(Reading time: 10 - 20 minutes)

18. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

என்  ஸ்வாசம் உன்  மூச்சில்.... உன்  வார்த்தை என்  பேச்சில்.......

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா......

ரு வீட்டினரும் பாலிகை தெளித்து முடித்து,  விரதம் முடியும் தருவாயில் இருந்த நேரத்தில் அனந்து தாத்தா மயங்கி விழுந்தார்.  மேடையில் இருந்த அனைவரும் பதறி அடித்து அருகில் நெருங்க, சாஸ்த்ரிகள் கடைசி மந்திரத்தை சொல்லி கட கடவென்று விரதத்தை முடித்து வைத்தார்.

ராமன் தண்ணீர் தெளித்து தாத்தாவின் மயக்கத்தை தெளிவிக்கப்  பார்க்க, அம்புஜம் பாட்டி தன் கணவரை நினைத்து அழ ஆரம்பித்து விட்டார்.  தண்ணீர் தெளித்தபின்னும் அவரது மயக்கம் தெளியாமல் இருக்க ஹரியும், கௌஷிக்குமாக சேர்ந்து தாத்தாவைத் தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். 

லக்ஷ்மியும், ஜானகியும் இங்கு அம்புஜத்தை சமாதானப்படுத்த, உலக அதிசயமாக பங்கஜமும் அம்புஜத்தை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தாள்.  சிறிது நேரத்தில் ஆசுவாசமடைந்த அம்புஜத்தை அழைத்துக்கொண்டு பத்துவின் குடும்பமும், ராமனின் குடும்பமும் அனந்து தாத்தாவை அழைத்துச்சென்ற மருத்தவமனைக்கு விரைந்தனர். 

அங்கு இவர்கள் சென்றபொழுது அனந்து தாத்தாவிற்கு உள்ளே சிகிச்சை நடக்க, வெளியே ஹரியும், கௌஷிக்கும் காரிடரை அளந்து கொண்டிருந்தார்கள்.

“ஹரி, தாத்தா எப்படி இருக்கார்டா.... டாக்டர் என்ன சொல்றார்...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“இப்போதான்ப்பா டாக்டர் வந்து பார்க்க ஆரம்பிச்சார்..... அதுக்கு முன்னாடி ரெண்டு நர்ஸ் வந்து ஏகப்பட்ட கேள்வி கேட்டுத்  தள்ளிட்டா.... எங்களுக்கு எந்த டீடைல்ஸும் தெரியலை.... நல்ல வேளை நீங்க வந்துட்டேள்..... பாட்டி நீங்க இப்போ திடமா இருக்கேளா... அந்த நர்ஸ், தாத்தாவோட previous health  history எல்லாம்  கேக்கறா....”

 “இந்தாடா ஹரி,   இந்த file-ல அவரோட health record முழுக்க இருக்கு..... எங்க போனாலும் இந்த fileலயும் தூக்கிண்டு போய்டுவோம்.... அது இப்போ நல்லதாப் போச்சு.....”, அம்புஜம் கொடுக்க, அதை வாங்கிக்கொண்ட ஹரி நர்ஸை பார்த்து கொடுக்க சென்றான்.  அடுத்த ஒரு மணி நேரம் அனைவருக்கும் திகிலுடனேயே சென்றது.  டாக்டரும், நர்ஸும் உள்ளேயும், வெளியேயும் சென்று வந்தார்கள்.  இவர்கள் கேள்வி கேட்டால், “Treatment is going on…. Wait for sometime”, என்ற பதிலே வந்தது.  பங்கஜத்திற்கு இது ரமணா படத்தில் வந்த ஆஸ்பத்திரியோ, ட்ரீட்மெண்ட் எதுவும் செய்யாமல் பாவ்லா மட்டும் காட்டுகிறார்களோ, என்ற சந்தேகம் வந்துவிட்டது.  அதற்கேற்றாற்போல் இரு முறை நர்ஸ் வரும்போது, ‘பணம் என்னடா பெரிசு..... எத்தனை செலவானாலும் பரவாயில்லை... அவர் பொழைச்சு என்னை அம்புன்னு கூப்பிட்டா போறும்’, என்று  அம்புஜம் பெரும் குரலில் பிலாக்கணம் வைக்க..... பங்கஜத்தின் சந்தேகம் வலுபெற்றது. 

வாயை மூடிக்கொண்டிருக்காமல் தன் சந்தேகத்தை அவர் அவரின் லௌட் ஸ்பீக்கர் குரலில் வெளியிட, அதைக்கேட்ட நர்ஸ் தங்கள் மருத்துவமனை எத்தனை புகழ் வாய்ந்தது என்று ஒரு பெரிய பிரசங்கம் செய்ய, அதற்கு இவர்கள் எப்படி புகழ் அடைந்தார்கள் என்று தெரியாதா என்று பங்கஜம்  பதில் கொடுக்க, சிறிது நேரம் நர்ஸுக்கும்,  பங்கஜதிற்கும் நீயா நானா போட்டி நடைபெற்றது.

ராமனும், பத்துவும் இருவருக்கும் சமாதானம் செய்து விலக்கிவிட்டார்கள்.  மேலும் ஒரு அரை மணி கடக்க, டாக்டர் அனந்து இருந்த ரூமிலிருந்து வெளியில் வந்தார்.

“நீங்கதான் பேஷன்ட் கூட வந்தவங்களா.... நீங்க அவருக்கு என்ன வேணும்...”

“அவர் என்னோட உறவினர் டாக்டர்... இவங்கதான் அவரோட மனைவி....”, அம்புஜத்தை ராமன் டாக்ரிடம் அறிமுகம் செய்து வைத்தார். 

“ஏம்மா உங்க வீட்டுக்காரர் இந்த ரெண்டு மூணு நாளா என்ன சாபிட்டாரு ..... ஷுகர் லெவல் தாறுமாறா ஏறி இருக்கு.....”

“நாங்க ஆத்துல  சமைக்கறதுதான் டாக்டர் சாப்பிட்டார்.  கோவில் தவிர எங்கயுமே வெளில போகலையே”, அம்புஜம் சொல்ல, தாங்கள் கோவில் என்று சொல்லி ஒரு ஒரு நாளும் வித வித இடங்களில் சுற்றி அளவில்லாமல்  வெளியில் சாப்பிட்டது எல்லாம் சக்கரம் சுத்தியபடியே பரசுவுக்கு நினைவில் வந்தது.  அதுவும் அனந்து இந்த மூன்று நாட்களாக லாலாக்கடையில் இருப்பதை விட அதிக அளவில் இனிப்பை வயிற்றிற்கு வாரி வழங்கியது சமயா சமயம் இல்லாமல் ஞாபகத்திற்கு  வந்து அவரைக் கலவரப்படுத்தியது.  கூடவே ஒரு பக் பக் உணர்வும்.  இன்று அனந்து, நாளை தானா... ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் ஷுகர்பகவான் எங்கே வக்ர ஸ்தானத்திற்கு சென்று படுக்க  வைத்துவிடுவானோ என்று.....

“டெஸ்ட் ரிசல்ட் பார்த்தா அப்படித் தெரியலையேம்மா..... இப்போ இன்ஜெக்ஷன் போட்டு சுகரை நார்மல் லெவல்க்கு கொண்டு வந்துட்டோம்.  ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு...... இன்னும் ஒரு இரண்டு மணிநேரம் கழிச்சு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டலாம்..... ஆனா இனிமே சாப்பாட்டுல கொஞ்சம் கவனமா இருங்க......”

“கண்டிப்பா டாக்டர்...... இனிமே அவரை எங்கயும் தனியா வெளில அனுப்பலை.... கல்யாணத்துல கூட ரொம்ப எல்லாம் சாப்பிட விடலை”

“அதுக்குன்னு ஒரேயடியா அவரை பட்டினி போட்டுடாதீங்க..... அப்போ அப்போ கொஞ்சம் கொஞ்சமா நல்ல ஹெல்த்தி உணவா கொடுங்க..... கல்யாணம்.... ஓ பக்கத்து மண்டபத்துல உங்க வீட்டுக் கல்யாணம்தான் நடக்குதா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.