(Reading time: 17 - 34 minutes)

03. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

திகள் பதிப்பகம்

என்ற பெயர்பலகையோடு இருந்த அந்த பதிப்பகத்தின் அலுவலக அறையில் அன்றைய பதிப்பீடுகளின் பதிவுகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோவன்... அப்பொழுது அந்த பதிப்பகத்தின் நுழைவு வாயிலில் ஒரு ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டு, அந்த அறையில் இருந்த ஜன்னலின் வழியாக வெளியேப் பார்த்தான் அவன்...

அந்த ஆட்டோவிலிருந்து யமுனாவும், நர்மதாவும் இறங்கினர்... ஆட்டோக்காரரிடம் ரூபாயை கொடுத்துவிட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.... அந்த பதிப்பகத்தின் அலுவலக அறையை நோக்கி இருவரும் நடந்துவர... யமுனாவை வைத்த கண் மாறாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ...

வந்துக் கொண்டிருந்தவர்கள் ஜன்னலை விட்டு மறைந்தனர்... அதாவது இவன் அலுவலக வாசலை அடைந்துவிட்டனர்... உடனே ஆவலோடு அவன் வாசலை பார்க்க... யமுனா பெல்ட் செருப்பு அணிந்திருந்ததால், அவள் செருப்பை கழட்டுவதற்கு முன்... நர்மதா அவள் செருப்பை கழட்டிவிட்டு அறைக்குள் வந்து இளங்கோவின் முன் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தவள்...

"அண்ணா... என்னமா ஸைட் அடிக்கிறீங்க..." என்று சிரித்துக் கொண்டே கேலி செய்தாள்...

அவளின் கேலிக்கு ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்துக் கொண்டே அவன் திரும்பவும் வாசலைப் பார்க்க... இவனை ஒரு அலட்சியப் பார்வை பார்த்துக் கொண்டே நர்மதா உட்கார்ந்திருந்த நாற்காலியின் அருகில் போட்டிருந்த நாற்காலியில் யமுனா வந்து உட்கார்ந்தாள்...

"எப்படி இருக்கீங்க அண்ணா..??" நர்மதா கேட்டதும், யமுனாவிடமிருந்து பார்வையை விலக்கினான்...

"ம்ம் நல்லா இருக்கேன்ம்மா.. நீங்க ரெண்டுபேரும் எப்படி இருக்கீங்க..??"

"எங்களுக்கு என்ன..?? நாங்க நல்லா இருக்கோம்.. அப்புறம் ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க ண்ணா..?? ஊர்ல அப்பா, பெரியண்ணா, அண்ணி, குட்டிப் பொண்ணு எல்லாம் நல்லா இருக்காங்களா..??"

"எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா.. ஊர்ல இருந்து முந்தாநேத்து தான் வந்தேன்... வந்ததுல இருந்து நிறைய வேலை... அதான் தகவல் சொல்ல முடியல... சரி என்ன சாப்டுறீங்க..??"

"நர்மதா.. நாம சாப்பிடவா வந்தோம்... நம்ம வந்த வேலை முடிஞ்சிட்டா  கிளம்பலாம்... எனக்கு ஹாஸ்டல்ல நிறைய வேலை இருக்கு..." பரபரத்தாள் யமுனா.

"அப்பா.. டீச்சர் எப்பவும் காலில் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு வராங்க... சரி ரெண்டுப்பேரும் வெய்ட் பண்ணுங்க நர்மதா.. இதோ வரேன்..." என்றவன் அலுவலக அறையிலிருந்து வெளியே வந்து அச்சகத்திற்கு உள்ளே சென்றான்.

இளங்கோ இந்த நதிகள் பதிப்பகத்தை மூன்று வருடமாக நடத்தி வருகிறான்... இந்த பதிப்பகத்தில் பொதுவாக கல்வி சம்பந்தமான பதிப்புகள் தான் பதிவிடப்படும்... இளங்கோ முன் வேலை செய்ததும் அதுபோல் ஒரு பதிப்பகத்தில் தான்... அதில் கிடைத்த அனுபவங்களும், சில ஆசிரியர்களின் நட்பும் தான் இந்த பதிப்பகத்தை அவன் ஆரம்பிக்க காரணமாயிருந்தது...

இருந்தாலும் இளங்கோவிற்கு தெரிந்தவர்கள், நண்பர்களின் தரமான கதைகள், நாவல்கள், கவிதைகளையும் புத்தகமாக வெளியிடுவான்...

எட்டு மாதத்திற்கு முன் தொழில் ரீதியாக தான் இளங்கோவை நர்மதாவும், யமுனாவும் சந்தித்தார்கள்.. இருவரும் வேலை செய்யும் பள்ளி பல கிளைகளை கொண்டது... இப்போது சமச்ச்சீர் கல்வி முறை நடைமுறையில் இருப்பதால், மாணவர்களுக்கு சில பயிற்சி புத்தகங்கள் வழியாகவும் பயிற்சி கொடுப்பதற்காக, அவர்கள் பள்ளியின் சிறந்த ஆசிரியர்களை வைத்து எழுதியதை நதிகள் பதிப்பகத்தின் மூலமாக பதிப்பிட நினைத்தனர்.

அந்த பொறுப்பை நர்மதா,யமுனாவிடம் ஒப்படைத்தனர்... அப்படித்தான் அவர்கள் நதிகள் பதிப்பகத்திற்கு சென்றனர்.. நர்மதா புதிதாக ஒருவரை பார்த்த உடனேயே அண்ணா, அக்கா என்று உறவுமுறை வைத்து  கூப்பிட்டு பழக ஆரம்பித்துவிடுவாள்...

அதேபோல்... "அண்ணா இதை எங்களுக்கு எவ்வளவு ரேட்டுக்கு முடிச்சு கொடுப்பீங்க.." என்று இளங்கோவிடம் உரிமையாக பேச ஆரம்பித்துவிட்டாள். இளங்கோவிற்கும் அந்த அணுகுமுறை பிடித்திருந்தது...

ஆனால் யமுனா எல்லோரிடமும் கொஞ்சம் ஒதுங்கி தான் இருப்பாள்... இருந்தாலும் முதல் சந்திப்பிலேயே இளங்கோ அவள் மனதில் இடம்பிடித்து விட்டதை அவளால் மறுக்க முடியாது... முதல் சந்திப்பிலேயே இவளை அவன் பார்த்த ஆச்சர்ய பார்வையும், அந்த பார்வைக்கு பதில் பார்வையாக இவள் அவனை முறைத்ததும், அவன் கண்களை சுருக்கி குறும்பாக சிரித்ததும், இவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தியது... இதுவரையிலுமே அவன் முதலில் இவளை ஏன் அப்படி பார்த்தான்..?? என்று தெரியவில்லையென்றாலும், அந்த பார்வை இவள் மனதில் அப்படியே பதிந்துவிட்டது...

அதற்கு பின் இந்த மூவரும், 2,3 முறை சந்தித்துக் கொண்டனர்... ஒருமுறை நர்மதாவோடு செல்லாமல், தனியே பதிப்பகத்திற்கு செல்லவேண்டியிருந்து யமுனாவிற்கு... அப்போது அவளை காதலிப்பதாக இளங்கோ கூறிவிட்டான்...

"இவனுக்கு என்னை பத்தி என்ன தெரியும் என்று என்னை காதலிப்பதாக கூறுகிறான்.." என்று அவளுக்கு கோபம் தான் வந்தது... எனக்கு காதல், கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை... அதைப்பற்றியெல்லாம் நான் யோசித்துப் பார்த்ததில்லை..." என்று கூறிவிட்டாள்... அவனும் அப்படி யோசிக்கும் போது, என்னை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்.." என்று சொல்லிவிட்டான்...

அடுத்தமுறை இவள் நர்மதாவோடு செனறபோது, சாதாரணமாகவே பேசினான்.. இவள் நர்மதாவிடம் அதைப்பற்றி சொன்னபோது, "அந்த அண்ணாவை பார்த்தா மோசமானவரா தெரியல... அவர் விருப்பத்தை உன்கிட்ட சொல்லிட்டாரு... நீயும் முடியாதுன்னு மறுத்துட்ட... இதுக்கப்பறும் அவர் தொல்லை பண்ணா பார்த்துக்கலாம்... நம்ம வேலை முடிஞ்சதும் அவரை பார்க்கவா போறோம்..." என்று சமாதானப்படுத்திவிட்டாள்...

ஆனால் அவர்கள் சந்திப்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருந்தது... முதலில் ஒன்றிலிருந்து ஐந்து வகுப்பு வரைக்கும் பயிற்சி புத்தகம் அச்சிட நினைத்தவர்கள், இப்போது எட்டாம் வகுப்பு வரை அதை நடைமுறைப்படுத்த நினைத்தனர்... கிளைப்பள்ளிகளுக்கும் சேர்த்து புத்தகம் அச்சிடப்படுவதால், அவர்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது...

இதில் நர்மதாவும், யமுனாவும் விரும்பி படிக்கும் கதாசிரியரின் புத்தகமும் இந்த பதிப்பகத்தில் தான் பதிப்பிடப்படுகிறது என்பதும் அவர்கள் இருவருக்கும் தெரியவந்தது... அதிலிருந்து இளங்கோவை சந்திக்கும் போதெல்லாம் இதைப்பற்றிய பேச்சுக்கள் தான் அதிகம் இருக்கும்... இந்த கொஞ்சநாள் சந்திப்பிலேயே இளங்கோவும், நர்மதாவும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர்...

இந்த கொஞ்சநாட்களிலேயே இளங்கோ மீது நர்மதாவிற்கு நல்ல மதிப்பு ஏற்பட்டிருந்தது... யாரும் ஆதரவில்லாத தன் தோழிக்கு இளங்கோ ஒரு நல்ல துணையாக இருப்பான், என்பது நர்மதாவின் எண்ணம்... அதனால் யமுனா அவளுடன் வர மறுத்தாலும், ஏதாவது சமாதானம் கூறி அவளை அழைத்துச் சென்று விடுவாள்...

இளங்கோவும் அன்று காதலை சொன்னதற்கு பிறகு, அவளை தொந்தரவு செய்ததில்லை... ஆனால் பேச்சுவாக்கில் அவனுக்கு அவள் மேல் இருக்கும் காதலையும், அவளுக்காக காத்திருப்பதையும் உணர்த்திவிடுவான்... யமுனாவிற்கும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கதான் செய்கிறது... இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டி கொள்ளமாட்டாள்... அதேபோல் நர்மதாவிடம் வரமாட்டேன் என்று மறுத்தாலும் அவனை காணவேண்டும் என்ற ஆவலில், உனக்காகத்தான் வரேன் நர்மதா.. என்று ஒரு பொய்யை சொல்லி அவளுடன் கிளம்பிவிடுவாள்...

இப்படியே இந்த மூவரும் இந்த எட்டுமாதத்தில் facebook whatsapp அடிக்கடி நேரில் சந்திப்பது என்று அவர்களின் நட்பை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.