(Reading time: 10 - 20 minutes)

 01. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame 

சென்னை, தமிழகத்தின் தலைநகரம்; எங்கேயும் எப்போதுமில் ஷர்வானந்த் சொன்னதுபோல் பல ஊரைச் சேர்ந்தவர்களை ஒன்றாய்ப் பார்க்கும் இடம். இங்கு ஏதேனும் நடந்தால் மொத்த மாநிலமே கைகொடுக்கும் என்பதற்கு இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே சான்று. பொழுதுபோக்குக்கு என்னற்ற இடங்கள் உண்டு இங்கே. என்ன வேண்டுமோ உடனே கிட்டும் இங்கே. இன்னும் கூறினால் கூறிக்கொண்டே போகலாம். அத்தகைய பெருமைமிகு சென்னை தான் நாம் சந்திக்கப் போகும் இருவரின் காதல் விளையாட்டுகளைப் பதிவு செய்யப் போகிறது. வாருங்கள். முதலில் நம் நாயகியைப் பார்ப்போம்.

அது நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் ஒரு flat தான் நாம் காணப்போகும் பெண்ணின் வசிப்பிடம். அதிகாலைக்கே உரிய சோம்பலுடன் அந்த குடியிருப்பினுள் சூரியன் புகுந்து அடுத்த நாளுக்கான தொடக்கத்தை இனிதே ஆரம்பித்து வைத்த தருணம் அது. ஒரு வீட்டில் இருந்து கந்த சஸ்டி கவசம் வந்து காதை நிரப்பியது. என்னவென்று பார்த்தால், ஹாலில் பாடிக்கொண்டிருந்தது நம் கதாநாயகி அல்ல; அவளது கைப்பேசி. உடன் பாடுகிறேன் பேர்வழி என்று அபஸ்வரத்தில் பாடிக்கொண்டிருந்தது (கத்திக்கொண்டிருந்தது என்று சொல்லவேண்டுமோ?) நாம் காண வந்த நங்கையே தான். குரல் மட்டும் கேட்கிறதே. நாம் தேடி வந்த கானக்குயில் எங்கேயோ?

இரு படுக்கையறை கொண்ட அந்த ஃப்ளாட்டின் வலது புறம் நோக்கி சென்றால் சமையலறை. அங்கே இருந்துதான் சத்தம் வருகின்றது. உள்ளே சென்றால், அப்போது தான் குளித்து வந்ததன் அடையாளமாக தலையில் ஓர் துண்டுடன் டீ-ஷர்ட் மற்றும் ஸ்கர்ட் அணிந்துக்கொண்டு எதையோ தீவிரமாக செய்துகொண்டிருந்தாள். (என்னமா பண்றே? ஓஓஓ காபி கலக்குறியா? அதுக்கு எதுக்கு பாம் தயாரிக்கிற மாதிரி இவ்வளவு சீரியஸா இருக்க?)

ஒரு வழியாக தன் அதிமுக்கியமான தயாரிப்பை (அதனை குடித்து பார்த்தவர்கள் சாப்பாட்டுப்பொருள் தான் என்று கூறும்வரை இப்படியே வைத்துக்கொள்வோம்) முடித்து சுவைத்து பார்த்தாள். “வாவ் ப்ரீ! சூப்பரா செஞ்சுட்டியே! இப்படியே போனா நீ தான் அடுத்த கிச்சன் சூப்பர் ஸ்டார்” என்று தன்னைத் தானே தட்டிக்கொடுத்துக்கொண்டாள். (ஏன்மா, நீ இப்போ தான் காபிக்கே வரியா? அப்போ நம்ம சாப்பாட்டு ராமன் நிலைமை? பாவம்டா நீ!)

இரண்டு வாய் கூட ப்ரியா அதனை சுவைத்திருக்கவில்லை, அதற்குள் ஹாலிலிருந்த செல்ஃபோன் ஒலியெழுப்பி யாரோ அவளை அழைப்பதை தெரிவித்தது. தன் பாராட்டு விழாவில் மூக்கை நுழைத்தவரை வைதுகொண்டே ஃபோனை எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ”- இது ப்ரியா.

“ஏய், எங்கடி இருக்க?” மறுமுனை ஏறத்தாழ கத்தியது.

“காலங்காத்தால ஆறு மணிக்கு ஃபோன் பண்ணா எங்க இருப்பாங்க? மியூசியமிலா? வீட்டுல தான்டி இருக்கேன்”

“சூப்பர்! உனக்காக இங்க அம்மா கிட்ட நான் பாட்டு வாங்கிட்டு இருக்கேன். நீ அங்க என்ன கிட்சன்ல உருட்டீட்டு இருக்கியா?” என்று சரியாக கணித்தாள் அவளது உயிர்த்தோழி.

“சாரி வர்ஷ். காபி போட்டுட்டு இருந்தேன். 15 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்” என கெஞ்சினாள் ப்ரியா.

“ஏய், நீ தானடி சும்மா இருந்த அம்மாவ கோவிலுக்கு போகலாம், அது இதுன்னு சொல்லி ஏத்தி விட்ட? ஒழுங்கா எங்ககூட கோவிலுக்கு வா. இங்க என் காதுல ரத்தமே வருது அவங்க பொலம்புறத கேட்டு”,

“ஐயய்யோ… ரொம்ப திட்டிட்டாங்களாடி” என்று கவலைப்பட்டாள் ப்ரியா.

“அவங்க உன்ன திட்டிட்டாலும்! நீ ஏன் இன்னும் வரலன்னு தான் ஒரே பொலம்பல். தூங்கிட்டு இருப்பன்னு சொன்னாலும் நம்பமாட்டிங்குறாங்க. அவ இப்போ வந்துட்டு இருப்பன்னு உனக்கு சப்போர்ட் வேற. சீக்கிரம் வந்து சேரு, இல்லனா அவ்ளோதான்” என்று கூறி அணைப்பை துண்டித்தாள் வர்ஷினி என்னும் அம்ரிதவர்ஷினி. அதன்பின் ஒரு நொடி கூட தாமதிக்காமல் விடு ஜூட் என தன் அறைக்குள் விரைந்து சென்று மறைந்தாள், ப்ரியா. ப்ரியா கிளம்பி வரும்முன் நாம் அவளைப் பற்றிப் பார்ப்போம்.

ப்ரியா என்னும் ப்ரியம்வதா பெயருக்கு ஏற்றார்ப்போல் இனிமையான பேச்சும் குணமும் உடையவள்; இருபத்திமூன்று வயது மங்கை; பாரம்பரியம் பாதி நாகரீகம் பாதி கலந்து செய்த கலவை அவள் (கடவுள் பாதி மிருகம் பாதி ரேன்ஜ்ல இருக்கா? இட்ஸ் ஓகே). பேரழகி என்று கூறமுடியாவிட்டாலும், அழகி என்று வகைப்படுத்தி மீண்டும் பார்க்கத்தூண்டும் முகம்; ரசித்து சிரிக்கத் தூண்டும் செய்கை, இவை தான் ப்ரியா. இவளது சொந்த ஊர் கொங்கு மண்டலமாம் கோவை மாநகர்; கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சென்னையில் வசிப்பவள். ப்ரியாவைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர்கள், கைலாசநாதன் – பவானி தம்பதியினர்.

கைலாசநாதன் ஒரு தேசிய வங்கியின் மேலாளர். அவரது மனைவி பவானி வீட்டைத் திறம்பட நடத்தும் பெண்மணி. பெற்றோருக்கு ஒற்றை மகளாய்ப் பிறந்ததாலும், குடும்பத்தின் கடைசி வாரிசானதாலும் மிகவும் செல்லம் அவளுக்கு. ஆனால், இவளைக் கரித்துக்கொட்டவே வாய் திறப்பவர்களும் உண்டு. அவர் தான் இவளது தந்தை. ஏன் அவருக்கு இவளைப் பிடிக்கவில்லை என இதுவரை இவள் அறிந்ததில்லை. அறியாதவயதில் அவரின் நடவடிக்கை புரியாவிட்டாலும் விவரம் அறிந்தபின் தானே ஒதுங்கிவிட்டாள். தாயின் பாசமும் குடும்பத்தாரின் அன்பும் இவளைச் சுற்றி எப்போதும் இருப்பதால் தந்தையின் பாராமுகம் அவ்வளவாக ப்ரியாவை பாதித்ததில்லை. இருந்தாலும் மனதின் ஓரத்தில் தந்தையின் பாசம் சிறிதளவேனும் கிட்டாதா என ஏங்குபவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.