(Reading time: 11 - 22 minutes)

அமேலியா - 07 - சிவாஜிதாசன்

Ameliya

ன்னைத் தானே சுட்டுக்கொள்ள முயன்ற போதை மங்கையை நோக்கி, "நிறுத்துங்கள்! " என உருதுவில் கத்தினாள் அமேலியா. போதைப் பெண், குரல் வந்த திசையை ஆச்சர்யத்தோடு நோக்கினாள். அமேலியாவின் தோற்றத்தைப் பார்த்த போதைப் பெண்ணிற்கு, மனநல மருத்துவமனையில் இருந்து பைத்தியம் பிடித்த பெண் ஒருத்தி ஓடி வந்திருப்பதைப் போல இருந்தது.

இன்னமும் அதிர்ச்சி விலகாமல் இருந்த அமெரிக்க பெண் சிலையென நின்று அமேலியாவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அழுக்கான ஆடையுடன் தலை முடியெல்லாம் கலைந்து மிரட்சியான விழிகளோடு நின்றுகொண்டிருந்தாள் அமேலியா. ஆனால், அவளது முகமோ ஏதுமறியா மழலையை நினைவூட்டியது. . அமேலியாவின் முகத்தில் தனக்கான ஆறுதலை கண்ட அவள் மெல்ல தன்னுடைய சகஜ நிலைக்கு வந்து,  நீண்ட பெருமூச்சை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

"யார் நீ? .நான் இறப்பதைத் தடுக்க நீ யார்?" என கேட்டாள் அமெரிக்கப்பெண்.

அவள் பேசியது அமேலியாவிற்கு சிறிதளவு கூட விளங்கவே இல்லை. இருந்தாலும் அவள் என்ன பேசியிருப்பாள் என்பதை அவள் ஊகித்தாள். அவளுக்குள் சிறிய தயக்கம் உருவானது.

"நீங்க பேசுற ஆங்கிலம் எனக்கு தெரியாது. எனக்கு தெரிஞ்ச மொழி உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்குறேன். கடவுள் கொடுத்த உயிரை வேண்டாம் என்று சொல்வதற்கு நமக்கு உரிமை கிடையாது. உயிர் போகுற வலிய நீங்க பாத்திருக்கிங்களான்னு எனக்கு தெரியாது. நான் நிறைய தடவை அனுபவிச்சிருக்கேன். சின்ன சின்ன குழந்தைங்க எல்லாம் என் கண்ணு முன்னாடி துடி துடிச்சு இறந்து போனத பாத்திருக்கேன். அந்த வலி சாதாரணமானது கிடையாது. பத்து நரகத்துக்கு சமம்" என்று கலங்கிய கண்களோடு உருதுவில் பேசி முடித்தாள் அமேலியா .

அமேலியா என்ன பேசினாள் என்பது அவளுக்கு புரியவில்லை ஆனால், தன்னை அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறாள் என்பது அவளுக்கு புரிந்தது.

"நீ பேசும் மொழி எனக்கு சுத்தமா புரியலை. நீ எந்த நாட்டை சேர்ந்தவள்?"

திருதிருவென விழித்தாள் அமெலியா .

அமேலியாவின் கோலத்தை மீண்டும் ஒரு முறை நோக்கிய அமெரிக்கப்பெண் அவளுக்கு இந்த நிலை எவ்வாறு வந்தது என தானே கற்பனை செய்துகொண்டாள்.

"எனக்கு புரிஞ்சு போச்சு. நீ உன் நாட்டுல இருந்து அமெரிக்க வந்திருக்க. வர வழியில உனது உடமைகள் திருடு போயிருக்கு . அதனால நீ போய் சேர வேண்டிய இடத்துக்கு உன்னால போக முடியல, சரியா?"

அவள் என்ன பேசுகிறாள் என்பது புரியாமல் குழம்பிய அமேலியா தலையை மட்டும் முன்னும் பின்னும் ஆட்டினாள்.

"உனக்கு நான் உதவி செய்றேன். போலீஸ் ஸ்டேஷன் போய் உனக்கு நடந்ததை சொன்னா அவங்க உனக்கு உதவி செய்வாங்க" என்று கார் கதவை திறந்து அமேலியாவை அழைத்தாள்

அமேலியா பயந்து தயங்கினாள்.

"பயப்படாத, நான் இருக்கேன். என்னை நீ தாராளமா நம்பலாம்" என்றாள் அமெரிக்க பெண்.

அமேலியாவிற்கு சிறிது தைரியம் பிறந்தது . தனக்கு உதவி செய்ய அவள் நினைக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அமேலியா காரில் ஏறினாள். மரத்தில் முட்டிய கார் சிறிய தடுமாற்றத்திற்கு பின் சாலையில் ஓடியது.

கார் சென்று கொண்டிருந்தது. குழந்தையை போல் அமேலியாவின் உள்ளம் குதூகலித்தது. காரில் செல்வது போல் அவளுக்கு தோன்றவில்லை. தானே பறந்து செல்வதாய் அவள் நினைத்தாள். காரின் உள்ளே இருக்கும் விளக்குகளை புன்சிரிப்போடு நோக்கினாள். கண்ணாடி வழியே சாலை,  மரங்கள் கடந்து போவதை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.

அந்நேரத்தில் அவள் மடியில் இருந்த வில்லியம்ஸின் ஆல்பம் கீழே விழுந்தது. அதை எடுத்த அமெரிக்க பெண் வில்லியம்ஸின் புகைப்படங்களை புரட்டினாள்.

"யார் இது? உனது நண்பரின் புகைப்படமா?"

அமேலியா அவள் பேசியதை கவனிக்கவில்லை. அவளது கண்கள் கலங்கி இருந்தன. எப்பொழுது தனது தாய், தந்தையைக் காண்போம் என அவள் ஏக்கத்தோடு சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளது தோள்களைப் பற்றி குலுக்கினாள் அமெரிக்கப்பெண். பதட்டத்தோடு அமெரிக்க பெண்ணை நோக்கினாள் அமேலியா .என்ன ஆனது? என சைகை மூலம் கேட்டாள் அமெரிக்க பெண்

அமேலியா தான் வந்த பயணத்தை கண்ணீர் மல்க கூறத் தொடங்கினாள். அவ்வப்போது சிறிய இடைவெளி விட்டு அழுதாள். தன் தாயைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் பேசினாள். அவர்களோடு இது போன்ற இடத்திற்கு வந்திருந்தால் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று கூறினாள்..

இது போன்ற அழகு நிறைந்த, அமைதியான, குண்டு சப்தம் ஏதும் கேட்காத இயற்கை எழிலோடு விளங்கும் இடங்களைப் பார்க்க எனக்கு வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.  ஆனால், இவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. என் பெற்றோரை பார்க்கவேண்டும். நரகம் என்றாலும் என் ஊரில் வாழ வேண்டும் என்று கதறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.