(Reading time: 15 - 30 minutes)

04. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

பௌர்ணமி இரவும், இதமான காற்றும் மனதிற்கு அமைதியைத் தந்தது. முகத்தில் மென்மை படர அதை கொஞ்ச நேரம் ரசித்து கொண்டிருந்த நிரூபணாவின் பார்வை அர்ப்பணாவின் மீது நிலைக்குத்தி நின்றது. தேவதை அவள்.. அழகிலும் சரி, குணத்திலும் சரி தேவதை. பளிச்சென்ற வெள்ளை நிற இரவு உடை அணிந்து, நிம்மதியாய் உறங்குபவளை காணும் காட்சி,ஓர் ஓவியம் போலவே இருந்தது.

மாறிவிட்டிருந்தாள் அர்ப்பணா.. அணுஅணுவாய் மாறி இருந்தாள். அவளின் பேச்சு, பார்வை, நடை, சிந்தனை அனைத்திலும் மாற்றங்கள். இதோ இப்போது அவள் உறங்கிடும்விதம் கூட மாறியிருந்தது. பரிட்சைக்காக படிக்கும்போது அவ்வப்போது நிரூபணாவின் வீட்டில் தங்கி இருந்தாள் அர்ப்பணா. தன் பக்கத்தில் உறங்கும்போது கை கால்களை சுருக்கி கொண்டு ஒடுங்கி படுத்திருப்பாள் அவள். அதை பார்த்து பலமுறை அதிருப்தி அடைந்திருக்கிறாள் நிரூ.

“ ஏன்டீ நான் என்ன உன்னை கடிச்சா திங்க போறேன்? இல்ல, என்னை பார்க்க குண்டு பூசனிக்காய் மாதிரி இருக்கா? ஏன் இப்படி தூங்குற?” என்று கேட்டால், “ பழகிடுச்சி நிரூ” என்று ரத்தினச் சுருக்கமாய் சொல்லி விடுவாள் அவள். அப்படிப்பட்டவள் இப்போது தூங்கும்போது கூட நிமிர்வுடனே இருப்பது போலவே தோன்றியது நிரூபணாவிற்கு.

ஓசை எழுப்பாமல் படுக்கையிலிருந்து எழுந்துக் கொண்டவள், பூனை நடைப்போட்டு அந்த வீட்டின் பால்கனியில் அமர்ந்து கொண்டாள். அர்ப்பணாவின் வாழ்வில், அவளுக்குத் தெரிந்து நடந்த அனைத்தையும் அசைப்போட ஆரம்பித்தாள் நிரூ. (மூன்று வருடங்களுக்கு முன்பதாக நடந்தவற்றை நிரூபணாவின் பார்வையிலிருந்து பார்ப்போம்)

வினயிடம் பேசும்போது எந்த பயமும் நிரூவுக்கு தோணவில்லைத்தான்..! ஆனால், தன்னருகில் அச்சத்துடன் அமர்ந்திருக்கும் அர்ப்பணாவை பார்க்கும்போது அவளுக்கே கொஞ்சம் பதட்டமாய்த்தான் இருந்தது. இப்போதும் தான் செய்தது தவறு என்று நிரூபணா நினைக்கவில்லை. ஆனால், தன்னைப்போல அல்லாமல் எடுத்ததற்கெல்லாம் தொடை நடுங்கும் தோழிக்காக இதை பேசியிருக்க வேண்டாமோ?என்று குழம்பி போனாள் அவள்.

வினய் மீண்டும் அலைப்பேசியில் அழைத்தாலும் சரி, அல்லது நேரடியாக வீட்டிற்கே வந்தாலும் சரி அவனை நேருக்கு நேர் சந்தித்து இருக்கும் பிரச்சனையை சந்திக்கும் தைரியம் அர்ப்பணாவிற்கு இல்லையே! அப்படியிருக்கும்போது தனது பேச்சு அவனது கோபத்தை தூண்டி, அவன் ஏதாவது செய்து விட்டால் ? குழம்பிருந்தவளை இன்னும் குற்றஉணர்ச்சியில் ஆழ்த்திடும்படி மற்ற இரு தோழிகளும் அவளை வசைப்பாடினர்.

“ அப்படி என்னடீ அவசரம் உனக்கு? அந்த வில்லன்கிட்ட போயி நம்ம அர்ப்பணாவை மாட்டி விட்டுட்டியே” என்றாள் சாரா.

“ ஆமாடா..நீ கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம்ல?” என்று ஆரத்யா ஒரு பக்கம் பேச, மௌனம் கலைந்தாள் அர்ப்பணா.

“ ஏய்..அதான் எதுவும் நடக்கவில்லைல? ஏன் அவளை திட்டுறிங்க அவ என் மேல இருக்குற அக்கறையில் தானே பேசினாள் ?” என்றாள் அவள்.

“ என்னவோ பண்ணுங்கடீ” என்று மற்ற இருவரும் பெருமூச்சு விட, நிரூபணாவின் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டாள் அர்ப்பணா.

“ நீ ஃபீல் பண்ணாத நிரூ.. எனக்கு வினயை பத்தி தெரியும். எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் திரும்பவும் கூப்பிடுவார் பாரேன்! அப்போ நான் சமாதானம் பண்ணிக்கிறேன்” என்றாள் அபி.

அன்று எளிதாக சொல்லிவிட்டிருந்தாள் அர்ப்பணா. ஆனால் அவள் கடந்துவந்த பாதை எளிதாகவா இருந்தது? ஆயாசமாய் பெருமூச்சு விட்டாள் நிரூபணா. மீண்டும் கடந்த காலங்களை அசைப்போடத் தொடங்கினாள்.

அர்ப்பணா முதல் படத்தின் படப்பிடிப்புக்கு செல்லத் தொடங்கிய நாள்முதல் நிரூபணா தான் அவளுக்கு துணையாய் இருந்தாள். நேரடியாய் அவள் அபியின் அருகில் இல்லைத்தான் . எனினும், ஃபோனில் பேசும்போதெல்லாம் நம்பிக்கை வழங்கும் வார்த்தைகளைச் சொல்லி அவளுக்கு ஊக்கமளித்தாள் நிரூபணா.

அனைத்தும் சீராய் சென்று கொண்டிருந்தவேளையில்தான் நிரூபணாவிற்கு பேரிஸ் (PARIS) இல் மேற்கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைத்தது.மனம் உடைந்துதான் போனாள் அர்ப்பணா. அவளுக்கு சினிமாவில் நுழைந்ததால் பெரிய கவலை ஏதும் அப்போது இல்லை. ஒரு வகையில் அவளுக்கு நடிப்பது பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் திடீரென கிடைத்த வசதியான வாழ்க்கையினால் அவளது பெற்றோர் தான் அதிகம் மாறி இருந்தார்கள்.

அடிப்படையிலேயே மீனாட்சியும் சொக்கலிங்கமும் அர்ப்பணாவின் மீது அதீத பிணைப்பு கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.பெற்றோர் என்ற முறையில் அவர்கள் தங்களது அடிப்படி கடமைகளை செய்தார்களே தவிர, தன் மகளின் எண்ணங்கள் என்ன?ஆசை என்ன குறிக்கோள் என்ன என்று அவளுடன் அமர்ந்து பேசியது கூட இல்லை. அவளைப் பற்றி ஏதும் அவதூறு வந்தால் கூட, “ என் மகள் அப்படி இல்லை..” என்று கூறிடும் அளவு அவர்கள் அவள் மீது நம்பிக்கையும் வைத்ததில்லை.

அப்படிப்பட்ட இருளில் இருந்தவளுக்கு நிரூபணாவின் நட்புத்தான் சிறு ஒளியாய் இருந்தது. இப்போது அவளும் தூரம் போகிறாள் என்றதும் அபிக்கு சிரமமாகத்தான் இருந்தது. இருப்பினும் அதை வெளிப்படுத்தி தன் தோழியின் எதிர்க்காலத்தை தடுத்து நிறுத்த வேண்டுமா? அது தவறாயிற்றே ! அதனால் நிரூபணாவை புன்னகை நிரம்பிய முகத்துடனேயே அனுப்பி வைத்தாள் அபி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.