(Reading time: 3 - 6 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - மாணவர்களுக்கு சுந்தர் பிச்சையின் அறிவுரை

லகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து உலகில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த 2020-ம் ஆண்டுடன் பட்டம் பெற்று கல்லூரியை முடிக்கும் மாணவர்களின் புதிய தொடக்கத்தைக் கொண்டாடும் Commencement விழாக்கள் அமெரிக்காவில் பிரபலம். ஆனால், கொரோனாவால் இதுவும் இணையம் மூலமே நடத்தப்பட வேண்டியதாகிவிட்டது. யூடியூப் நடத்திய `Dear Class of 2020' விழாவில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா, அவரின் மனைவி மிச்சேல் ஒபாமா, பாடகி லேடி காகா, பாடகர் பியான்ஸே, தென்கொரிய இசைக் குழு பிடிஎஸ், கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுந்தர் பிச்சை தனது வீட்டிலிருந்தவாறு இந்த வருடம் பட்டம் பெறும் மாணவர்களிடம் உரையாற்றினார். அதில் அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, `நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு என் தந்தை தனது ஒரு வருடச் சம்பளத்தையும் எனது விமானப் பயணச் சீட்டிற்காக மட்டும் செலவழித்தார். அதுதான் எனது முதல் விமானப் பயணமும் கூட. அப்போது அமெரிக்கா செல்வதற்கு அதிகம் செலவானது. அப்போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றால் 2 டாலர் செலவாகும்.

என்னுடைய தோல் பையின் விலையும் என் அப்பாவின் மாதச் சம்பளமும் ஒன்றாக இருக்கும். நான் வளரும்போது இணையமும் தொழில்நுட்பமும் இன்று போல் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. எனது பத்தாவது வயதில்தான் தொலைபேசியே எனக்கு முதலில் அறிமுகமானது. பிறகு அமெரிக்காவில் பட்டப்படிப்பு படிக்கும்போதுதான் கணினியைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. தொலைக்காட்சி வந்தபோது அதில் ஒரே ஒரு சேனல் மட்டுமே இருந்தது. ஆனால், இன்றைய குழந்தைகள் எல்லா வகையான கணினிகளையும் எளிதாகப் பயன்படுத்துகின்றனர்" என்றார்.

``இந்தக் கொரோனா லாக்டௌன் நேரத்தில் தங்களது கனவுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பற்றி இந்தாண்டு கல்லூரி மாணவர்கள் கவலை அடையலாம். இப்போது வெளிப்படைத்தன்மையுடனும், நம்பிக்கையுடனும் இருந்தால் அவர்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவார்கள். இதற்கு முன் 1920-ம் ஆண்டு ஏற்பட்ட தொற்று, 1970-ல் வியட்நாம் போர், 2001-ல் நடைபெற்ற 9/11 தாக்குதல் ஆகியவற்றைக் கடந்துதான் மாணவர்கள் சாதித்திருக்கிறார்கள். அதனால் நம்பிக்கையுடன் இருங்கள்" என்றார்.

இறுதியாகச் சுந்தர் பிச்சை மாணவர்களுக்குத் தெரிவித்த செய்தியில் ``உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே செய்யுங்கள். மற்றவர்களுக்காக ஒருபோதும் உங்கள் செயல்களை மாற்றாதீர்கள். அதுதான் எதிர்கால வெற்றிக்கான வழியும் கூட" என்றார்.

    

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.