(Reading time: 4 - 7 minutes)

குட்டிக் கதைகள் – 77. எதிரியையும் நேசி

ரு ஊரில் ராமு என்றொரு சிறுவன் இருந்தான். அவன் நன்றாக படிப்பவன், பெற்றோர் சொல் கேட்பவன், எல்லோரிடமும் அன்பாக இருப்பவன். மொத்தத்தில் மிகவும் நல்லவன்!

  

பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்குமே ராமுவை மிகவும் பிடிக்கும்.

  

இது மற்ற சில சிறுவர்களுக்கு பொறாமையை கொடுத்தது.

  

ராமு படித்த அதே வகுப்பில் சோமு என்றொரு மாணவன் இருந்தான். அவன் பெற்றோர் பேச்சை கேட்டு நடப்பதில்லை, படிப்பிலும் சுமார் தான். அது மட்டுமல்லாமல் மற்ற மாணவர்களை கேலி, கிண்டல் செய்து காயப் படுத்துவது அவனின் பொழுதுபோக்கு.

  

சோமுவிற்கு ராமுவை சுத்தமாக பிடிக்காது. அதனால் எப்போதுமே ராமுவை நோகடிக்கும் வண்ணம் கிண்டலடித்துக் கொண்டே இருப்பான்.

  

ஆனாலும் ராமுவின் மதிப்பெண்கள் உயர்ந்துக் கொண்டே போனதே தவிர சற்றும் குறையவில்லை.

  

இதனால் தொடர்ந்து படிப்பு, விளையாட்டு, குணநலன் என அனைத்திற்காகவும் ராமுவையே எல்லோரும் பாராட்டினார்கள்.

  

ராமுவின் பிறந்த நாளிற்காக அவனுடைய பெற்றோர் ஒரு அழகிய பேனாவை பரிசாக கொடுத்தார்கள். ராமுவிற்கு அந்த பேனா மிகவும் பிடித்துப் போனது. அதனால் வகுப்பில் நோட்ஸ்களை எழுதுவதற்க்காக அதை கொண்டு வந்தான்.

  

ராமுவின் கையிலிருந்த அந்த பேனாவை பார்த்து சோமு பொறாமைப் பட்டான். அவன் ராமுவிடம், “இந்த பேனா எங்கிருந்து கிடைத்தது?" என்றுக் கேட்டான்.

  

ராமுவும், "இது என் பெற்றோர் எனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தார்கள்." என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

  

சோமுவின் பொறாமை அதிகமானது. அவன் சொன்ன சொல் பேச்சு கேட்டு நடக்காததால் அவனுடைய பெற்றோர் அவனின் பிறந்தநாளுக்கு பரிசு எதுவுமே வாங்கித் தரவில்லை.

  

பொறாமையினால் பொசுங்கிய சோமு, ராமுவின் பேனாவை திருடி எடுத்துக் கொள்ள முடிவு செய்தான்.

  

இன்டர்வலின் போது ராமு உட்பட அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியே செல்லவும், சோமு ராமுவின் பையிலிருந்த பேனாவை எடுத்து தன் பைக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான்.

  

ராமு திரும்பி வந்து பார்த்தப் போது பேனாவை காணவில்லை. அவன் அதைப் பற்றி தனது வகுப்பு ஆசிரியரிடம் சொன்னான்.

  

காணாமல் போன பேனாவுக்கான தேடல் தொடங்கியது. வகுப்பு ஆசிரியர் வகுப்பிற்குள் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் பையையும் தேடும்படி கிளாஸ் லீடரிடம் உத்தரவிட்டார். காணாமல் போன பேனா சோமுவின் பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியருக்கு கோபம் பொங்கியது.

  

“சோமு, ராமுவின் பேனா உன் பையில் எப்படி வந்தது?” என்று உறுமினார்.

  

மாட்டிக் கொண்ட சோமு பயத்தில் கண்ணீர் விட்டு அழுதான். என்ன சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

  

சோமு அழுவதைப் பார்த்து ராமுவிற்கு பாவமாக இருந்தது.

  

ராமு எல்லோரிடமும் அன்பானவனாக இருக்க தான் விரும்பினான். அவனுக்கு சோமுவின் மீது இப்போதும் கோபம் தோன்றவில்லை.

  

அதனால் பேனா கிடைத்து விட்டதால், சோமு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தனது வகுப்பு ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டான்.

  

இது சோமுவின் கண்களைத் திறந்தது. ராமு எவ்வளவு நல்லவன் என்பதை அவனால் இப்போது பார்க்க முடிந்தது.

  

சோமு மனம் வருந்தி ஆசிரியர் மற்றும் ராமுவிடம் மன்னிப்புக் கேட்டான்.

  

அன்று முதல், சோமு ராமுவின் நண்பனாக மாறினான். படிப்படியாக தன்னையும் ராமு போல நல்லவனாக மாற்றிக் கொண்டான்.

  

எல்லோரும் சோமுவையும் இப்போது நேசிக்கத் தொடங்கினார்கள். ராமு தன் புதிய நண்பனைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டான்.

  

கருத்து:

  

சோமுவால் பாதிக்கப் பட்டிருந்தாலும், ராமு பதிலாக அன்பை மட்டுமே கொடுத்தான். நாமும் நம் எதிரிகளிடம் அதுப் போல தான் நடக்க வேண்டும். நம் நடத்தை, அவர்களையும் ஒரு நாள் நல்லவர்களாக மாற்ற வழி வகுக்கலாம்.

  

யாராவது உங்களுக்கு தீங்கு செய்தாலும், பதிலுக்கு பதில் அவருக்கு தீங்கு செய்யாதீர்கள்!

  

அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.