(Reading time: 21 - 42 minutes)

01. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

துஷ்யந்தன் - நர்மதா

இவா ரெண்டுப்பேருக்கும் பத்துக்கு எட்டுப் பொருத்தம் நல்லா பொருந்தியிருக்கு... ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் நடத்தி வச்சா ஷேமமா இருப்பா.." என்று அந்த ஜோசியர் சொன்னதும்...

துஷ்யந்தனின் தாய் கோமதி மற்றும் அத்தை விஜயலஷ்மிக்கும்... நர்மதாவின் பெற்றோர் குமாராசாமி, மல்லிகா தம்பதிக்கும் ஒரு நிறைவான புன்னகை முகத்தில் தோன்றியது..

"அப்போ.. ஒரு நல்ல நாளா பார்த்து, உங்க சொந்தக்காரங்கள கூட்டிக்கிட்டு வந்து நர்மதாவை பார்த்துட்டு, அப்படியே நிச்சயத்துக்கும் தேதி குறிச்சிடலாம்... என்ன சொல்றீங்க..." என்று மல்லிகா, துஷ்யந்தனின் அன்னை கோமதியிடம் கேட்டார்.

"அதுவந்து நான் என்ன சொல்றேன்னா... எங்களுக்கு சொந்தபந்தங்க யாருமில்ல.. எல்லோரையும் விலக்கி வச்சிருக்கோம்.. எனக்கு சொந்தமுன்னு சொல்லனும்னா... என்னோட ரெண்டு பசங்க... அப்புறம் இதோ என்னோட தம்பி பொண்டாட்டி இவ மட்டும் தான்... நாங்க நாலு பேர் மட்டும் தான் ஒருத்தொருக்கு ஒருத்தர் உறவுன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்...

அதனால யாரையும் நாங்க கூட்டிக்கிட்டு வரப் போறதில்ல... என்னோட பையனும் நான் பார்க்கப் போற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொல்லிட்டான்... உங்களுக்கு சொந்தக்காரங்கக்கிட்ட கலந்து பேசனும்னா சொல்லுங்க... இல்லன்னா இப்பவே பாக்கு வெத்தலை மாத்தி நிச்சயத்தை முடிச்சுடுவோம்... என்ன சொல்றீங்க..." என்று பதிலுக்கு குமாரசாமி தம்பதியிரிடம் கேட்டார் கோமதி.

"எங்களுக்கும் சொந்தக்காரங்க வந்து முடிவுப் பண்ணனும்னு இல்லங்க... நானும் இவரும் முடிவுப் பண்ணா போதும்... எங்கப் பொண்ணும் உங்க பையன் மாதிரியே எங்க விருப்பப்படி கல்யாணம் செஞ்சுக்கறதா சொல்லியிருக்கா.. அதனால இன்னைக்கே நிச்சயம் நடக்கறதுல எங்களுக்கு ஆட்சேயபனை இல்லங்க..." என்றார் மல்லிகா.

"அப்போ ரொம்ப சந்தோஷம்... இங்கப் பாருங்க சொந்தக்காரங்க யாரும் வரப்போறதில்ல, எங்களுக்கு தெரிஞ்ச சிலரும், அப்புறம் என்னோட பசங்களோட ஃப்ரண்ட்ஸும் தான் கல்யாணத்துக்கு வருவாங்க.... கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை, பொண்ணை ஒன்னா நிக்க வச்சு ரிஸப்ஷன் வக்கறதெல்லாம் எங்க பழக்கமில்ல... அதனால வீட்டிலேயே சிம்பிளா கல்யாணத்தை வச்சிக்கலாம்னு நினைக்கிறேன்... என்னோட பையனும் அப்படித்தான் நினைக்கிறான். அதனால கல்யாணத்தை அப்படியே நடத்துவோமா..??"

"ஆமாங்க அதுவும் நல்லது தான்... ஏன் வீண் செலவு, அப்புறம் நேர விரயம் இதெல்லாம் இல்லாம கல்யாணத்தை முடிச்சிடலாம்... நாங்களும் எங்க பக்கம் கொஞ்ச பேரை தான் கூப்பிடலாம்னு இருக்கோம்..." என்று மல்லிகா கூற...

இதுவரை தான் பேசியதற்கு மல்லிகா மட்டுமே பதில் சொல்ல... அவள் கணவன் அமைதியாக இருக்கிறாரே... என்று கோமதி தயக்கத்தோடு குமாரசாமியை பார்க்க... அதை புரிந்துக் கொண்ட மல்லிகா..

"ஏங்க நீங்களும் சம்மதம் சொல்லனும்னு சம்மந்தி எதிர்பார்க்கிறாங்க... உங்க வாயால சம்மதத்தை சொல்லுங்க..." என்று கூறினாள்... மனைவியின் முடிவை அவர் எப்போதும் மறுத்து பேசாதவர் என்பதால், இப்போதும் அதையே கடைப்பிடித்து சரி என்று கோமதி சொன்னதற்கு சம்மதித்தார்... இருந்தும் மனசுக்குள் ஒருவித தயக்கம் அவருக்கு இருந்தது...

பெண் வீட்டிலும் இந்த முடிவுக்கு சம்மதம் சொல்லவே  கோமதியும், விஜயலஷ்மியும் சந்தோஷப்பட்டனர்..

"ஜோசியரே... அடுத்து வர முகூர்த்தத்துல எது நல்ல முகூர்த்தம்னு பார்த்து சொல்லுங்க..." என்று கோமதி ஜோசியரிடம் கேட்டார்.

"இன்னும் 25 நாளில் ஒரு நல்ல முகூர்த்தம் வருது... அப்பவே கல்யாணத்தை வச்சுக்கலாமா..??" என்று அவர் கேட்டதும்... அனைவரும் ஒத்துக் கொண்டனர்...

பின் அவரே முடிவு செய்த தேதியை வைத்து முகூர்த்த பத்திரிக்கை எழுதிக் கொடுக்க... அப்போதே பாக்கு, வெத்திலை மாற்றி திருமணத்தை முடிவு செய்தனர்.

டிரைவரிடம் சொல்லி காரில் கொண்டு போய் வீட்டில் விட சொல்வதாக கோமதி சொல்லியும் மறுத்துவிட்டு ஆட்டோவில் செல்கிறோம் என்று சொல்லி புறப்பட்டனர் குமாரசாமியும், மல்லிகாவும்...

வீட்டிலிருந்து வெளியே வந்து அந்த பெரிய கேட்டை திறந்து வெளியே வந்ததும் ஒரு தரம் திரும்பி அந்த வீட்டைப் பார்த்தார் மல்லிகா... இவ்வளவு பெரிய வீட்டில் தன் மகள் மருமகளாக வாழப்போவதில் பெருமிதம் கொண்டார் அவர்... குமாரசாமிக்கும் மனைவியின் எண்ண ஓட்டம் புரிந்தது... ஆட்டோ ஸ்டாண்ட் கொஞ்சம் தொலைவில் இருப்பதால்... இருவரும் நடந்து செல்லும்போது மெதுவாக தன் மனைவியிடம் பேச்சை ஆரம்பித்தார் அவர்...

"என்ன மல்லிகா... அவங்க கேட்டதும் இப்படி சம்மதம்னு சொல்லி நிச்சயத்தை முடிவுப் பண்ணிட்டு வந்துட்ட... வீட்ல போய் கலந்து பேசிட்டு சொல்றோம்னு சொல்லியிருக்கலாமில்ல..."

"என்னங்க நாம தயங்கறது தெரிஞ்சு அவங்க வேற இடத்துல பொண்ணு பார்த்துட்டு முடிவுப் பண்ணிட்டாங்கன்னா... அதான் அங்கேயே சம்மதம்னு சொன்னேன்.."

"இது ஒன்னும் ஏதாவது பொருள் வாங்கும் விஷயமில்ல மல்லிகா... நம்ம பொண்ணோட வாழ்க்கை... தரகர் சொல்லி திடிர்னு இவங்க ரெண்டுப்பேரும் பொண்ணுப் பார்க்க வந்தாங்க... அப்புறம் ஜோசியர் ஜாதகம் பார்க்க வராரு வாங்கன்னு சொன்னாங்க... இங்க வந்ததும் கல்யாணத்தை முடிவுப் பண்ணிட்டாங்க... மாப்பிள்ளை வந்து நம்ம நர்மதாவை பார்க்கவேயில்லையே... நர்மதாவும் அவரை பார்க்க வேண்டாமா..??"

"அதான் அவங்க அம்மா பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னா போதும்னு மாப்பிள்ளை சொன்னதா அந்தம்மா சொன்னாங்களே... நம்ம நர்மதாவும் நம்மக்கிட்ட அப்படித்தானே சொன்னா.."

"அது நம்ம அப்பா, அம்மா நமக்கு நல்லது தான் செய்வாங்கன்னு ஒரு நம்பிக்கைல சொல்றது தான்... அதுக்காக அவ மாப்பிள்ளைய பார்க்கறதுக்கு முன்னாடியே முடிவுப் பண்ணிட்றதா..?? மாப்பிள்ளைக்கு வேற வயசு 31 ஆகுது... நம்ம பொண்ணுக்கு 24 வயசு தான் ஆகுது மல்லிகா... அவங்க ரெண்டுப்பேருக்கும் 7 வயசு வித்தியாசம் இருக்கும்மா.."

"என்னங்க 7 வயசு ஒரு பெரிய விஷயமா..?? நம்ம  ரெண்டுப்பேருக்கும் 12 வயசு வித்தியாசம்... நாம சந்தோஷமா வாழல..??"

"அது அந்தக்காலம் மல்லிகா... இப்போ பையனை விட பொண்ணுக்கே வயசு அதிகம் இருக்கற மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறாங்க... இப்பல்லாம் 2,3 வயசு வித்தியாசத்துல தான் கல்யாணம் செஞ்சுக்க நினைக்கிறாங்க தெரியுமா..??"

"ஏங்க நம்ம பொண்ணு அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க... அப்படி சொல்றதா இருந்தா... நம்ம இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொல்லுவாளா..??

இந்த மாதிரி இடம் கிடைக்க எவ்வளவு கொடுத்து வச்சிருக்கனும்னு தெரியுமா..?? மாப்பிள்ளை ஒரே சமயத்துல 2,3 பிஸ்னஸ் பண்றாரு... அதுவும் இந்தியா முழுக்க சுத்திக்கிட்டே இருப்பாராம்...  இந்த வீடு மாதிரியே இன்னும் 2,3 வீடு இருக்கு... இவ்வளவு வசதியிருந்தும் அவங்க எவ்வளவு சிம்பிளா இருக்காங்க... நம்மள மாதிரி நடுத்தரக் குடும்பத்துல சம்மந்தம் பண்ண நினைக்கிறாங்க... நம்மக்கிட்டேயும் அவங்க எதுவும் எதிர்பார்க்கல... இதெல்லாம் நினைச்சுப் பாருங்க... அத விட்டுட்டு நீங்க குழம்பி, என்னையும் குழப்பறீங்க..."

"அதெல்லாம் தான் இப்போ பிரச்சனையே மல்லிகா... இப்பல்லாம் பொண்ணை கட்டிக் கொடுக்க ரொம்ப யோசிக்க வேண்டியதா இருக்கு தெரியுமா..?? பணக்கார இடம், வெளநாட்டு மாப்பிள்ளைன்னு ஆசைப்பட்டு, நிறைய பேர் ஏமாந்துப் போறாங்க தெரியுமா..?? இவங்க இப்படி அவசரமா கல்யாணம் செய்ய நினைக்கறத பார்த்தா... அது எளிமைன்னு தோணல... ஏதோ விவகாரம் இருக்குமோன்னு தோனுது... என்னத்தான் மாப்பிள்ளை பிஸியா இருந்தாலும், அம்மா விருப்பத்துக்கு கல்யாணம் செஞ்சுக்க நினைச்சாலும்... ஒருதடவை பொண்ணைப் பார்க்கக் கூடவா வரக்கூடாது... எனக்கு என்னவோ இது சரியாப் படல..."

"என்னங்க... நீங்க ரொம்ப பயப்பட்றீங்கன்னு தோனுது... நம்மள கடவுள் என்னைக்கும் கைவிட மாட்டாருங்க... நம்ம பொண்ணு நல்லப்படியா வாழப் போறா பாருங்க...

நம்ம ஜோசியர் கிட்ட நர்மதா ஜாதகத்தை கொடுத்து நீங்க தானே பலன் பார்த்துட்டு வந்தீங்க... அவளுக்கு பெரிய இடத்துல நல்ல வாழ்க்கை அமையும்னு அவர் சொன்னதா நீங்க தானே வந்து என்கிட்ட சொன்னீங்க... நீங்க அவ ஜாதகத்தை பார்த்துட்டு வந்த நேரம் அவளுக்கு எவ்வளவு பெரிய இடத்துல இருந்து வரன் வந்திருக்கு பாருங்க... அதுவும் சாதாரணமா இல்லங்க... அவ்வளவு பெரிய வீட்டுக்கு நம்ம பொண்ணு மூத்த மருமகளா போகப் போறா... அவ நல்லா வாழறத பார்த்து நீங்களே... "நான் அப்போ தேவையில்லாம பயந்தேன் இல்ல மல்லிகான்னு என்கிட்ட சொல்லப் போறீங்க பாருங்க..." என்றவர்... அதற்குள் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் வரவே... அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் தாங்கள் போகும் இடத்தை கூறி, ஆட்டோ வருமா..?? என்று கேட்டார் மல்லிகா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.