(Reading time: 11 - 22 minutes)

14. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

இனிக்கின்ற காலம் தொடராதோ……..  இனியெந்தன் உள்ளம் உனது

அணைக்கின்ற சொந்தம் வளராதோ…….  இனியெந்தன் வாழ்வும் உனது

ஸ்வேதாவின் வீட்டிற்கு பத்துவின் அத்தங்காளும், ஹரியின் வீட்டிற்கு ராமனின் அம்மங்காளும் வந்து இறங்குவதாக என்றைக்குத் தெரிந்ததோ அன்றிலிருந்தே இரு வீட்டின் அரசிகளுக்கும் குளிர் ஜுரம் வராத குறைதான்.  தங்களுக்குத் தெரிந்த, தெரியாத அத்தனை கடவுள்களுக்கும் நேர்ந்தும் அந்த பயங்கர திங்கட்கிழமை வர மாமிகளின் ஜுரம் உச்சத்தைத் தொட்டது. 

மறுநாள் நிகழ்வுகளை நினைத்து இரவு முழுவதும் தூங்காமல் இருந்த ஜானு மாமி, விடியற்காலை மூன்று மணிக்கே வாசல் தெளித்து கோலம் போட்டு குளித்து,  டிகாக்ஷன் போட்டு என்று பர பரவென்று இருந்தார்.  ஏதேனும் உதவி வேண்டுமா என்று வந்த ராமனும், ஜானு மாமியின் நெற்றிக்கண் திறப்பில் உதவி செய்ய ஓரடி முன் வைத்த காலை, பத்தடி பின் வைத்து ஜகா வாங்கி விட்டார்.   

அம்மங்காள் சூப்பர் ஸ்டார் மாதிரி, எப்போ வருவார், எப்படி வருவார் என்றே தெரியாது.  அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று ஹரியையும், ராமனையும் ஐந்து மணிக்கே எழுப்பி,  தயாராக வைத்தார்.  நடுநடுவில் இப்படி ஒரு சொந்தத்தை கொண்டிருக்கும் ராமன் சார்க்கு சுப்ரபாதம் பாடவும் மறக்கவில்லை.  அதே கடுப்பில் ஹரிக்கு காப்பியையும், ராமனுக்கு காப்பித்  தண்ணியையும் கொடுத்து விட்டு வாசலுக்கு சென்று விட்டார்.  ராமனும், ஹரியும் காப்பி என்ற பெயரில் கொடுத்த திரவத்தை  வாயில் சரித்துக்கொண்டு ஜானுவின் பின்னாலேயே சென்றனர்.  மூவரும் அம்புஜம் அம்மங்காவின் வரவிற்காக  வாசலில் காத்திருக்கத் தொடங்கினர். 

ஹரி வீட்டின் வாசலில் நின்ற  காரிலிருந்து இறங்கிய அம்புஜம், தன் பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்க்க, மாமியின் இரட்டை நாடி சரீரத்திற்கு கான்ட்ராஸ்ட்டாக நெடு நெடு உயரத்தில் படு ஒல்லியாக பஞ்ச கச்ச வேஷ்டியுடன் ஒரு மனிதர் இறங்கினார்.

அம்புஜத்தின் முதல் பார்வைக்கு காரிலிருந்து இறங்கிய மனிதர், அவரின் இரண்டாம் பார்வைக்கு அம்புஜத்தின் அருகில் நின்றார்.

“ஏம்மா அம்மங்கா பாட்டி டான்ஸ் கத்துண்டு இருக்கான்னு சொல்லவே இல்லை.  இப்படி கண்ணாலேயே அத்தனை மெஸேஜயும்  தாத்தாக்கு  பாஸ் பண்ணிடறா”

“நீ வேறடா ஹரி, அந்த மனுஷர் பாவம்.  கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இவா அபிநயத்துக்கு தாளம் போடறதே வேலையாப் போச்சு.  உங்க பாட்டி இருந்த வரைக்கும், அம்மங்காளைப் பத்தி கதை கதையா சொல்லுவா.  அவா இருக்கற வரைக்கும் எப்படியோ இவாக்கிட்ட இருந்து தப்பிஞ்சுண்டு இருந்தேன்.  இப்போ வசமா மாட்டிண்டுட்டேன்”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ராமன் குடுகுடுவென்று வாசலுக்கு ஓடி அம்புஜத்தையும் அவள் ஆத்துக்காரரையும் அழைத்து வந்தார்.  பின்னாலேயே அவர்களின் டிரைவர் இரு கைகள், தலை என எல்லா இடங்களிகளும் கிட்டத்தட்ட ஏழெட்டு பெட்டிகளை சுமந்து வந்தான். 

“ஏம்மா அம்பு பாட்டி நம்மாத்துலையே பெர்மனென்ட்டா இருக்கப்போறாளா...... எதுக்கு இத்தனை சாமான்.  அந்த டிரைவர் முன்னாடி சென்ட்ரல் ஸ்டேஷன்ல போர்ட்டரா இருந்து இருப்பான் போல.... என்னமா பாலன்ஸ் பண்றான்....”

“நீ வேற ஏண்டா பீதியக் கிளப்பற.... செத்த சும்மா இரேண்டா.....”,அம்புஜம் நெருங்கி வந்ததைப் பார்த்து இருவரும் வாயை மூடிக்கொண்டனர். 

அவர் அருகில் வரவும் சிரித்தபடியே வந்த ஜானு அம்புஜத்தின் கைகளைப் பிடித்து, “வாங்கோ அம்மங்கா, நேக்கு இப்போதான் யானை பலம் வந்தா மாதிரி இருக்கு,  ஹரியோட பாட்டியும் இல்லை, நமக்கு இந்த சம்ப்ரதாயமெல்லாம் ஒண்ணும் தெரியாதேன்னு தவிச்சுண்டு இருந்தேன் கரெக்டா வந்துட்டேள்”,என்று கூற, இந்த அம்மா நம்ம அம்பு பாட்டி குண்டா இருக்கறதைப் பார்த்துட்டா... யானை பலம்ன்னு சொல்றா, என்ற உலக மகா சந்தேகத்திற்கு உள்ளானான் ஹரி. 

“நோக்கு ஒண்ணும் தெரியாதுன்னுதான் நேக்குத் தெரியுமே ஜானகி......  ஏதோ எங்க அத்தையா இருக்கக்கொண்டு உன்னோட காலந்தள்ளிண்டு போனா.....”, என்று நொடிக்க, ஜானு இந்த ஸ்டேட்மெண்ட்டிற்கு ராமனை பாசத்துடன் பார்த்தார். 

“சரி... சரி.... எதுக்கு வாசல்லையே பேசிண்டு உள்ள வாங்கோ....”, ராமன் ஜானுவின் பாசப்பார்வையிலிருந்து தப்பித்து அனைவரையும் வீட்டினுள் அழைத்து சென்றார்.

“இதுதான் புது அகமா  ராமா.  எத்தனை கிரௌண்ட் நிலம்.  எத்தனை ஸ்கொயர்ல வீடு கட்டி இருக்க.....”

“ரெண்டு கிரௌண்ட் நிலம் அம்மங்கா.  மேலயும், கீழையுமா சேர்ந்து மொத்தம் 2500 சதுர அடில வீடு கட்டி இருக்கு......”

“ஹ்ம்ம் இதே குரோம்பேட்டைல ஒண்டுக்குடித்தனத்துல அல்லாடிண்டு இருந்த..... இப்போ ஹரி வேலைக்குப் போய் உங்களை மேல கொண்டு வந்துட்டான் போ....”, என்று கூற ஹரிக்கு தன் தந்தையைப் பற்றிக் கூறியவுடன் கோவம் வந்துவிட்டது.   அவன் பதிலுக்குப் பேசப்போக ராமன் கண்களாலேயே அவனை அடக்கி விட்டார்.  ராமனுக்கு அடுத்ததாக இப்பொழுது அம்புஜத்தின் பார்வை ஜானுவின் பக்கம் திரும்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.