(Reading time: 19 - 37 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 09 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

ரும்பச்சை  நிற நாட்டிய உடையில் நின்றிருந்தவளை பார்த்தவனின் புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்க தவறவில்லை. இதுவரை பரதநாட்டியத்தை எல்லாம் இவன் ரசித்தது இல்லை. ரசிக்க நேரமும் இருந்ததில்லை..

அந்த பெரிய மருத்துவமனையின் எலும்பு முறிவு பிரிவின் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறான் விஷ்வா. அன்றைய வேலையை முடித்துவிட்டு அவன் வீட்டுக்கு கிளம்பும் நேரமிது.

இப்போதுதான் ஒரு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு வந்தவனின் உடலும் மனமும் கொஞ்சம் சோர்ந்து கிடந்தன. ஒரு மருத்துவனாக இருப்பதில் அவனுக்கு நிறையவே சந்தோஷமும் ஆத்மதிருப்தியும் என்றாலும் தினம் தினம் வலியையும், மருந்தையும், கத்தியையும் கட்டுக்களையும் சந்தித்து சந்தித்து மனம் சில நேரங்களில் சோர்ந்துதான் போகும்  

அந்த சோர்வில் அவன் கொஞ்சம் கண்களை மூடிக்கொள்ள... மேடையில் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது அந்த பாடல். அதனோடு கலந்தது அவள் சலங்கை சத்தம்.

கண்களை மூடிக்கொண்டிருந்த போதும் அவள் சலங்கை ஒலியிலேயே அவனது கவனம் இருக்க சில நொடிகளில் உடலின் ஒவ்வொரு நரம்பிலும் ஏதோ ஒரு புத்துணர்ச்சியை செலுத்திக்கொண்ட உணர்வு அவனுக்கு. அவன் விரல்கள் தன்னாலே தாளமிட துவங்க சட்டென கண் திறந்தான் அவன்.

மேடையில் சுழன்றுக்கொண்டிருந்தது அந்த மயில். இப்போது அவளை பார்க்கையில் ஒரு புன்னகை அவன் இதழ்களில்!!!! .அந்த பாடல் இதுவரை அவன் கேட்டதில்லைதான். ஆனால் அதன் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அவள்  கண்களும், முகமும், காட்டிய அபிநயங்களை ரசித்திருந்தவன் தனது அருகில் இருந்த இன்னொரு மருத்துவரிடம் கேட்டான்...

டாக்டர் 'யாரிவங்க???'

'டான்சர் இந்துஜா!!! கேள்வி பட்டதில்லையா விஷ்வா நீங்க..' ஆச்சரிய குரலில் கேட்டார் அவர்.

'இல்லையே. எனக்கு டான்ஸ்லே எல்லாம் பெரிய இன்ட்ரெஸ்ட் இல்லை...இதுவரைக்கும்..' என்றவன்  'இந்துஜா..' உச்சரித்து பார்த்தான் ஒரு முறை.

'அவன் கண்கள் ஒரு முறை அந்த அரங்கத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நிலவை தொட்டு வந்தது தன்னையும் அறியாமல்!!!

'ரொம்ப அழகா ஆடுவாங்க..' தொடர்ந்தார் அந்த மருத்துவர். 'ஆனால் பாவம் அவங்களாலே பேச முடியாது. பிறந்ததிலிருந்தே அப்படியாம்..' அவர் சொல்லி முடிக்க கொஞ்சம் அதிர்ந்து போனவனாக மேடையின் பக்கம் திரும்பினான் அவன்.

அவள் மீது பரிதாபம் எல்லாம் வரவில்லை அவனுக்கு. ஏன் பொய் சொல்கிறார் இவர் என்றே தோன்றியது.

'அதுதான் உலகில் இருக்கும் பேசிக்கொண்டிருக்கிறாளே கண்களாலும், விரல்களாலும் பாதங்களாலும் பிறகென்னவாம்??? இவர் ஏன் அவளை பாவம் என்கிறார் என்றே தோன்றியது அவனுக்கு. அவள் நடனம் முடியும் வரை கிட்டத்தட்ட மேடையை விட்டு விலகவில்லை அவன் பார்வை.

மேடையை விட்டு இறங்கி வந்தாள் இந்துஜா. எல்லாரும் பாராட்டிக்கொண்டிருந்தார்கள் அவளை. தூரத்தில் இருந்து அவளையே பார்த்திருந்தான் இவன். அவள் புன்னகையிலும், நடையிலும், எல்லார் பாராட்டையும் அவள் ஏற்றுக்கொண்ட விதத்தில் ஒரு கம்பீரமும், தன்நம்பிக்கையும் ஒளிர்ந்திருந்ததை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அவள் நடனத்தை விட அவள் தன்னை செலுத்திக்கொண்ட விதம் அவனை ரொம்பவுமே கவர்ந்தது. சில நிகழ்சிகளுக்கு பின் விழா நிறைவடைய, எல்லாரும் இரவு உணவுக்காக கூடி இருக்க... நாட்டிய உடையில் இருந்து சாதாரண புடவைக்கு மாறிகொண்டு சாப்பிட வந்திருந்தாள் அவள்.

அப்போது இந்துஜாவை நோக்கி வந்தது அந்த பூச்செண்டு.. அனுப்பியது விஷ்வா. திரைப்படங்களில் வருவது போலெல்லாம் உடனடியாக அவள் மீது காதல் எல்லாம் வந்து விடவில்லை அவனுக்கு. ஆனாலும் சின்னதாக ஒரு ஆசை. அவளை புன்னகைக்க வைத்து விட வேண்டும் என்று ஒரு ஆசை,

நேராக சென்று கூட அவளை பாராட்டி புன்னகைக்க வைத்து இருக்கலாம்தான். ஆனால் அதன் பின்னர் விஷ்வாவுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசமாம்.???

'டாக்டர் சார் கொடுக்க சொன்னங்க...' என்றான் அந்த பூச்செண்டை அவளிடம் கொடுத்தவன்.

'இது என்ன அதிசயம்!!! பெண் மயில் கூட தோகை விரித்து ஆடுமா என்ன??? வியந்து போய் நிற்கிறேன் நான்!!! டாக்டர் விஷ்வா..' அந்த பூச்செண்டின் மேல் அவனது கையெழுத்தில் சிரித்தது அந்த வாசகம்.

சற்றே தூரத்தில் நின்று கொண்டு அவளது முக பாவத்தை சுவாரஸ்யமாக பார்த்திருந்தான் விஷ்வா.

பூச்செண்டை கொடுத்தவனை பார்த்து நட்பாக புன்னகைத்து தலை அசைத்து அவனை அனுப்பி விட்டு ஒரு முறை பார்வையை சுழற்றி இது யாராக இருக்கும்??? என்பதை போல தேடி விட்டு அலட்சியமாக அந்த பூச்செண்டை அங்கிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட நகர்ந்தாள் அவள்.

'ஆனானபட்ட பரத்தையே நம்ம பொக்கே கவுத்திருச்சு. இந்த பொண்ணு எம்மாத்திரம் என்றபடியே  கையில் தட்டுடன் அவள் அருகில் வந்து நின்றான் விஷ்வா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.