(Reading time: 10 - 19 minutes)

12. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

 ரூபன் அனிக்காவின் வீட்டிற்கு வந்திருந்தான். கூடவே ஜீவனும். வீட்டின் வரவேற்பரையில் காத்திருக்க தாமஸ் வந்துச் சேர்ந்தார். மிகவும் மகிழ்ச்சியோடு தான் வந்த விஷயத்தைக் கூற ஆரம்பித்தான். தற்போது அவனுடைய தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்த இடத்தினின்று சற்றுத் தள்ளி பெரியதொரு இடத்தில் தற்போது கைவந்துள்ள கூடுதலான வேலைகளுக்கேற்ப கூடுதலான மெஷின்களோடு வேலை ஆரம்பிக்க இருப்பதற்கான தன்னுடைய முயற்சியைக் குறித்து விளக்கிக் கொண்டு இருந்தான். அதன் வரவேற்பிற்கு அவர்களை குடும்ப சகிதம் அழைப்பதற்காகவே இருவரும் வருகை தந்திருந்தனர். நெருங்கியச் சொந்தங்கள் , நண்பர்கள், மற்றும் தொழிற்முறை நண்பர்கள் மட்டும் அழைக்கப் பட்டிருந்த விழா அது.

"இடம் சொந்தமா வாங்கிட்டியா ரூபன்?"

"இல்ல மாமா? இப்போ வாடகைக்கு தான்......சொந்தமா வாங்க ஒரு வருஷமாவது ஆகும்னு நினைக்கிறேன்."

"ம் ம் நல்லது , நல்லது."

"பாக்டரில நிறைய பேர் இருக்காங்கன்னு அன்னிக்கு பார்த்தேன், கூடவே ஆஃபீஸ் வேலைக்கு ஆள் வச்சிருக்கியா?"

"ஆமா மாமா , ஏற்கெனவே நாலு பேர் இருக்காங்க ,இப்போ நிறைய ஆர்டர்ஸ், வேலைக் கூடி இருக்கிறதால கூட ரெண்டு லேடீஸ் ஜாயின் செய்யறதா இருக்கிறாங்க. அக்கவுண்ட்ஸ், சேல்ஸ் டீடெய்ல்ஸ் எல்லாம் மேனேஜ் செய்யறதுக்கு , டெண்டர்ஸ் தயாரிக்கிரதுன்னு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்க"....என

அப்போது சாரா கொண்டு வந்த காஃபியில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு ஜீவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் அனிக்கா.

"அப்பா, இப்போ ஜீவனும் எஞ்சினியரிங்க் முடிச்சிட்டான். ரூபன் அத்தானோட சேர்ந்து ஃபாக்டரி வேலையை மேனேஜ் செய்யப் போறானாம்." என்று அறிக்கையிட்டவளிடம் சாரா,

"ஏய் வாலு , காஃபி வேணும்னா கிச்சன்ல போய் எடுத்துக்க , அதுக்கு எதுக்கு ட்ரேல இருந்து எடுத்த நீ?" எனக் கேட்க,

சுற்றும் முற்றும் பார்த்தவள் ஹாலில் இருக்கும் அப்பா, ஜீவன் கையில் காஃபி இருக்க, வெறும் கையாக இருந்த ரூபன் கையில் தான் எடுத்த காஃபிக் கோப்பையைக் கொடுத்து விட்டு,

" எல்லாம் அத்தானுக்கு கொடுக்க தாம்மா" என,

 அவனோ இதுவரை காஃபியையே கண்டிராதவன் போல அவள் தந்த காபியை அவசரமாய் வாயில் பொருத்தினான்.அம்மாவை ஏமாற்றி விட்டோம் என்றக் களிப்பில் குறும்பு மிக ஜீவன் பக்கம் பார்த்துச் சிரித்தவள் அதே கோணத்தில் திரும்பி கண்சிமிட்டவும் ஜீவனைத் தாண்டி அது ரூபன் பார்வைக்கு போய்ச் சேர்ந்து விட்டது.

 காஃபியை ஒரு மிடறுக் குடித்து நிமிர்ந்தவனுக்கு அவள் செய்கையில் சட்டென்றுப் புரையேறியது.அருகே இருந்த தாமஸ் பார்த்துப்பா எனக் கூற ,

அனிக்கா நாம் செய்தது தவறோவென விழித்தாள்.

 சற்று நேரத்தில் சகஜமாக சூழல் மாற அவர்களுக்கிடையேப் பேச்சு மாறியது. தாமஸ் அனிக்காவிடம்,

"அனிம்மா, நீ ஆஃபீஸ் வந்து நிர்வாகம் கத்துக்கிறேன்னு கேட்டுட்டு இருந்தல்ல, ரூபன் ஆஃபீஸ் போய் வேலை பழகிக்கொள்ளலாமே, என்ன போறியா?" என்றார்.

சட்டென அங்கே மௌனம் நிலவியது.

 " ரூபன் என்னடா நம்ம காட்டில இன்னிக்கு அடைமழையாக் கொட்டுது" என்று இருக்க, ஜீவனோ இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றுப் புரியாமல் இருந்தான்.

 தாமஸிடம் ஏற்கெனவே அனிக்கா தன்னுடைய மேலாண்மைப் படிப்பிற்கேற்ப தான் எங்காவது பணி புரிவது பிராக்டிகலாக உதவும் என்று தந்தையிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். அவருக்கோ தன்னுடைய அலுவலகத்தில் மகளைக் கூட்டிச் செல்வது அவ்வளவு உவப்பாக இல்லை.அதே நேரம் வேறு ஏதாவது அலுவலகம் என்றால் அவள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி வரலாம் அவரது மகளுக்கு வேலைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே என்பது அவர் கருத்து. ஒரு வருடத்திற்குள்ளாக அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டுமென்பது அவர் எண்ணம் . அது வரையில் அவள் விருப்பப் படுகிற மாதிரி பணி புரியட்டுமே என்கிற சிந்தனையில் தான் அவ்வாறுக் கேட்டது. அவரைப் பொறுத்த வரையில் ரூபனின் அலுவலகத்தில் அதிகப் படியான வேலைகள் இருக்காது. பெயரளவுக்கு அவளும் போய் வரலாம். அதே நேரம் அவள் கேட்ட ஒன்றைத் தான் மறுக்கவில்லை என்றத் திருப்தியும் இருக்குமே.

 மகள் மௌனமாக இருக்க அவர் ரூபனிடம் பேசினார், "அனிக்காவும் வந்து அங்கே நிர்வாகம் எல்லாம் கத்துக்கட்டும் ரூபன். அவளுக்கு சம்பளமெல்லாம் எதுவும் கொடுக்க வேண்டாம், ஆனால், அவளுக்கு படிப்புக்கு வசதியா இருக்க நேரம் மட்டும் வருவா?. உனக்கொண்னும் ப்ராப்ளமில்லையே? என்னப்பா....

"அதெல்லாம் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை மாமா" என அமைதியாக பதில் கொடுத்தவன் மனம் இனிமே அவளை அடிக்கடிப் பார்க்கக் கிடைக்குமே என்ற எண்ணத்தில் "டண்டனக்கா" வென துள்ளாட்டம் போட, இது எங்கு கொண்டு போய் விடுமோ என மௌனமாக இருந்தான் ஜீவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.