(Reading time: 16 - 32 minutes)

‘யாராக இருக்கும் என ஒரு நொடி யோசனை. ஒரு வேளை ஸ்ரீநிவாசனாக இருக்குமோ மறுநொடியில் அடுத்த எண்ணம். ஆனாலும் அழைப்பை ஏற்கவில்லை அவன். அப்பாவின் நினைவுகளிலிருந்து வெளி வர கொஞ்சமும் விரும்பவில்லை.

மறுபடியும் அப்பாவுக்குள்ளேயே மூழ்கி கரைந்து... சில நிமிடங்கள் கழித்து மறுபடியும் அழைப்பு. அதே எண். ஏற்கவில்லை அவன்.

‘‘இல்லை எனக்கு யாரும் வேண்டாம் இந்த பூமியில். அப்பாவின் நினைவுகள் மட்டுமே போதும்.’

நிமிடங்கள் கரைய மறுபடியும் அழைப்பு.. இப்போது இவன் மனமும் கொஞ்சம் கரைகிறது. இருப்பினும் அவன் இப்படியே அமர்ந்திருக்க ஒலித்து நின்று விட்டது கைப்பேசி

‘பாவம் அது ஒரு குழந்தை. அதன் மனதை எதற்கு காயப்படுத்துவதாம்??? எடுத்து வாழ்த்து மட்டும் சொல்லிவிடலாம்..’ இப்போது தோன்றுகிறது அவனுக்கு..  

வேண்டாம் யாரும் வேண்டாம் எனக்கு என்று ஒரு பக்கம். பாவம் அந்த பிஞ்சு மனம் என்று ஒரு பக்கம். பல நூறு எண்ண அலைகள் அடிக்க ஒரு கட்டத்தில் விரல்கள் அந்த எண்ணை அழைத்தும் விட்டது. இது அவன் எண்தானா மனம் இப்போது யோசிக்க அதற்குள் மறுமுனையில் ஏற்கப்பட்டது அழைப்பு.

‘ஹலோ... விவேக் அங்கிள்..’ ........ ஸ்ரீனிவாசன் உற்சாகமாக கூவினான் மறுபுறம்.

‘ஏனடா ஏன் எனக்காக இப்படி தவிக்கிறாய்??? நிஜமாகவே என்ன பந்தமாம் இது???.’ அவனது அன்பில் தோற்றுப்போனதால் ஒரு சின்ன புன்னகை எழுந்தது விவேக்கின் முகத்தில்.

‘மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ்டா கண்ணா..’ என்றான் இதமாக.

‘தேங்க் யூ அங்கிள்... ஈவினிங் வரீங்களா அங்கிள்...’

‘ஸ்ரீனிவாசா... நான் நேத்தே சொன்னேன்தானே. பிடிவாதம் பிடிக்க கூடாது. நீ நல்லா என்ஜாய் பண்ணு சரியா..’ சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான் விவேக். கைபேசியை அணைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டான் மறுபடியும்.

‘அப்பா!!!’ ‘எனக்கு வேறெதுவும் வேண்டாம். அப்பா மட்டுமே வேண்டும். அவர் என் கண் முன்னாலே வரவேண்டும்’  குழந்தை போல் தவித்தது அவன் மனம்.

நிமடங்கள் கரைய ஏதோ ஒரு கரம் அவன் தலை வருடுகிறது. சட்டென அவன் கண் திறக்க அங்கே நின்றிருந்தார் அப்பா!!! அவன் அப்பா!! ஸ்ரீனிவாசன்!!! அவரேதான்!!!

‘என்னடா கண்ணா???’ புன்னகை ஆடும் அவர் முகம் அவன் அருகில்

‘அப்பா... அப்பா...  அப்பா வந்துடீங்களாபா???”

‘ஆமாம் நான் வந்திட்டேன். சரி நீ என்ன பண்ணிட்டு இருக்கே??? உனக்கென்ன அவ்வளவு பிடிவாதம் அந்த பையன்தான் அவ்வளவு பாசமா உன்னை கூப்பிடறான் இல்ல. போயிட்டு வாடா’ அப்பாவின் அதே அதட்டலான தொனி.

‘பா.. எனக்கு.. நீங்க மட்டும் போதும்... அவங்க எல்லாம் வேண்டாம்..’

‘டேய்... முதல்லே கிளம்பு...அங்கே போகாம எப்படி நீ தாமோதரனை பாக்குறது???’

‘தாமோதரனா??? யாருப்பா.. அது ..’

.................................

‘அப்பா... அப்பா... எங்கேபா இருக்கீங்க??? அப்பா..’ காணவில்லை அவரை.

‘அப்பா!!!’ திடுக்கென கண் திறந்தான் விவேக். கனவா??? அப்பா வந்தது கனவிலா??? உயிர் வரை பதறிய பதற்றம் குறைய சில நிமிடங்கள் பிடித்தது அவனுக்கு.

‘வரவில்லையா??? அப்பா நிஜமாக வரவில்லையா??? தளர்ந்துதான் போனது உள்ளம். ஒரு சில நொடிகள் பெருமூச்சுடனே கழிந்தது.

பின்னர் நேரம் பார்த்தான். மதியம் பன்னிரண்டு.

‘எப்படி உறங்கிப்போனேன்???’ புரியவில்லை அவனுக்கு. கைகெட்டும் தூரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென பருகினான் விவேக். அந்த கனவு மறுபடியும் மனதில் ஓட

‘முதல்லே கிளம்பு...அங்கே போகாம எப்படி நீ தாமோதரனை பாக்குறது???’ கனவில் அப்பா சொன்னது நினைவு வர ‘தாமோதரனா??? யாரந்த தாமோதரன் கேள்வி பிறந்தது அவனுக்குள்ளே!!!

நேற்று மதியம் மும்பை விமான நிலையத்தில் அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வந்ததே ஒரு அழைப்பு. 'நான் தாமோதரன் பேசறேன்..' என்றாரே ஒரு வயதான மனிதர். காரணமே இல்லாமல் நினைவுக்கு வந்தது அவனுக்கு. தலையை குலுக்கிக்கொண்டான் அவன்.

தே நேரத்தில் அங்கே அந்த ஹோடேலில் ஹரிணியின் கைபேசிக்கு ஐந்தாவது முறையாக வந்தது சுஹாசினியின் அழைப்பு.

‘அப்பாவை என்கிட்டே பேச சொல்லேன். ஏன் இப்படி பண்றார்.. ப்ளீஸ்... ஹரிணி.. அவரை எப்படியாவது கூட்டிட்டு வா ’

காலையிலேயே பேருந்து நிலையத்திலிருந்து அவரை தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறைக்கு அழைத்து வந்திருந்தாள் ஹரிணி.

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு இறுக்கமான பாவத்துடன் அமர்ந்திருந்தார் தாமோதரன்.  ‘இத்தனை நாள் இல்லாத பாசம் இப்போது என்னவாம்???’

‘நான் யார்கிட்டேயும் பேசற மாதிரி இல்லை. எங்கேயும் வர மாதிரியும் இல்லை.’ காலையிலிருந்து இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.