(Reading time: 12 - 23 minutes)

28. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

குழந்தை என்பது கடவுளின் வரம் என்பார்கள்… அந்த வரம் எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடுவது கிடையாது.. அப்படியே கிடைத்தாலும், அதிலும் குறைகள், நிறைகள் ஆயிரம் எழுப்புவர்களும் உலகத்தில் உண்டு…

மகன் என்ற போர்வையிலிருந்து வெளிவந்து கணவன் என்ற ஸ்தானத்தை அடைந்திடும்போது அவனுக்கு பொறுப்புகள் கூடும் அதே வேளையில், அவனை இந்த வஞ்சக சமூகத்தில் முழு மனிதனாக, ஒரு ஆணாக அடையாளம் காட்டிடுவது தகப்பன் என்ற ஒற்றை சொல் மட்டுமே…

அந்த ஒற்றை சொல் அவனை அடைவதற்கு பத்து மாதங்கள் தன்னுள் தன்னவனின் உயிரை அவள் சுமக்கிறாள்…

சுமப்பதோடு மட்டுமல்லாமல், அதனை இந்த பூவுலகிற்கு கொண்டு வர அவள் கிட்டத்தட்ட மறுபிறவி எடுக்கிறாள்…

அதே நேரம், ஒரு பெண் தாயாக முடியவில்லை எனில், அவளுக்கு மனம் நொந்து போகும் அளவுக்கு பட்டங்கள் கொடுத்திடும் இந்த பாழாய் போன சமூகம், அந்த ஆணையும் விட்டுவைப்பதில்லை கொஞ்சமும்…

திருமணம், சுபநிகழ்ச்சிகள், கோவில், குளம், என எங்கே அந்த பெண்ணைக் கண்டாலும் அவளை வார்த்தைகளால் சாடவே ஒரு கூட்டம் அலைமோதும் அணுதினமும்…

அதற்காகவே அவள் பாவம் நாலு சுவற்றிற்குள் அடைப்பட்டுக்கொள்கிறாள் வெளி உலகத்தினையே காணக்கூடாதென்று…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவள் அப்படி மறைந்து கொண்டாலும், அதற்கும் நான்கு விதமாக கதை கட்ட நாலு பேர் உண்டு இவ்வுலகில்…

அந்த நான்கு பேருக்கும், அவள் தனக்குள் முடங்கி போவதே தங்களால் தான் என்ற எண்ணம் ஏனோ இன்றுவரை உறைத்திடாமல் இருப்பது தான் இதில் வேதனைக்குரிய விஷயமே…

பெண் அவள், வெளியிடங்களுக்கு செல்வதை, ஓரளவுக்கு குறைத்துக்கொள்ளலாம், அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்களால்…

ஆனால் ஆண்?.... அவனால் அப்படி வீடே கதி, நான்கு சுவர்களே தஞ்சம் என்று இருந்திட முடியுமா?... அதையும் மீறி இரண்டு நாள் மன நிம்மதிக்காக அவன் வீட்டில் இருந்தாலும், அவனை வசைபாட மறவாது அந்த வஞ்சகக்கூட்டங்கள் வார்த்தைகளில் நஞ்சை தடவி…

வழக்கமான டீக்கடை, காய்கறி மார்க்கெட், போகும் சலூன், சந்திக்கும் மனிதர்கள் என தினம் தினம் அவனுக்கு நெருப்பு மேடை தான் இந்த பரந்து விரிந்த உலகமதில்….

ஆணையும் பெண்ணும் சரிசமமாக நடத்த மறுக்கும் இந்த சமுதாயம், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தனது நியதிகளை தளர்த்தி, பாகுபாட்டினை மறந்து போகும் மாயங்களும் இவ்வுலகத்தில் தான் நிகழ்கிறது….

தனக்கும் மிஞ்சிய ஒரு சக்தியோ, கடவுளோ, ஒளியோ, பெயர்கள் வேறு வேறு வைத்துகொண்டாலும், அந்த வரத்தினால், அவனுக்கு தகப்பன் என்ற பெயர் கிடைத்திட்டால், அதற்காக அவன் மகிழ்ந்து கொள்ளும் வேளையே, அவனது மகிழ்ச்சியினை பொறுக்காத இந்த பொல்லா உலகம், அவனை மேலும் தண்டித்து சாகடிக்கவே நினைக்கிறது பிறந்த குழந்தையில் ஆண், பெண் என்ற பேதம் பார்த்து….

அந்த பேதத்தினை அவன் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், அவனை அவ்வாறு இருக்க விடுவதில்லை இந்த சமூகம்…

நொடிக்கொருதரம், அவனைக் காயப்படுத்தவே விழையும் கூட்டத்தின் நடுவே, அவன் உலா வந்து தான் தீர வேண்டும்… தன் மனைவிக்காகவும், பெற்ற பிள்ளைகளுக்காகவும்…

அவன் உழைத்தாக வேண்டுமே… உழைத்தால் தானே தன்னை நம்பி வந்தவளையும், தான் ஈன்றெடுத்த பிள்ளையையும் அவன் காப்பாற்ற முடியும்….

அதெல்லாம் எங்கே நாக்கில் விஷம் வைத்திருப்பவர்களுக்கு தெரியப்போகிறது?... அவர்களுக்குத் தேவை எல்லாம் அவன் மானம், மரியாதையை கெடுத்து, பல பேரின் மத்தியில் கூனிக்குறுகி நிற்க வைப்பதொன்று மட்டுமே…

அது ஒன்றே அவர்களின் பிறவிப்பயன் என்பது போல் சந்தோஷப்பட்டுக்கொள்ளும் கேவலமும் இந்த மதிப்பான உலகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது…

ஆயிரம் தடவை அவன் ஒதுங்கி போக நினைத்தாலும், அவனை நிழலாய் துரத்திடும் இந்த சமூகத்திடமிருந்து தப்பிப்பது பிரம்மப்பிரயத்தனம் தான்…

கல் நெஞ்சமாய் அவனிருந்தாலும், அதனை உடைத்தெறியவே திட்டமும் அரங்கேற்றப்படும்…

நீர்த்துளிகள் வானிலிருந்து கூர்மையாக பாறைமேல் விழும்போது பாறைக்கும் லேசாய் விரிசல் உண்டாவது இயல்பே…

எனில் சாதாரண மனிதப்பிறவி அவன், இந்த கூரான வார்த்தை பிரயோகத்தில் தப்பி பிழைப்பது மட்டும் சாத்தியமாகுமா?...

அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள்… அப்படி இருக்க, தினந்தோறும் அவன் வாங்கிடும் வார்த்தை அடிகளில், அவன் மனம் பிரண்டதை முரண் என உரைத்திட முடியுமா?...

தூபம் போட ஆள் இருக்கும்வரை அவன் பெற்ற சாபம் நீங்கப்போவதில்லை….

வெளியில் தான் துர்தூபத்தால் அவன் மாற்றப்படுகிறான் என்றால், வீட்டிற்குள்ளேயும் சில சகுனிகள் இருக்கும்பட்சத்தில், அவன் துரியோதனன் ஆவதில் விந்தை இருந்திட முடியுமா?...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.