(Reading time: 6 - 12 minutes)

20. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

காலச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பிக்க அதன் நகர்வில் ஒருவாரம் கடந்திருந்தது இமை மூடி திறப்பதற்குள்…

அந்த 7 நாட்களும் சரயூவை திலீப்புடன் சேர்த்து வைப்பதற்கு சண்முகம் படாதபாடு பட்டார்…

ஒருவாரத்திற்குப் பிறகு ஒருநாள்,

“நீங்க கூட்டிட்டு போறேன்னு சொன்னா எப்படி சம்பந்தி?... உங்க பையன் நல்லா பார்த்துப்பாருன்னு நம்பித்தான நான் என் பொண்ணை கட்டிவைச்சேன்… அவர் என் பொண்ணை பார்த்துக்கிட்ட லட்சணம் தான் இப்போ எங்களுக்கு தெரிஞ்சிட்டே… முதல்ல நடந்த சம்பவத்துக்கு அவர் வந்து மன்னிப்பு கேட்கட்டும்… என் பொண்ணும் அவரோட அங்க வர சம்மதிச்சா தாராளமா என் பொண்ணை அப்போ கூட்டிட்டு போங்க உங்க வீட்டு மருமகளா… அதுவரை எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை என் பொண்ணு எனக்கு மகளாவே இருந்துட்டு போகட்டும் இந்த வீட்டுல…”

நறுக்கென்று சண்முகத்திடம் பேசினார் சரயூவின் தந்தை….

“எனக்கு உங்க நிலைமை புரியுது சம்பந்தி… என் பையன் பண்ணின தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்….”

இருகை கூப்பி சண்முகம் சரயூவின் பெற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க

“பெத்த மனசு கிடந்து அல்லாடுதுங்க…. ரொம்ப சுலபமா உங்க பையன் என் பொண்ணை நடுராத்தின்னு கூட பார்க்காம வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டார்… குடும்பம்னா ஆயிரம் மனப்பூசல் இருக்கத்தாங்க செய்யும்… அதுக்காக இப்படி துரத்தி விட்டுருவாரா?... உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு… கடவுள் புண்ணியத்துல அவ நல்லா இருக்குறா… ஒருவேளை அவளுக்கு இப்படி நடந்திருந்து அவ வீட்டு ஆளுங்க வந்து மன்னிப்பு கேட்டா நீங்க பெருந்தன்மையா மன்னிச்சு விட்டுடுவீங்களா?... இல்லத் தெரியாமத்தான் கேட்குறேன்…”

அதுநாள்வரை வாய்திறக்காமல் இருந்த வாசந்தி தன் மனக்குமுறலை வெளிப்படுத்த, சண்முகத்தால் பேசமுடியவில்லை எதுவும்…

என்ன சொல்லி சரயூவின் பெற்றோர்களை அவரால் சமாதானப்படுத்த முடியும்?... அவர்கள் கேட்பதும் சரிதானே… தப்பு செய்தது திலீப்… அவன் வந்து மன்னிப்பு கேட்பது தானே முறையும் கூட… அதுமட்டுமல்லாது திலீப்பின் தங்கைக்கு இவ்வாறு நடந்திருந்தால் தன் மருமகன் வந்து நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டு தன் மகளை அழைத்து செல்ல வேண்டும் என்று தானே எண்ணியிருப்பார்… அவர் முன் வைக்கும் கருத்தும் அதுவாகத்தானே இருக்கும்…

எனில் இப்போது சரயூவின் பெற்றோரிடம் எவ்வாறு அவரால் சமரசம் பேச முடியும்?.. மகன் செய்த பாவத்தை அவன் தானே போக்க வேண்டும்…

மனதில் ஒரு முடிவுடன் திலீப்பைப் பார்க்க கிளம்பினார் சண்முகம் வேகமாய்…

அர்னவ் வந்து பேசிவிட்டு போனதிலிருந்து திலீப்பிற்கு யாரைப் பார்க்கவும் பிடிக்கவில்லை… பொதுவாகவே அவன் யாருடனும் பேச விரும்பமாட்டான்… இதில் அர்னவ் வந்து பேசிய பின் யாரிடத்திலும் மருந்துக்கும் கூட அவன் வாய் திறக்கவில்லை கொஞ்சமும்…

ன்று…

சரயூவை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு ஒரு தெரு கூட தாண்டியிருக்க மாட்டான்… அதற்கும் மேல் அவனால் போக முடியவில்லை… மனதை என்னவோ செய்ய, சிறிது நேரம் பைக்கை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்காமல் அப்படியே இருந்தான்…

எத்தனை மணித்துளிகள் அப்படியே இருந்தானோ தெரியாது…

“திலீப்…………….” என காதல் நிரம்ப சரயூ அழைக்கும் குரல் காதுக்குள் கேட்க, உடனேயே அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் வந்தான் திலீப் வேகமாய்…

வந்தவனின் கண்ணில் சுதீப்பும், சரயூவும் தென்பட, அதுவரை அவள் மேல் இருந்த காதல் அமிழ்ந்து கோபமும், பொறாமையும் மேலே எழும்ப, பைக்கை எட்டி உதைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ஆற்றாமையுடன்…

வந்தவன் தன் அறைக்குச் சென்று கதவை சாற்றிக்கொள்ள, மறுநாள் சண்முகம் வந்து கதவைத் தட்டும்வரை அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை…

கோபமாக வந்த சண்முகம், திலீப்பை வசைபாட, அவன் அப்படியே நின்றான் பதில் எதுவும் பேசாமல்…

“உங்கிட்ட போய் நான் பேசிட்டிருக்கேன் பாரு… நான் போய் என் மருமகளைப் பார்க்குறேன்… பாவி… பாவி… வீட்டுக்கு வந்த மகாலஷ்மியை இப்படி அனுப்பிட்டியேடா… அவ முகத்துல நான் எப்படிடா முழிப்பேன் இனி?... உன்னைப் பெத்த பாவத்துக்கு எனக்கெல்லாம் கண்டிப்பா நரகம் தாண்டா….”

புலம்பிக்கொண்டே பேத்திகளை அழைத்துக்கொண்டு சரயூவின் வீட்டிற்கு சண்முகம் வந்து சரயூவின் பெற்றவர்களிடம் பேச, சிறிது நேரம் பல்லைக்கடித்துக்கொண்டிருந்த அர்னவ் அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் கிளம்பி தமக்கையின் புகுந்த வீட்டிற்கு வந்தான்…

வந்தவன் முதலில் பார்த்தது சுதீப்பை தான்….

“வாங்க அர்னவ்… உள்ள வாங்க…”

“எங்க உங்க அண்ணன்?... முதல்ல அவரை வெளியே வர சொல்லுங்க….”

“எதுன்னாலும் உள்ள வந்து பேசுங்க அர்னவ்…. வாங்க…”

“ஏன் இப்போ நான் வீதியிலயா நிக்குறேன்… உங்க வீட்டு காம்ப்பௌண்டுக்குள்ள தான நிக்குறேன்… அப்புறம் என்ன?...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.