(Reading time: 11 - 21 minutes)

 08. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame 

வைதேகியிடமும் லக்ஷ்மனனிடமும் விடைபெற்று அந்த காரில் ஏறிய வர்ஷினியின் மனம் அவளுக்கு முன்பாகவே ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தோழியை அரை நொடியில் சென்று பார்த்துவிட மாட்டோமா என நினைத்து தவித்தது.  அவளுக்கு ப்ரியாவின் வீட்டில் நடந்தது எதுவுமே தெரியவில்லை, பவானியாக அழைக்கும்வரை.

ப்ரியாவிற்கு நடக்கவிருக்கும் நிச்சயத்தையும், அதற்கடுத்து நடைபெறவிருக்கும் திருமணத்தையும் பற்றிக் கூறியவர், அவளையும், அவளது பெற்றோரையும் கண்டிப்பாக திருமணத்திற்கு வருமாறு அழைத்து, ஃபோனில் அழைப்பதற்காக பெரிதும் வருந்தினார்.  திவ்யா, யாதவ் மற்றும் ப்ரனிஷையும் அழைக்க வேண்டுமென அவர்களது நம்பரையும் பவானி வாங்கிவிட்டு வைத்தபின், ஒரு கால் பறந்தது ப்ரியாவின் மொபைலுக்கு, வர்ஷினியிடமிருந்து.  ஆனால், தொடர்பே கிடைக்கவில்லை.  எவ்வாறு கிடைக்கும்?  ப்ரியாதான் தன் கோபம் முழுவதையும் அந்த கைப்பேசியில் காட்டி அதனை வைத்து ஸ்குவாஷ் விளையாடியிருந்தாளே!

விரைவில் வர்ஷினிக்கு அழைப்பு வந்தது, யாதவ் மற்றும் ப்ரனிஷிடமிருந்து கான்பிரன்ஸ் காலாக.  அவர்கள் இருவரும் நம்பும்படியான விளக்கத்தைக் கூறினாள் வர்ஷினி.  அவளுக்கே முழுதாக எதுவும் தெரியாதபோது என்னவென்று சொல்வாள் அவள்?

ப்ரியாவின் நிச்சயம் முடிந்த சில நாட்களிலேயே திருமணம் என்பதால், அன்றே செல்வது என தீர்மானித்தது அந்த மூவர் கூட்டணி.  வர்ஷினிக்கும் அவளுடன் இருக்க வேண்டும் என்று தோன்றிடவே, உடனே ஒத்துக்கொண்டாள்.  யாதவும் வர்ஷினியும் ஒரு காரில் சென்னையில் இருந்து வர, ப்ரனிஷ் ஒரு காரில் அவர்கள் பாதி தூரம் வந்ததும் கிளம்புவதென்றும், பொதுவான ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாக பயணம் செய்வதென்றும் முடிவாயிற்று.

“என்னப்பா… எங்ககூட அக்காவ பாக்க வரேன்னு சொல்லிட்டு இப்போ?” துணிகளை பையினுள் அடுக்கிக்கொண்டிருந்த ப்ரனிஷிடம் கேட்டார் பார்த்தவி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ஒரு முக்கியமான வேலைம்மா.  நீங்க போய்ட்டு வாங்க.  நான் அக்காவ கேட்டேன்னு சொல்லிடுங்க” என்று பதில் கூறிவிட்டு அனைத்தையும் சரிபார்க்க தொடங்கினான்.

“ஓஓஓ…” என்று சுரத்தே இல்லாமல் ஒலித்த பார்த்தவியின் குரலிலேயே அவனுக்குப் புரிந்தது, அவருக்கு அவனையும் அழைத்துச் செல்லவே விருப்பம் என்று.  அதை உணர்ந்தவன், பையை மூடிவைத்துவிட்டு, “அம்மா” என்றழைத்து அவரை கட்டிலில் அமர்த்தி, தானும் அருகே அமர்ந்து கொண்டான்.

“ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி விட்டுப்போன உறவை புதுப்பிக்க இப்போ ஒரு வழி கிடைச்சுருக்கு.  அதை நான் தவற விட்டுட்டா, அடுத்த வாய்ப்பு கிடைக்காமையே போய்டலாம்.  சோ, இப்ப எனக்கு அந்த வேலையை செய்வது அவசியம் அம்மா.  15 நாளில் நான் அங்கே வருவேன்னு அக்காவிடம் சொல்லிடுங்க”

“நீ சொல்றத வெச்சு பார்த்தா…” என இழுத்தார் பார்த்தவி.

“ஆமாம்மா.  நான் அங்கே போகப்போறேன்” என்றவனை, “வேண்டாம்” எனக் கூறி தடுத்துப் பார்த்தார் பார்த்தவி.

“அங்கே நான் போயே தீரனும்.  இத விட்டா சேன்ஸ் கிடைக்காதும்மா.  ப்ளீஸ்ம்மா” என்று இன்னும் பலவாறு பேசி ஒருவழியாக அவனது அம்மாவை சமாதானப்படுத்தி கிளம்பினான்.

தாய் கலங்கி நிற்க, தந்தை தைரியம் கூற, விடை பெற்றான் அவன், தான் நினைத்தது எல்லாம் இனிதே நிறைவேற அந்த இறைவனை வேண்டிக்கொண்டு.  ஆனால், அவனுக்கு எவ்வாறு தெரியும், அங்கே அவனுக்காக விதி வேறொரு அத்தியாயம் எழுத காத்திருப்பது?

ருள் கவிழ்ந்த அந்த அறையில் நிசப்தத்தைக் கிழித்து ஒரு குரல் மெலிதாக ஒலித்தது.  ஒரு நிமிடம்… அது குரல் அல்லவே!  சரியாக சொல்வதென்றால், விசும்பல்.  ஆம்.  அதனை விசும்பல் எனச் சொல்வதுவே சரியாக இருக்கும். நீண்ட நேரமாக தொடர்ந்த அழுகை தன் வீரியத்தைக் குறைத்து தற்போது விசும்பலாக மாறியிருக்கிறது.

தாயிடம் சரியென்று மனமே இல்லாமல் சொல்லி வந்தவளால் தனதறைக்கு வந்தவுடன் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.  அதுவும், அவள் கட்டிலில் வைத்துவிட்டு சென்றிருந்த அந்த மடிக்கணினியையும் அதில் அவள் ஓபன் செய்துவிட்டு சென்றிருந்த மின்னஞ்சலும் அவள் கண்ணில் பட்டதும் இன்னும் அதிகமாக ஒலித்தது.  அது வந்ததிலிருந்து எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாள்?  எத்தனை முறை அதனை தடவிப் பார்த்திருப்பாள்?

நேற்று அந்த ஈமெயில் வந்ததும் அவள் அதனைப் பார்த்து மகிழ்ந்ததென்ன?  இப்போது அதையே பார்த்து மனம் நோவதென்ன?  இதுவரை அவள் கஷ்டப்பட்டது இதற்காகவன்றோ?  எல்லாமே எட்டாக் கனியாகிவிடுமோ?

அவள் கொண்டிருந்த நம்பிக்கை எல்லாம் அடியோடு சாய்ந்திருந்தது இப்போது.  எப்போதுமே தந்தையிடம் சிறிது ஒதுங்கியே நிற்பாள் அவள்.  அவர் காட்டிய ஒதுக்கம் அவளை அவ்வாறு இருக்கச் செய்தது.  அதனால், தனக்குத் தேவையானவற்றை தாயின் மூலமாகவே நிறைவேற்றிக்கொள்வாள்.  இன்று அந்த தாயும் தன் கணவனுடன் நிற்க, தனியே நின்றாள் ப்ரியா.

ஒரு வேளை, இந்த ப்ரமோஷன் வராமல் இருந்திருந்தால் அவளும் மனமுவந்து ஒத்திருப்பாளோ என்னமோ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.