்டும் ! உடனே சரியாய் யூகித்திருந்தான் புகழ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.