(Reading time: 10 - 19 minutes)

பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.  ஸ்வேதாவும், ஹரியும் அவர்களின் மாமாக்களின் தோள்களில் ஏறிக்கொண்டு ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர்.   ஹரி வெகு சுலபமாக மாலையைப் போட, ஸ்வேதா ஹரிக்கு மாலையைப் போடுவதற்குள் தவித்துப் போய் விட்டாள்.  கௌஷிக் தன் தங்கை கஷ்டபடுவதைப் பார்த்து அவளை ஒரே தூக்காகத் தூக்கி அவளை ஹரியின் கழுத்தில் மாலை போட வைத்தான். 

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை

ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட

அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்

மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்

என்று கல்யாணத்திற்கு வந்திருந்த ஹரியின் மாமா பெண் அழகாக பாடினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அடுத்ததாக ஊஞ்சல் வைபவம்.  இந்த ஊஞ்சலின் ஆட்டத்தைப் போல் வாழ்வின் சுக துக்கங்களில் இணைந்திருப்போம் என்று கூறி ஊஞ்சலில் அமர்ந்தனர்.  முதலில் ஹரி மற்றும் ஸ்வேதாவின் அம்மாக்கள் பால், பழம் கொடுக்க பின்னர் வரிசையாக இரு வீட்டுப் பெரியவர்களும் ஒவ்வொருவராக வந்து பாலும், பழமும் கொடுத்தனர்.

இப்பொழுது அடுத்த ட்விஸ்ட்,  நம்ம அம்பு பாட்டி  அவரின் தேன்  மதுரக் குரலில்

ஆடீர் ஊஞ்சல்  ஆடீர் ஊஞ்சல்

விந்தை நிறை செம்பவழ கால்கள் நாட்டி

விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கை பூட்டி

அந்தமுள்ள நவ ரத்ன ஊஞ்சல் மீதே

அபிமனுவுடன் வத்சலையும்

ஆடீர் ஊஞ்சல் ஆடீர் ஊஞ்சல்.....  என்று ஊஞ்சல் பாட்டைப் பாட இதற்கு பங்கு பாட்டி

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் மன மஹிழ்ந்தாள்

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் மன மஹிழ்ந்தாள் கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

காஞ்சன மாலை மன மஹிழ்ந்தாள்

பொன்னுஞ்சலில் பூரித்து  பூஷணங்கள் தரித்து

ஈஸ்வரனரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்......என்ற  எசப் பாட்டை பாடினார்.

அதன் பின் எந்தக் கண்ணேறும் வராமல் இருக்க வண்ண சாத உருண்டைகளை வைத்து திருஷ்டி சுற்றினர்.

 இன்று முதல் ஈருடல் ஓருயிராக இருப்போம் என்று கூறி ஹரி, ஸ்வேதாவின் கையைப் பிடித்து மணவறைக்கு அழைத்து சென்றான்.  ஸ்வேதாவிற்கு முஹூர்த்த புடவையை கொடுக்க, அதை உடுத்தி வர கௌரியுடன் சென்றாள்.

“இந்த சாஸ்த்ரிகள் அத்தனை நேரம் இல்லாத கதை எல்லாம் பேசுவா.... ஆனா மடிசார் கட்டிக்க மட்டும் எப்பவும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல கொடுக்க மாட்டா... எல்லாக் கல்யாணத்துலயும் இதேக் கதைதான்.  பேசாம மாபிள்ளைக்கு பஞ்ச கச்சத்தை கார்த்தாலையே கட்டி விடறா  மாதிரி பொண்ணுக்கும் பண்ணிடலாம்..... டைமானும் கிடைக்கும்....”, கௌரியின் புலம்பல்களுக்கிடையில் அவளிற்கு பிடித்தமான மாந்துளிர் மடிசாரில் அம்சமாக ரெடி ஆனாள் ஸ்வேதா.

புடவைக் கட்டி மேடைக்கு வந்த ஸ்வேதாவைப் பார்த்த ஹரியால் அவளிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.....  சாஸ்த்ரிகள் இரு முறை அவனைத் தட்டி ‘அம்பி பூலோகத்திற்கு வாடாப்பா’,  என்று கூட்டி வந்தார்....

சபையோரை நமஸ்கரித்து ஸ்வேதா பத்துவின் மடியில் உட்கார, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக கெட்டி மேள சத்தத்துடன்  ஸ்வேதாவின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டினான் ஹரி.

இப்பொழுது சாஸ்த்ரிகள் பாடுதான் திண்டாட்டமாக போய்விட்டது.  சப்தபதி முடியும்வரை அவர்களுக்கு யாரும் கை கொடுக்காதீர்கள் என்று பிடித்து வைப்பதற்குள் வன்பாடு பட்டுப் போய்விட்டார்.

ஹரி ஸ்வேதாவின் வலது கையை கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை சுற்றி, அங்கிருந்த அம்மிக்கல்லில் ஸ்வேதாவின் காலைப் பிடித்து ஏற்றி மகாவிஷ்ணுவிடம் அவளின் உணவு, வலிமை, பக்தி, சந்ததி, செல்வம், பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில் துணை நிற்குமாறு வேண்டினான்.

அதன் பின் அருந்ததி பார்த்து அனைத்துப் பெரியவர்களிடமும் தனித்தனியாக ஆசி வாங்கினர் ஹரியும், ஸ்வேதாவும்.  அனைவரும் உணவுண்ண செல்ல இளையவர்களின் ஆட்டம் ஆரம்பித்தது.  ஹரியையும், ஸ்வேதாவையும் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள சொல்லி கலாட்டா செய்தார்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.