(Reading time: 12 - 23 minutes)

01. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

Marbil oorum uyire

பிறழ்ந்த பரல்களின் ஜதீஸ்வரம் நீ!!!

 ழை!!!

“வாவ்"

"அத்தை இங்க பாருங்களேன், மழை பெய்யுது" ஜன்னலை நோக்கி  குதூகலமாக ஓடிச் சென்றாள் அவள்.

தலைநகர் தில்லியில் மழை என்றாலே அதிசயம் தான்.. மான்சூன் சமயமான ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் கார்ப்பரேஷன் தண்ணி லாரி மாதிரி அப்பப்போ வந்து தலையைக் காட்டி விட்டுப் போகும். அதில் இந்த கொளுத்தும் கோடையில் மழை பெய்வதென்றால் குதூகலம் தானே. 

சற்று நேரத்திலேயே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

"இப்போ என்னால மழைல ஜாலியா நனைய முடியாதே...அத்தை..ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்"

"அபி வா மா நேரம் ஆச்சு. எப்படினாலும் இந்த மழைல கண்டிப்பா நான் உன்னை நனைய விட போறதில்ல. அப்புறம் எதுக்கு விசனப்படுற"

கையில் இருந்த மல்லிகை பூச்சரங்களை அழகாய் அவளது ஜடையில் சுற்றி விட காத்திருந்தவர்  அதட்டியவுடன்  மனமே இல்லாமல் கண்ணாடி முன் வந்தமர்ந்தாள்.

"அத்தை"

"ம்ம் சொல்லுடா அபி"

"கொஞ்சம் பயமா இருக்கே" பயந்தது போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல

"அபி எங்க இங்க பாரு" என அவள் முகத்தை தன் புறமாக திருப்பி,

" பாவம் எல்லாம் சரியா தான் இருக்கு ஆனா இன்னிக்கு ப்ரோக்ராம்ல இந்த அபிநயத்துக்கு வேலை இல்லையே" அவளது குறும்பைக் கண்டு கொண்டவராய் அவளுக்கு மிக அழகாக நேர்த்தியாக அலங்காரம் செய்து முடித்தார் சுசீலா.

"போங்க அத்தை..நீங்க ரொம்ப மோசம்..எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுறீங்க" மீண்டும் சிணுங்கினாள்.

"உன் மனசுக்குள்ள என்ன இருக்குதுன்னு நாங்க கண்டுபிடிச்சுட்டாலும்.  சரியான அழுத்தக்காரியாச்சே நீ”

"ஹும் கும் இவங்க சீமந்த புத்திரனை விடவா"  மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டவள்

"அத்தை... எல்லாம் சரியா இருக்கா" எழுந்து நின்று பெண் சிலை போல அபிநயம் பிடித்து நின்றாள்.

"அந்த மீனாக்ஷியே நேர்ல வந்து நிக்கிற மாதிரி இருக்கே" என்று திருஷ்டி கழித்தார்.

முகம் நிறைய சந்தோஷமாய்," என் செல்ல அத்தை" என அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"எல்லாம் சரி பார்த்துக்கோ" சுசீலா கூறியவுடன்

"ஐயோ அத்தை...மாலைய காணோம்" இங்கும் அங்கும் தேடியவள்,” எடுத்துட்டு தானே வந்தேன்” திருதிருவென முழித்தாள்.

"நல்ல பொண்ணு....சித்து கிளம்பிட்டானா கேளு..அவனை வர்ற வழில மலை மந்திர்ல வாங்கிட்டு வரச் சொல்லு"

"அவன் கிட்டேயா...ஐயோ சாமி போன்லேயே துவைச்சு பிழிஞ்சு காய வச்சு என்னை இஸ்திரி போட்டுடுவானே..என்ன பண்றது" தனக்குளேயே பேசிக் கொண்டவள் “தாய் சொல் தட்டாத தனயன் அல்லவோ அவன்” என்று மனதில் தோன்ற

"அத்தை ப்ளீஸ் ப்ளீஸ் நீங்களே சொல்லிடுங்களேன்"

அவள் கெஞ்ச சரி என்று தன் மகன் சித்தார்த்துக்கு டயல் செய்தார்.

நீண்ட நேரம் ரிங் போய் கொண்டே இருக்க," எங்க இருக்கானோ தெரியலையே " என்று மீண்டும் முயற்சித்தவர் ஸ்பீக்கரில் போட்டு விட்டு அவளது தலை அலங்காரத்தை சிறிது டச் அப் செய்ய ஆரம்பித்தார்.

"எங்க இருக்கானோவா... கம்ப்யூட்டரின் ஸ்க்ரீனில் குடியிருக்க நான் வர வேண்டும் ...குடியிருக்க நான் வருவதென்றால் பாஸ்வர்ட் என்ன தர வேண்டும்ன்னு அவன்  டூயட் பாடிகிட்டு இருப்பான்" இவள் மைண்ட் வாய்ஸ் அவனுக்கு கேட்டுவிட்டதோ என்னவோ

" ஹல்லோ சொல்லுங்க அம்மா" என்றான் பவ்யமாக.

"கண்ணா கிளம்பிட்டியா"   

"மழை கொஞ்சம் குறையட்டும்னு வைட் பண்றேன் ம்மா"

" ஏண்டா மழைக்கும் நீ கிளம்பறதுக்கும் என்ன சம்பந்தம்"

"அம்மா அது பைக்ல வரலாம்னு...மழைல ஆடி அழுக்காகிடும்ல"

“ஆமா மழைக்கு இவரு ஆடில மட்டும் ஹோலி விளையாடணும்னு ஆசை..என்னவோ சகதியும் சேறுமா இருக்க அமேசான் காட்டுக்குள்ள வண்டி ஓட்ட போற மாதிரி இந்த சாக்கு போக்குக்கு  ஒன்னும் குறைச்சல் இல்ல...அய்யாக்கு மாதவன்னு நெனப்பு...என்றென்றும் புன்னகைன்னு பைக்ல சீன்  போட தான் இத்தனையும்" இதுவும் அபியின் மைண்ட் வாய்ஸ் தான்

"சித்து கண்ணா... நீ என்ன பண்ற வர்ற வழில மலை மந்திர் ல காலையில சாமிக்கு சாத்தினோம் பாரு அதே மாதிரி ரோஜா மாலை ஒன்னு வாங்கிட்டு சீக்கிரம் வந்து சேரு"

"சரிம்மா..அம்மா நான் அப்போ கோயில்ல இருக்கவா இல்ல ஆடிட்டோரியம் வரவா”

"அபி டான்ஸ்க்கு மாலை வேணும்டா..அவ காலையிலே வாங்கினது எங்க மறந்து வச்சுட்டாலோ தெரில. அதான் நீ உடனே வாங்கிட்டு வா...அப்பா வந்துட்டார்னா ப்ரோக்ரேம் ஸ்டார்ட் பண்ணிருவாங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.