(Reading time: 3 - 6 minutes)
Chillzee WhatsApp Specials
Chillzee WhatsApp Specials

Chillzee WhatsApp Specials - மாடுகள்  எப்போது உறங்கும்?

மாடுகள்  எப்போது உறங்கும்?

 

"பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறேன்...

 

 பல பிரச்சனைகள்...

 

வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில்,  வேலை செய்யும் இடத்தில் என பிரச்சினை, பிரச்சினை, பிரச்சனை... ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது...

தூங்கமுடியவில்லை...

 

எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி"

 

என்றவாறே  அந்த முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.

 

அப்போது மாலை நேரம்.

 

முனிவர் அவனிடம்  "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்.

 

சென்றவன் திரும்பி வந்து... "100 மாடுகள் இருக்கும் சாமி... எல்லா மாடுகளும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.

 

"நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன்... நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துலயே இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்... 100 மாடுகளும் படுக்கணும்... அதுதான் முக்கியம். சரியா? இந்த வேலைய முடிச்சுட்டு காலையில் திரும்பி வா..." என்றார்.

 

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு...  கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன்  திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை ..." என்றான்.

 

"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்...

 

"100 மாடுகளையும் படுக்க வைக்க படாதபாடுகள் பட்டும் முடியவில்லை...

 

சில மாடுகள் தானாகவே தரையில் படுத்துவிட்டன...

 

சில மாட்டை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்...

 

ஆனால் அனைத்து மாட்டையும் படுக்கவைக்க முடியவில்லை.

 

சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..

 

அனைத்து மாட்டையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை... சாமி!

 

அதனால நான் தூங்குவதற்கு  போகவே இல்லை. இரவு முழுவதும் தூங்கவும் இல்லை!" என்றான்.

 

முனிவர் சிரித்தபடியே...

"இதுதான் வாழ்க்கை.! வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது...!

 

சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்... சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்... ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிதாக எழலாம்...

 

அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது...

 

பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே...

 

 தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கடவுளின் கைகளில் அல்லது காலத்தின் ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு...

 

உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்!" என்றார்.

 

முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம்  "சில மாடுகள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.

 

வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு மாடுகள் போன்றது...

 

அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே.

 

ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...

 

அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.. 

 

ஆகவே சிலவற்றை  காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்.

 

வாழ்வு பிரச்சனையாக இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மனம்தான் காரணம்...

சூட்சுமத்தை புரிந்து கொண்டால் சுகமாய் வாழலாம்...

 

அறிவோம்...

தெளிவோம்...!

 

வாழ்க வளமுடன்...

Do you have a WhatsApp message to share with Chillzee Readers? Send it to ‪+19085470867‬

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.